TMP Explained: #Coronavirus வைரஸ் தொற்றுக்கு பெண்களை விட ஆண்கள் அதிகமாக உயிரிழப்பு ஏன்…?

Read Time:5 Minute, 21 Second

கொரோனா வைரஸ் தொற்று வெடிப்பு ஏற்பட்டதுமே பெண்களைவிட ஆண்கள் எளிதாக தாக்குதலுக்கு இலக்காகுகிறார்கள் என்ற தகவல் வெளியானது.

பிப்ரவரி மாதம் இறுதியில் சீன ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வு முடிவு ஒன்று வெளியாகியது. கொரோனா வைரஸ் முதல்முதலாக காணப்பட்ட உகான் பகுதியில் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பாக பகுப்பாய்வு செய்யப்பட்டு தகவல் வெளியிடப்பட்டிருந்தது. அதில், அங்கு கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட ஆண்கள் இறப்பு விகிதம் 2.8% சதவிதமாக இருந்தது. இதுவே பெண்களுக்கு 1.7% ஆக இருந்தது என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அடுத்த சில வாரங்களில் நோய்தொற்றின் தாக்கம் உலகம் முழுவதும் பரவியது. வைரஸ் பரவல் காணப்பட்ட இத்தாலி, ஈரான், தென் கொரியா, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா வைரஸ் தாக்குதல் தொடர்பான தரவுகளை பாலின அடிப்படையில் பகுப்பாய்வு செய்த போது இதேமாதிரி ஆண்கள் அதிகமாக பாதிக்கப்பட்டு இருந்தது கண்டறியப்பட்டது. மிக சமீபத்திய தகவலாக இங்கிலாந்து தேசிய புள்ளிவிவர அலுவலகத்தின் தரவிலும் இந்த கூற்றை உண்மையாகும் தகவல் இடம்பெற்று இருந்தது.

அங்கு வியாழக்கிழமை (ஏப்ரல்-16) மாலைக்குள் 13,700-க்கும் மேற்பட்டோர் இறந்துவிட்டனர் என தெரிவிக்கப்பட்டது. இதில், கொரோனா வைரசினால் பெண்கள் இறப்பதை விட ஆண்கள் இரு மடங்கு அதிகமாக இறந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இறப்புக்கள் குறித்து பாலின அடிப்படையிலான தரவை இந்தியா வெளியிடவில்லை.

இந்நிலையில் வைரசுக்கு ஆண்கள் மட்டும் அதிகமாக உயிரிழப்பது ஏன்? என்ற கேள்வி எழுகிறது. இதுதொடர்பான கேள்விகளுக்கு பதில் ஆராய்ச்சியாளர்களுக்கு இன்னும் உறுதியாக தெரியவில்லை. ஆனால், பல கருத்துக்கள் அவர்களால் பகிர்ந்துக் கொள்ளப்படுகிறது.

சீனாவில் நடந்த இறப்புகளை அடிப்படையாக கொண்டு தெரிவிக்கப்பட்ட கருத்தில், பெண்களைவிட ஆண்கள் புகைபிடிப்பவர்களாக இருப்பதால் அதிகமாக பாதிப்புக்குள்ளாகிறார்கள் (சீனாவில் உள்ள ஆண்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் புகைபிடிக்கின்றனர், அதேசமயம் 100 பெண்களில் 2 பேர் மட்டுமே புகைப்பிடிக்கிறார்கள்) என தெரிவிக்கப்பட்டது. அவர்களுடைய நுரையீரல் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த கருத்து சீனாவிற்கு பொருந்தும் என ஆதரிக்கப்பட்டுள்ளது. ஆனால், புகைபிடிக்கும் ஆண்கள் மற்றும் பெண்களின் சதவீதங்களுக்கிடையிலான இடைவெளி இத்தாலி, ஸ்பெயின் அல்லது அமெரிக்காவில் பெரிய அளவில் கிடையாது. சீனாவில் நிகழ்ந்த இறப்புகளின் எண்ணிக்கையை விட இங்கு பல மடங்கு அதிகரித்து உள்ளன. புகைபிடிப்பவர்கள் அடிக்கடி வாயை தொடுவதற்கும், சிலர் சிகரெட்டுகளை பகிர்ந்துகொள்வதற்கும் வாய்ப்புள்ளது என்று வாதிடப்படுகிறது.

மற்றொரு கருத்து, சோப்பைப் பயன்படுத்தி கைகளை கழுவுவதில் ஆண்களை விட பெண்கள் மிகவும் கவனமாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது என்றும் அவர்கள் பொது சுகாதார ஆலோசனையை கவனிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது என்றும் கூறப்படுகிறது. ஆனால், மக்கள்தொகை மற்றும் கலாச்சாரங்களில் இந்த பண்புகளை பொதுமைப்படுத்துவது அறிவியலற்றதாககிறது.

ஜான்ஸ் ஹாப்கின்ஸ் ப்ளூம்பெர்க் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் நிறுவனத்தின் நுண்ணுயிரியலாளர் பேராசிரியர் சப்ரா க்ளீன், ‘தி கார்டியன்’ பத்திரிக்கைக்கு அளித்து உள்ள பேட்டியில் “புகைபிடிப்பதே முக்கிய காரணி” என்று நான் நினைக்கவில்லை என்றும், “இதற்கு உலகளாவிய பங்களிப்பு ஏதேனும் ஒன்று இருக்க வேண்டும்” என்றும் கூறியுள்ளார். இதற்கிடையே ஆண்களிடம் ஹெபடைடிஸ் சி மற்றும் எச்.ஐ.வி உள்ளிட்ட பல நோய்த்தொற்றுகளுக்கு குறைவான நோய் எதிர்ப்பு சக்தியே காணப்படுகிறது எனவும் குறிப்பிடுகிறார். “ஆரம்பத்தில் வைரஸை அடையாளம் காணும் போது அவர்களின் நோயெதிர்ப்பு கட்டமைப்பு சரியான எதிர்வினைய ஆற்றாததும் தாக்குதலுக்கு இலக்காக காரணமாக இருக்கலாம்,” எனவும் கூறியுள்ளார்.