மனைவி கொடுமை தாங்கமுடியவில்லை… எங்களை பாதுகாக்க வேண்டும் முதல்வருக்கு ஆண்கள் கோரிக்கை…

Read Time:3 Minute, 27 Second

ஊரடங்கு உத்தரவினால் வீட்டில் இருக்கும் ஆண்களை மனைவிகள் கொடுமை செய்வதாகவும், ஆண்களை பாதுகாக்க தனியாக ஒரு ‘ஹெல்ப் லைன்’ தொலைபேசி எண் சேவையை உருவாக்க வேண்டும் என்று தமிழக முதல்-அமைச்சருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்புச் சங்கம் தரப்பில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு கோரிக்கை கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. அதில், கொரோனா வைரஸ் தொற்று என்ற கொடிய வைரசுக்கு பயந்து மரண பீதியில் உலக மக்கள் அனைவரும் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறார்கள்.

இதனால், வீட்டில் அடைபட்டு கிடக்கும் ஆண்களின் நிலை பரிதாபமாக இருக்கிறது. குடும்ப வன்முறை உடல் ரீதியாக மட்டுமின்றி, மன ரீதியாகவும் ஆண்களை ஆட்டிப்படைக்கிறது. பெண்களுக்கு ஆதரவான சட்டங்களை காட்டி, ஆண்கள் பலர் தங்களது மனைவிகளால் மிரட்டப்படுகின்றனர். வீட்டில் அடிமைப்படுத்தப்படுகின்றனர்.

உண்மை நிலை இவ்வாறு இருக்க, குடும்ப வன்முறையில் ஈடுபடும் ஆண்கள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என்று கூடுதல் டி.ஜி.பி., ரவி வெளியிட்டுள்ள அறிக்கை ஆண்களுக்கு கடுமையான வேதனைகளை தருகிறது. அவர்கள் சொந்த வீட்டில் உணவுக்காக கையேந்தும் நிலையில் உள்ளனர். பலர் மனதளவில் மனைவிகளால் கொடுமைப்படுத்தப்படுகின்றனர். நிராயுதபாணியாகவும், குடும்ப வன்முறை குறித்து புகார் கொடுக்க முடியாமலும், வெளியில் சொல்லமுடியாத இன்னல்களை பல ஆண்கள் அனுபவித்து வருகின்றனர்.

ஆனால், தேசிய மகளிர் ஆணையம், தமிழ்நாடு மகளிர் ஆணையம் ஆகியவை இந்த ஊரடங்கு காலத்தில் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை அதிகரித்துள்ளதாக அறிக்கைகளை வெளியிட்டு உள்ளன. ஆண்கள் எதிர்கொள்ளும் குடும்ப வன்முறைகளை முறையிடவே இடமில்லாத சூழலில், இந்த அறிக்கை ஒருதலைபட்சமானதும் கண்டிக்கத்தக்கதும் ஆகும்.

எனவே கொரோனா எனும் கொடும் வைரசைவிடவும், குடும்ப வன்முறையால் அதிகம் பாதிக்கப்படும் ஆண்களை பாதுகாத்திடவேண்டும். குறைந்தபட்சம் ஆண்களின் பிரச்சினைகளை தெரிவிக்க, ஒரு ‘ஹெல்ப் லைன்’ தொலைபேசி எண் சேவையை அரசு உடனடியாக தொடங்கவேண்டும். புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். ஆண்களை பாதுகாக்க ஆண்கள் ஆணையமும் உருவாக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %