கடலின் நீரோட்ட வேகத்தால் தனுஷ்கோடி நில அமைப்பில் ஏற்பட்ட பெரும் மாற்றம்…!

Read Time:5 Minute, 1 Second

ராமேசுவரத்தில் ஒரு வருடமாக கடலின் நீரோட்ட வேகத்தால் தனுஷ்கோடி நில அமைப்பில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

தனுஷ்கோடி அரிச்சல்முனை சாலை அருகே கடந்த ஆண்டு நிலப்பரப்பு காணப்பட்டது. அப்போது அங்கு சுற்றுலா பயணிகள் கடல் மணல் பகுதிக்கு இறங்கி சென்றனர். தற்போது கடல் நீரோட்ட வேகம் காரணமாக அரிச்சல்முனையின் நில அமைப்பில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது அரிச்சல் முனைப்பகுதியில் காணப்பட்ட மணல் மேடு முற்றிலுமாக கடலுக்குள் சென்றுவிட்டது. கடந்த ஓராண்டில் கடல் நீரோட்ட வேகத்தால் அரிச்சல்முனைக்கு செல்லும் சாலையில் இறுதிப்பகுதியில் இருபகுதியிலும் மணம் பகுதி காணப்படுகிறது.

ராமேசுவரத்தில் இருந்து சுமார் 21 கிலோ மீட்டர் தொலைவில் தனுஷ்கோடி அமைந்துள்ளது. 1964-ம் ஆண்டுக்கு முன்பு வரை தொழில் நகரமாகவும், சுற்றுலா தலமாகவும் விளங்கிய தனுஷ்கோடியில் இருந்து இலங்கை தலைமன்னாருக்கு 2 கப்பல் போக்குவரத்து இருந்தது. தனுஷ்கோடியில் அப்போது துறைமுகம், மருத்துவமனை, பள்ளிக்கூடம் தபால் நிலையம், ரெயில்வே குடியிருப்புகள், ரெயில் நிலையம், பள்ளிவாசல், கிறிஸ்தவ ஆலயம், கோவில்களும் இருந்தன.

தனுஷ்கோடி

அதுபோல் மதுரை, சென்னை உள்ளிட்ட ஊர்களில் இருந்து வரும் ரெயில்கள் ராமேசுவரம் வருவது கிடையாது. நேராக தனுஷ்கோடி சென்றுள்ளது. ராமேசுவரத்திற்கு வர விரும்புபவர்கள் பாம்பனிலிருந்து ‘சன்டிங்க்’ என்று சொல்லக்கூடிய தனி ரெயிலில் ராமேசுவரம் வந்து உள்ளனர்.

இவ்வாறு தொழில் நகரமாக விளங்கிய தனுஷ்கோடியில் 1964-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட புயலால் அழிந்து போனது. 23.12.1964 அன்று இரவில் சுமார் 120 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் வீசிய கடும் புயலாலும், பலத்த மழையாலும், மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இருந்து சுமார் 20 அடி உயரத்திற்கு எழும்பிய ராட்சத அலைகள் தனுஷ்கோடியை மூழ்கடித்தது.

24-ம் தேதி காலையில் தனுஷ்கோடி பகுதியில் பாக்ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா என இரண்டு கடல் பகுதியும் ஒன்று சேர்ந்தது போல் காட்சி அளித்தது. தனுஷ்கோடி என்ற ஊர் இருந்ததற்கான எச்சங்களாக சில சுவடுகளை மட்டுமே விட்டு இருந்தது. புயலுக்கு பின்னர் அப்பகுதி மக்கள் வாழ தகுதியற்ற பகுதியாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சுற்றுலா பயணிகள் சென்று வரும் வகையில் முகுந்தராயர்சத்திரம் கடற்கரையில் இருந்து தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரை வரையிலும் 9 கிலோ மீட்டர் தூரத்திற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு சாலை அமைக்கப்பட்டது. மேலும், சாலையின் பாதுகாப்பு கருதி இருபுறமும் தடுப்பு சுவர்களும் கட்டப்பட்டது. மேலும் கடைகோடியான அரிச்சல்முனை கடற்கரையில் சுற்றுலா வாகனங்கள் திரும்பி செல்லும் வகையில் ரவுண்டானா அமைக்கப்பட்டது. அதன் மைய பகுதியில் அசோகர் ஸ்தூபியும் நிறுவப்பட்டது. இதனையடுத்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அங்கு சென்று வந்தனர்.

கடந்த ஆண்டு மழை சீசன் தொடங்கிய போதிலிருந்தே தனுஷ்கோடியில் கடல் பகுதியில் நீரோட்டத்தின் வேகமும் அதிமாக காணப்பட்டது. இதனால் அப்போது இருந்து அரிச்சல்முனை கடற்கரை மணல் பரப்புகளையும் கடல் நீர் சூழ தொடங்கியது. அரிச்சல்முனை சாலை தடுப்புச்சுவரில் இருந்து வடக்கு மற்றும் தெற்கு பகுதியில் உள்ள விசாலமான நிலப்பரப்பாக இருந்த பகுதி முழுவதும் கடல்நீர் சூழ்ந்து தற்போது அப்பகுதி கடலாக மாறியிருக்கிறது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் வரை சுற்றுலா பயணிகள் மணலில் நடந்து சென்று வேடிக்கை பார்த்து வந்த பகுதி முழுவதும் தற்போது முழுமையாக கடல் நீரால் சூழப்பட்டு உள்ளது. கடல் நீரோட்டத்தின் வேகம் தொடர்ந்து அதிகமாக இருப்பது இவ்வாறு நில அமைப்பில் மாற்றம் ஏற்பட காரணம் என்று கூறப்படுகிறது.