TMP Explained: மதுபானம் அருந்துதல் உங்களை கொரோனாவிலிருந்து காப்பாற்றுமா…? #Coronavirus

Read Time:7 Minute, 59 Second

சீனாவின் உகான் நகரத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி முதன் முதலாக தோன்றிய கொரோனா வைரஸ், இப்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஏறத்தாழ உலகின் 185 நாடுகளுக்கு இந்த வைரஸ் தொற்று நோய் பரவி விட்டது. வைரஸ் தொற்றுநோய்க்கு இன்னும் மருந்தோ, தடுப்பூசியோ கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே, உலக நாடுகள் அனைத்தும் அதன்முன் மண்டியிடுகிற நிலை தான் ஏற்பட்டு உள்ளது. இந்த தொற்றுநோய்க்கு எதிராக உலக நாடுகள் பலவும் ஒன்றிணைந்து போர் தொடுத்து உள்ளன. ஆனால் இன்னும் வெற்றி கிடைக்கவில்லை. தற்போது வரையில் கொரோனா வைரசின் கை தான் ஓங்கி நிற்கிறது.

மனித குலத்தையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தொற்றிடம் இருந்து மக்களை காப்பாற்ற தீவிரமாக போராடி வருகின்றன. உலக நாடுகள் கையில் பொதுவான ஆயுதமாக ஊரடங்கு மட்டுமே உள்ளது.

கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பு மருந்துகளை கண்டறியும் பணிகள் விஞ்ஞானிகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். இதற்கிடையே இதை செய்தால் தப்பிக்கலாம், அதை செய்தால் தப்பிக்கலாம், கொரோனா வைரஸ் தொற்றிடம் இருந்து குணமாகலாம் என பல தகவல்கள் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளது. இவை அனைத்தும் கொரோனாவின் வீரியம் கண்டு பொய்யென நிரூபிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் கொரோனா அச்சத்தில் இருக்கும் மக்கள் இந்த போலியான தகவலை நம்பி அபாயத்திற்குள் சிக்கும் சம்பவங்களும் இருந்து வருகிறது. இதுபோன்று போலியாக பரவும் செய்திகளில் ஒன்று, மது அருந்தினால் கொரோனாவை தடுக்கலாம், பாதிக்கப்பட்டிருந்தால் குணம் அடையலாம் என்பதாகும்.

இதனை நம்பி ஈரானில் எரிச்சாராயம் குடித்து 300 பேர் வரையில் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் இந்த தகவலை நம்பி பலரும் மதுபானங்களை தேடிய சம்பவம் அரங்கேறியது. இந்த தகவல் விஞ்ஞானிகளையும், மருத்துவர்களையும் அதிர்ச்சியும் ஆச்சர்யம் அடையச் செய்து உள்ளது. மது அருந்தினால் கொரோனா வைரசை வென்று விடலாம் என்றால் உலக நாடுகள் ஏன் இத்தகையை கடுமையான போராட்டம்..? என்று கொஞ்சம் யோசித்தாலே விடை கிடைத்துவிடும்.

நோய் எதிர்ப்பு மண்டலம் பாதிப்பு

கொரோனா வைரஸ் உங்களுடைய மூக்கு மற்றும் வாய் வழியாக உடலுக்கு சென்று, மூச்சுக்குழாய் பகுதியில் செல்லுக்குள் நுழைந்து நுரையீரலுக்கு சென்றுவிடுகிறது. நுரையீரலுக்கு சென்று தன்னுடைய எண்ணிக்கையை பெருக்கி அதனுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும்போது நிமோனியா வருகிறது. நிமோனியா வந்துவிட்டால் குணம் அடைய வாய்ப்பு இல்லை.

வைரசால் பாதிக்கப்பட்டவர்களை நிமோனியா வருவதற்கு முன்னதாக துணை மருந்துகளை கொண்டு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தால் மட்டுமே குணமாக்க முடியும் என்ற நிலை நிலவுகிறது. ஆனால், 2015-ம் ஆண்டு ஆல்கஹால் ஆய்வு இதழில் வெளியிடப்பட்ட அறிக்கையில், அதிகப்படியாக மதுபானம் அருந்துபவர்கனின் நோயெதிர்ப்பு மண்டலத்தில் பாதிப்பு ஏற்பட்டு நிமோனியாவிற்கான வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே, அதிகப்படியாக மதுபானம் அருந்துவது என்பது நோயெதிர்ப்பு மண்டலத்தை மிகவும் பலம் இழக்கச் செய்கிறது.

