ஊரடங்கில் சலூன்களை திறப்பதற்கு அனுமதி கிடையாது – மத்திய அரசு விளக்கம்

Read Time:1 Minute, 42 Second

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட 2-ம் கட்ட ஊரடங்கு காலத்தில் கூடுதலாக என்னென்ன கடைகளை திறக்கலாம், அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை தவிர்த்து வேறு எந்த கடைகளைத் திறக்கலாம் என்பது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று (ஏப்ரல் 24) நள்ளிரவில் உத்தரவு ஒன்றை வெளியிட்டது.

அதில், அனைத்து நகரங்களிலும், கிராமங்களிலும் சலூன்கள் (முடி திருத்தகம்), அழகு நிலையம் ஆகியவை சனிக்கிழமை முதல் செயல்படலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

மாத கணக்கில் முடிவெட்டாமல் இருந்தவர்களுக்கு ஒரு நற்செய்தியாக தோன்றியது. இருப்பினும் வெளியே சென்றால் கொரோனா என்ற அரக்கன் விழுங்கிவிடுவான் என்ற பெரிய ஆபத்து எச்சரிக்கையும் இருந்தது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் நிலையில் சலூன்களிலும் கூட்டம் அலைமோதும் என பார்க்கப்பட்டது.

இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் தரப்பில் விளக்கம் ஒன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சக இணைச் செயலாளர் புண்யா சலிலா ஸ்ரீவாஸ்தவா பேசுகையில், மதுபானக் கடைகள், உணவகங்கள் ( restaurants) மற்றும் சலூன்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது என தெரிவித்து உள்ளார். எனவே, முடிவெட்ட கற்றுக்கொள்வது நல்லதாக இருக்கும்…