#Coronavirus ‘கொரோனா பரவலை சூரிய ஒளி குறைக்கும்…’ ஆராய்ச்சி முடிவு சொல்வது என்ன…?

Read Time:5 Minute, 48 Second

கொரோனா வைரஸ் பரவலை சூரிய ஒளியும், வெப்பமும், ஈரப்பதமும் குறைக்கும் என்று அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா வைரசின் பிடியில் உலகம் சிக்கி தவித்துவரும் நிலையில் அதனுடைய பரவலை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்…? என்று ஆய்வு செய்யும் ஆய்வாளர்கள் பல்வேறு தகவல்களை வெளியிட்டு வருகிறார்கள். ஏற்கனவே, கொரோனா வைரசின் வீரியம் சூரிய வெளிச்சத்தின் முன் மண்டியிடுகிறது என தெரிவிக்கப்பட்டது.

உயிரற்ற ஒரு பொருளின் மீது ஒட்டியிருக்கும் வைரஸ் சூரிய வெளிச்சத்தை எதிர்க்கொள்ளும் போது அதனுடைய புரதம் (சளிப்படலம் போல் இருக்கும்) காய்ந்து சிதைகிறது. இதனையடுத்து அதனுள் இருக்கும் ஆர்.என்.ஏ. பயனற்றதாக போய்விடும். அதனால் பின்னர் மனிதனின் உடலுக்குள் நுழையவும் முடியாது, வேறு எந்த வழியிலும் பரவ முடியாது.

இருப்பினும், வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாக்க இது முழுமையாக உதவாது மனிதர்கள் மூலமாக தொற்று பரவும் என எச்சரிக்கப்பட்டது. மனித உடலுக்குள் சென்ற பின்னர் சூரிய ஒளியால் அவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலை சூரிய ஒளியும், வெப்பமும், ஈரப்பதமும் குறைக்கும் என்று அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது வெப்ப மண்டலப்பகுதியாக இருக்கும் இந்தியாவிற்கு நல்ல செய்தியாக அமைந்து உள்ளது.

அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறையின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இயக்குனரகம் மேற்கொண்ட ஆராய்ச்சி முடிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில், சூரிய ஒளி மற்றும் ஈரப்பதத்தில் வெளிப்படுகிறபோது கொரோனா வைரஸ் அதிவேகமாக இறந்து விடுகிறது. நேரடி சூரிய ஒளியில் கொரோனா வைரஸ் மிக விரைவாக செத்துவிடுகிறது.

ஐசோபுரொபைல் ஆல்கஹால், கொரோனா வைரசை 30 வினாடிகளில் கொல்லும். பூமியின் மேற்பரப்பிலும், காற்றிலும் கொரோனா வைரஸ் இருக்கிறபோது, அதை சூரிய ஒளி கொல்லும் என்பது எங்களது ஆராய்ச்சியின் மிக முக்கிய சக்திவாய்ந்த தாக்கமாக அமைந்து உள்ளது. மேலும் அதிக வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் ஆகிய இரு நிலைகளுமே கொரோனா வைரசுக்கு சாதகமற்றவையாக இருக்கிறது.

கோடை காலம் கொரோனா வைரஸ் பரவுவதை குறைக்கப்போகின்றன என்று நாங்கள் அறிந்திருக்கிறோம். இது நாங்கள் ஆராய்ச்சியில் முன்னேறிச் செல்வதற்கான வாய்ப்பு ஆக அமையும். 95 டிகிரி பாரன்ஹீட் அல்லது 35 டிகிரி செல்சியசுக்கு அதிகமான வெப்ப நிலையும், ஈரப்பதமும் கொரோனா வைரசின் ஆயுள்காலம் 18 மணி நேரம் என்பதை பாதியாக குறைக்கிறது.

கொரோனா வைரஸ் சூரிய ஒளியில் வெளிப்படுகிறபோது, 75 டிகிரிக்கு மேல் வெப்ப நிலை நிலவி, ஈரப்பதம் 80 டிகிரி அளவுக்கு இருந்தால், வைரசானது சில நிமிடங்களில் இறந்துவிடுகிறது. அதே நேரத்தில், இந்த கண்டுபிடிப்புகளால் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட எந்த விதிமுறை தொடர்பாகவும் எந்த பரிந்துரைகளையும் வெளியிட விரும்பவில்லை.

கொரோனா வைரஸ் பரிமாற்ற தொடரில், அறியப்படாத பல தொடர்புகள் இருக்கின்றன. நாங்கள் (ஆராய்ச்சியாளர்கள்) கூறுகிற இந்த போக்கானது, கொரோனா வைரசுடன் தொடர்புடைய ஆபத்தை குறைக்கிற நடைமுறை முடிவு எடுப்பதை ஆதரிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். எங்கள் ஆராய்ச்சியில், கொரோனா வைரஸ் பரவுதலைப் பொறுத்தமட்டில், தொடர்பு சங்கிலியில் பலவீனமான தொடர்புகளை நாங்கள் அடையாளம் கண்டு உள்ளோம். அவை வெப்பம் மற்றும் ஈரப்பதம் ஆகும். சூரிய ஒளியில் உள்ள புற ஊதாக்கதிர்களும் அந்த வரிசையில் சேருகிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவில் கோடை காலம் தொடங்கி இருக்கிற நிலையில், அமெரிக்க ஆராய்ச்சி பிரதிபலித்தால், இங்கே கொரோனா வைரஸ் பரவல் குறைய தொடங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இருப்பினும் ஆராய்ச்சியின் முடிவில், சமூக விலகல் விதிகள் தொடர்பாக எந்தஒரு பரிந்துரையையும் நாங்கள் தெரிவிக்க விரும்பவில்லை என ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். எனவே, சூரிய ஒளி சாதகமான அம்சமாக இருந்தாலும் தள்ளியிருத்தல், தற்பாதுகாப்பு நடவடிக்கையென்பது மிகவும் அவசியமானது. அதனை பின்பற்றுவோம் கொரோனாவிடம் இருந்து நம்மையும், நமது நாட்டையும் காப்போம்.