கொரோனாவை சிறப்பாக கையாள்வதில் பிரதமர் மோடிக்கு முதல் இடம்… பில்கேட்ஸ் பாராட்டு.!

Read Time:3 Minute, 17 Second

கொரோனா என்ற உயிர்க்கொல்லி வைரஸ் ஒட்டுமொத்த உலகையும் ஆட்டிப்படைத்து வருகிறது. இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகளும் அனைத்து தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. இருப்பினும் வைரசின் பாதிப்பு அதிகரித்த வண்ணமே உள்ளது.

வைரசுக்கு எதிராக மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. தடுப்பு நடவடிக்கை மட்டுமே பலனுள்ளதாக உள்ளது. இந்நிலையில் இந்த நிலையில் கொரோனாவை சிறப்பாக கையாளும் உலக தலைவர்கள் யார்? யார்? என்பது குறித்து மார்னிங் கன்சல்ட் என்ற சர்வதேச நிறுவனம் ஆய்வு ஒன்றை நடத்தி தரவரிசை பட்டியலை வெளியிட்டு உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி 68 புள்ளிகளுடன் முதல் இடம் பிடித்து உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக 36 புள்ளிகளுடன் மெக்சிகோ அதிபர் லோபஸ் ஒப்ரடோர் 2-வது இடத்திலும், 35 புள்ளிகளுடன் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் 3-வது இடத்திலும் உள்ளனர்.

அதே சமயம் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மைனஸ் 3 புள்ளிகளுடன் 8-வது இடத்தை பிடித்து உள்ள்ளார். அதே போல் பிரான்ஸ் அதிபர் மெக்ரானுக்கு மைனஸ் 21 புள்ளிகளுடன் 9-வது இடமும், ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபேவுக்கு மைனஸ் 33 புள்ளிகளுடன் 10-வது இடமும் கிடைத்து இருக்கிறது.

பில்கேட்ஸ் பாராட்டு

இதற்கிடையே கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் இந்தியா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை பாராட்டி பிரதமர் மோடிக்கு உலக பெரும் பணக்காரர்களில் ஒருவரும், சமூக பணிகள் மேற்கொண்டு வருபவருமான பில்கேட்ஸ் கடிதம் எழுதி உள்ளார்.

பிரதமர் மோடிக்கு மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் எழுதியுள்ள கடிதத்தில், கொரோனா வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டு வர நீங்களும், உங்களது அரசாங்கமும் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை பாராட்டுகிறேன். ஒருபுறம் பொதுசுகாதாரத்தை பேணி கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் பொருளாதார ரீதியாக சமூகத்தில் பின்தங்கி உள்ளவர்களின் நலனில் அக்கறையுடன் செயல்படும் உங்கள் நோக்கம் மிகவும் சிறப்பானது.

ஊரடங்கை அமல்படுத்தியது, பரிசோதனையை விரிவுபடுத்தியது மற்றும் தனிமைப்படுத்துவதற்காக ஹாட்ஸ் பாட் பகுதிகளை கண்டறிந்தது, தனிமைப்படுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் பாராட்டுக்கு உரியவையாகும். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஆரோக்கிய சேது செயலி உள்பட தற்போதைய தொழில்நுட்பங்களை இந்தியா சிறப்பாக செயல்படுத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்து உள்ளார்.