சீனா வழங்கிய கொரோனாவை கண்டறியும் கருவி தரமற்றது… திருப்பி அனுப்புகிறது ராஜஸ்தான் அரசு!

Read Time:3 Minute, 20 Second

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாகி வருகிறது.

இதனால் கொரோனா வைரஸ் பாதிப்பை கண்டறியும் கருவியின் தேவையும் அதிகரித்து உள்ளது. சிகிச்சையளிக்கும் மருத்துவர்களுக்கான பாதுகாப்பு உடைகள், சோதனை உபகரணங்களுக்கு அதிகமான தேவை உள்ளது. இந்நிலையில் தேவைகளை நிவர்த்தி செய்வதாக கூறி கருவிகள், உடைகளை சீனா ஏற்றுமதி செய்கிறது. கோடிகளை குவிக்கும் சீனா, கொஞ்சம் கூட யோசிக்காமல் தரமற்ற பொருட்களை வழங்கிவருகிறது. தரமற்ற பொருட்களை உலக நாடுகள் சீனாவிற்கு திருப்பி அனுப்பி வருகிறது.

இந்நிலையில் இந்தியாவிற்கும் சீனா தரமற்ற பொருட்களை அனுப்பியது தெரியவந்து உள்ளது.

சீனாவிலிருந்து தயாரித்து இந்தியா இறக்குமதி செய்த கொரோனா வைரஸ் பாதிப்பை கண்டறியும் ரேபிட் டெஸ்ட் கிட் தரத்தில் மிகவும் மோசமாக இருப்பதால் பயன்பாட்டை நிறுத்தியதாக ராஜஸ்தான் அரசு தெரிவித்து உள்ளது.

ராஜஸ்தான் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ரகு ஷர்மா பேசுகையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலிடமிருந்து 30 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் கிட்டுகள் வந்தன. அவை அனைத்தும் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவையாகும். கொரோனா நோயாளிகளுக்கு பரிசோதனை செய்தால்கூட நெகடிவ் என்று இந்த கருவிகள் காண்பிக்கிறது. இந்த பரிசோதனை கருவியின் துல்லியத்தன்மை என்பது 5.4 சதவீதமாக உள்ளது.

இந்த கருவியின் துல்லியத்தன்மை, தரமின்மை குறித்து நாங்கள் ஐசிஎம்ஆருக்கு அறிக்கை அனுப்பியுள்ளோம். எங்கள் மாநில மருத்துவக்குழுவின் பரிந்துரையின்படி கருவியால் பரிசோதனைகளை மேற்கொள்வதை நிறுத்திவிட்டோம். செயலற்ற அந்த கருவிகள் அனைத்தையும் திருப்பி அனுப்புகிறோம். இதுவரையில் அந்த கருவியால் 168 பரிசோதனைகள் செய்தோம். அதில் பிசிஆர் டெஸ்ட்டில் கொரோனா ‘பாசிட்டிவ்’ என்று தெரிந்தவந்தவர்களுக்கு சீனாவிலிருந்து வந்த ரேபிட் கிட்டில் பரிசோதித்தால் ‘நெகடிவ்’ என்று வருவது வியப்பாக இருக்கிறது” எனக் கூறியுள்ளார்.

மாநில சுகாதாரத்துறையின் கூடுதல் செயலாளர் ரோகித் குமார் சிங், “ரேபிட் டெஸ்ட் கிட் அனைத்தும் சீனாவில் தயாரிக்கப்பட்டவையாகும். ஐசிஎம்ஆரிலிருந்து 30 ஆயிரம் கிட் இலவசமாக வழங்கப்பட்டது. 10 ஆயிரம் கருவிகளை மாநில அரசு விலைக்கு வாங்கியது. இப்போது சீன கருவியிலிருந்து முடிவுகள் தவறாக இருப்பதால் மாநில அரசு சார்பில் வாங்கிய கருவி மூலம் பரிசோதிக்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.