இஸ்லாமியர்களுக்கு இந்தியா சொர்க்க பூமி… இஸ்லாமிய கூட்டமைப்புக்கு இந்தியா பதிலடி விபரம்:-

Read Time:3 Minute, 27 Second

இந்தியா இஸ்லாமியர்களுக்கு சொர்க்க பூமியாகும். இங்குதான் இஸ்லாமியர்கள் செழிப்பாக இருக்கிறார்கள். அவர்களின் மத, பொருளாதார உரிமை பாதுகாக்கப்படுகிறது என்று மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்து உள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பதற்கு டெல்லி இஸ்லாமிய மாநாடு முக்கியமாக கருதப்படுகிறது. மாநாட்டில் கலந்துக் கொண்டவர்கள் பலருக்கு வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, சமூக வலைதளங்களில் அவர்களுக்கு எதிரான அவதூறு பிரச்சாரங்கள் செய்யப்பட்டு வருகின்றன. சர்வதேச மீடியாக்களும் இவ்விவகாரத்தில் இந்தியாவை கடுமையாக விமர்சனம் செய்து செய்திகளை வெளியிட்டன.

இதுகுறித்து கவலை தெரிவித்து இஸ்லாமிய கூட்டமைப்புக்கான அமைப்பு (ஓஐசி) டுவிட்டரில் விமர்சனம் செய்து இருந்தது. அதில், இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக அவதூறான பிரச்சாரங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அவர்களால்தான் கொரோனா வைரஸ் பரவுகிறது என்று குறிப்பிட்ட மதத்தின் மீது வெறுப்பு விதைக்கப்படுகிறது. இதனால், அவர்களுக்கு எதிராக பாகுபாடும், வன்முறையும் ஏற்படுகிறது. எனவே, இஸ்லாமியர்களின் உரிமையை பாதுகாத்து அவர்களுக்கு எதிரான அவதூறு பிரச்சாரத்தையும் தடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தது.

இந்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி

இதற்கு இந்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி பதில் அளித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் பேசுகையில், இந்தியா இஸ்லாமியர்களுக்கு சொர்க்க பூமியாக உள்ளது. இங்கு அவர்களின் சமூக, பொருளாதார, மத உரிமைகள் அனைத்தும் பாதுகாக்கப்படுகின்றன. இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்கள் மிகவும் செழிப்பாகத்தான் வாழ்கிறார்கள். இந்த சூழலை சிதைக்க முயல்பவர்கள் நண்பர்களாக இருக்க முடியாது.

மத்திய அரசை பொறுத்தவரை இஸ்லாமியர்களை பாதுகாக்கும் விஷயத்தில் மிகுந்த நம்பிக்கையுடன் பணியை செய்து வருகிறது. பிரதமர் மோடி எப்போது பேசினாலும், 130 கோடி மக்களின் நலனுக்கும், உரிமைக்காகவும்தான் பேசுகிறார். இது மற்றவர்களுக்கு தெரியாவிட்டால் அது அவர்களின் பிரச்சினையாகும். மதச்சார்பின்மை, ஒருமைப்பாடு அரசியல் சார்ந்தது கிடையாது. இந்தியாவுக்கும், இந்தியர்களுக்கும் அதுதான் வேட்கை. தவறான தகவல்களை பரப்புவதில் சிலர் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். இதில் நாம் விழிப்புணர்வுடன் இருந்து, அத்தகைய தவறான தகவல்களை தோற்கடித்து ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.