அமெரிக்காவின் மேரிலாந்து பல்கலைக்கழகம் மற்றும் லயோலா பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வு முடிவில், அதிகப்படியாக மதுபானம் அருந்துவது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை கணிசமாக பலவீனப்படுத்துகிறது என கண்டறியப்பட்டுள்ளது. அதிகமாக மதுபானம் அருந்துவது என்பது ஊட்டச்சத்து குறைபாட்டை உருவாக்குகிறது. மதுபானம் உடலின் மதிப்புமிக்க நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்களை இழக்க செய்கிறது. சர்க்கரை போன்ற ஆல்கஹாலை அதிகமாக உட்கொள்வது கிருமிகளை கொல்லும் வெள்ளை அணுக்களின் திறனைக் குறைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரசிடம் இருந்து மனித உடலை காப்பாற்ற முன் நின்று போராடும் வெள்ளை அணுக்களை மதுபானம் மூலம் பலம் இழக்கச் செய்தால்… எப்படி குணம் அடைவோம்…?

பலனில்லை

இதுதொடர்பாக சர்வதேச விஞ்ஞானிகள் பத்திரிக்கைகளுக்கு அளித்துள்ள பேட்டியில், உடல் மற்றும் உயிரற்ற பொருட்களின் மேற்பரப்பில் கொரோனா வைரஸ் இருந்தால் அதனை கொல்ல ஆல்கஹால் கலந்த கிருமி நாசினியை பயன்படுத்தி கொல்லலாம். கையில் தெரியாமல் வைரஸ் இருக்கும் போது நாம் வாய், மூக்கு, கண்களை தொட்டால் அவை உடலுக்கு செல்ல வாய்ப்பு ஏற்படுகிறது. எனவே, கைகளை நன்றாக சுத்தம் செய்ய கூறுகிறோம்.

உடலுக்குள் வைரஸ் சென்ற பின்னர் மதுபானங்களை குடிப்பதால் எந்த பாதுகாப்பும் கிடையாது. மேலும், அச்செயல் உங்களை அதிகமாக பாதிக்கும் என்ற கருத்து உள்ளது.

இதுதொடர்பான போலி தகவல்கள் பரவ தொடங்கியதுமே உலக சுகாதார அமைப்பு ஒரு தெளிவான செய்தியை வெளியிட்டது. அதில், கொரோனா வைரஸ் மனிதின் உடலுக்குள் சென்றுவிட்டால் ஆல்கஹாலை பயன்படுத்துவதால் எந்த ஒரு பலனும் இருக்காது. பின்னல் அதனை உடலில் தெளிப்பதினாலோ, குடிப்பதினாலோ வைரஸ் அழியாது எந்த ஒரு பலனும் இல்லை. மது அருந்துவது சளிச்சவ்வை மேலும் பாதிப்படையவே செய்யும் என தெரிவிக்கப்பட்டது. மதுபானங்களை குடிப்பதினால் கொரோனா வைரசிடம் இருந்து உங்களை காப்பாற்றிக்கொள்ள முடியாது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது.

மதுபானம் அருந்துவது என்பது மன அழுத்தத்தையும், சலிப்பையும் போக்குவதற்கு உதவலாம். ஆனால், கொரோனாவிற்கு எதிராக போராட உதவாது. அதிகப்படியாக மதுபானம் அருந்துவது கொரோனா வைரசுக்கு எதிராக உடலை பலவீனப்படுத்தும்.

அல்லது ஈரானை போன்று குடிப்பவர்களை கூண்டோடு மரணிக்க செய்யும். எனவே, மதுபானம் கண்டிப்பாக கொரோனா வைரசை கொல்லாது. இதுதொடர்பான பொய்யான செய்திகளை பரப்பாதீர்கள்.

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து உங்களை காப்பாற்றிக்கொள்ள பாதுகாப்பாக வீட்டில் இருங்கள், மொத்தமாக கூடுவதை தவிருங்கள். மத்திய-மாநில அரசுக்களின் வெளியிட்டுள்ள விழிப்புணர்வு செய்திகளை பின்பற்றி பாதுகாப்பை உறுதி செய்யுங்கள், உங்களையும் நாட்டையும் காப்பாற்றுங்கள்…