கொரோனா ஊரடங்கால் சுத்தமான கங்கை… பல ஆண்டுகளுக்கு பின்னர் ‘புனித நீரை அள்ளிப் பருகும் நிலைக்கு மாறியது கங்கை’…!

Read Time:5 Minute, 5 Second

கொரோனா ஊரடங்கினால் காற்று, நீர் மாசுபாடு குறைந்து உள்ளது.

ஊரடங்கு எதிரொலியாக தொழிற்சாலை மற்றும் மனித கழிவுகள் கலக்காததால் நதிகள் சுத்தமாகி வருகின்றன. வாகன மற்றும் தொழிற்சாலை புகைகள் இல்லாமல் காற்றும் தூய்மையாகி வருகிறது. இந்நிலையில் கங்கை சுத்தமாகியிருப்பது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் தேசிய நதியான புனித கங்கை நதி, இமயமலையில் புறப்பட்டு உத்தரகாண்ட், உத்தரபிரதேசம், பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்காள மாநிலங்கள் வழியாக வங்காள தேசத்தை நோக்கி செல்கிறது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஹரித்வார், உத்தரபிரதேசத்தில் பிரயாக்ராஜ், வாரணாசி, ரிஷிகேஷ் மேற்கு வங்காளத்தில் கொல்கத்தா போன்ற பல நகரங்கள் அதன் பாதையில் இருக்கின்றன. இமயமலையில் தொடங்கும் போது புனித கங்கையாக புறப்பட்டாலும், இடையில் மனிதர்கள் செயலாலும், தொழிற்சாலைகளாலும் அது கழிவுகளை சுமந்து மாசடைகிறது.

கங்கை நதியை சுத்தப்படுத்த மத்திய, மாநில அரசுகள் எத்தனையோ திட்டங்களை, எத்தனையோ கோடிகளில் நடைமுறைப்படுத்தி வருகின்றன. பிரதமர் மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று கங்கையை சுத்தம் செய்தல். ஆனால், எத்தனை முறை நடவடிக்கையை மேற்கொண்டாலும் சுத்தமாவது சவாலாகவே இருந்து வந்தது. திட்டங்களுக்கான முழுப்பலன் இதுவரை கிடைக்காமல்தான் இருந்தது. தற்போது அதற்கான பலன் கொரோனா ஊரடங்கால் கிடைத்து இருக்கிறது. கங்கை சுத்தம் அடைந்து இருக்கிறது.

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக மார்ச் 24-ம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தொடர்கிறது. அரசுகள் செலவழித்த கோடிகள் பலன் அளிக்கவில்லை. ஆனால், கொரோனா ஊரடங்கால் கங்கை தன்னைத்தானே சுத்தம் செய்து உள்ளது. இதை மாசு கட்டுப்பாட்டு வாரியம் உறுதி செய்து இருக்கிறது.

கங்கையின் ஓரம் அமைந்து இருக்கும் புண்ணிய தலங்களான ஹரித்வார், ரிஷிகேஷ் நகரங்களுக்கு ஆண்டு முழுவதும் பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் மொய்த்த வண்ணம் இருப்பார்கள். அவர்கள் படித்துறைகளில் இறங்கி கங்கையில் புனித நீராடிச் செல்வார்கள். இதுதவிர கங்கை நதி ஓரங்களில் ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன.

தொழிற்சாலைகளின் கழிவுகளும், பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் மனித கழிவுகளும் கங்கையை களங்கப்படுத்தி வந்தன.

தற்போது ஊரடங்கால் தொழிற்சாலைகள் இயங்கவில்லை. படித்துறைகள் மூடப்பட்டு உள்ளன. தற்போது அந்தப் பகுதி வழியாக ஓடும் கங்கை நீர் அள்ளிப்பருகும் அளவில் சுத்தம் அடைந்து இருக்கிறது என உத்தரகாண்ட் மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்து உள்ளது.

கங்கை நதியில் கலக்கும் மனிதக் கழிவுகள் 34 சதவீதம் குறைந்து விட்டது. நீரில், உயிர் வேதி பிராணவாயுவின் (பயோகெமிக்கல் ஆக்ஸிஜன்) தேவை 20 சதவீதமாக குறைந்தது இருக்கிறது. உத்தரகாண்ட் தனி மாநிலமாக உருவான 2000 ஆண்டில் இருந்தே, ஹரித்வார் பகுதியில் ஓடும் கங்கை நீரின் தரம் ‘பி’ பிரிவில்தான் இருந்தது. தற்போது அதன் தரம் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவில் உயர்ந்து ‘ஏ’ பிரிவை அடைந்து இருக்கிறது.

தண்ணீரின் அமிலத் தன்மையை ஆங்கிலத்தில் ‘பி.எச்’ என்று குறிப்பிடப்படுகிறது. அதன்படி ஆற்றுநீரில், அமிலத் தன்மை 7.4 இருக்க வேண்டும். அவ்வாறு இருக்கும் போது, ஒரு லிட்டர் நீரில் 6 மில்லி கிராம் அளவில் ஆக்ஸிஜன் கரைந்து இருக்கும். இது நீர்வாழ் உயிரினங்களுக்கு நல்லதாகும். தற்போது கங்கைநீர் அந்த இடத்தை பிடித்து உள்ளது. அது நீர்வாழ் உயிரினங்களுக்கு மட்டும் அல்ல, மனிதர்களும் அந்த நீரை சாதாரணமாக ‘குளோரின்’ கலந்து குடிக்கலாம் என உத்தரகாண்ட் மாநில சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைமை அதிகாரி எஸ்.எஸ். பால் தெரிவித்துள்ளார்.

கொரோனாவினால் சுத்தமாகிய கங்கை ஊரடங்கு நீக்கப்பட்டதும் என்ன ஆகும்…? என்ற பெரிய கேள்வியும் உள்ளது.