‘குணமான கொரோனா நோயாளிகளுக்கு மீண்டும் தொற்று ஏற்படாது என்பதற்கு எந்தஒரு ஆதாரமும் இல்லை’…! உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை.!

Read Time:2 Minute, 31 Second

கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் நலம்பெற்றவர்களின் உடலில் நோயெதிர்ப்பு சக்தி வலுவடையும் என தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இதனால் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் ஏற்பட வாய்ப்பு இல்லை என்ற பொதுவான கருத்து தொடர்ந்து தெரிவிக்கப்பட்டு வருகிறது. குணமானவர்களின் ரத்தத்தில் வெள்ளையணுக்கள் எற்கனவே போரிட்டு வெற்றியை கண்டிருக்கும். எனவே அவர்களுடைய ரத்த பிளாஸ்மாவை எடுத்து தற்போது பாதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் முறையும் உலகம் முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நோயெதிர்ப்பு சக்தி வலுவடையும் என்ற கூற்றை உடைத்து உள்ள உலக சுகாதார அமைப்பு, குணமான கொரோனா நோயாளிகளுக்கு மீண்டும் தொற்று ஏற்படாது என்பதற்கு எந்தஒரு ஆதாரமும் இல்லை… என தெரிவித்து உள்ளது.

கொரோனாவினால் பாதிக்கப்பட்டு குணமானவர்களுக்கு மீண்டும் பாதிப்பு ஏற்படாது, அவர்களுடைய நோயெதிர்ப்பு சக்தி வலுவாகியிருக்கும் என அரசுக்கள் மெத்தனமான இருக்க கூடாது என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கையை விடுத்து உள்ளது. மீண்டும் பாதிப்பு ஏற்படாது என்பதை பாதிக்கப்பட்டவர்கள் நம்பினால் விதிமுறைகளை புறக்கணிக்க கூடும், இதனால் தொடர்ந்து வைரஸ் பரவுவதற்கான அபாயங்களை அதிகரிக்கக்கூடும் என தெரிவித்து உள்ளது.

கடந்த வாரம் நோயிலிருந்து மீண்டவர்களுக்கு “சுகாதார பாஸ்போர்ட்களை” வழங்க தொடங்குவதாக சிலி தெரிவித்தது. வைரசிலிருந்து குணமானவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி வலுவடையும் வகையில் ஆன்டிபாடிகளை அவர்கள் உடல் தானாகவே உருவாக்கிக்கொள்கிறதா என்பதை பரிசோதனை செய்த பின்னர் அவர்கள் உடனடியாக மீண்டும் பணியில் சேரலாம் என நடவடிக்கையை மேற்கொண்டது. இந்நிலையில் உலக சுகாதார அமைப்பு இந்த எச்சரிக்கையை விடுத்து உள்ளது.