ஊரடங்கின் போது கர்ப்பிணிப் பெண்களை தமிழக அரசு எவ்வாறு கவனித்து வருகிறது..? விபரம்!

Read Time:5 Minute, 33 Second
Page Visited: 72
ஊரடங்கின் போது கர்ப்பிணிப் பெண்களை தமிழக அரசு எவ்வாறு கவனித்து வருகிறது..? விபரம்!

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவினால் மக்கள் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்ட இந்நேரத்தில் கர்ப்பிணிப் பெண்கள் வழக்கமான மருத்துவப் பரிசோதனைகளுக்கு செல்ல முடியாமல் குறிப்பாக உரிய நேரத்தில் மருத்துவ ஆலோசனைகள் பெற முடியாத சூழலில் உள்ளனர்.

இது குறித்து தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் கூறுகையில், கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல், மே மாதங்களில், 1.5 லட்சம் கர்ப்பிணிகள் குழந்தை பெற்றெடுக்க உள்ளதாக தெரிவித்திருந்த நிலையில், இதுவரை 50 ஆயிரம் பெண்கள் குழந்தையை பெற்றெடுத்துள்ளனர்.

மொத்த கர்ப்பிணி பெண்கள் குறித்த பட்டியல் மாவட்டம் வாரியாக பிரித்து அந்தந்தப் பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. சமூக இடைவெளி முறைகளை பின்பற்றி பட்டியலில் உள்ள கர்ப்பிணிகள் சிகிச்சைக்காக மருத்துவமனை வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவர்களை பின்பற்றி கண்காணிக்க மாவட்ட வாரியாக தாய் சேய் நல அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் தங்கள் பிரசவத்திற்கு 10 நாட்களுக்கு முன்னதாகவே மருத்துவமனையில் சேரும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் பொது சுகாதார மையத்தில் அனுமதிக்காது Comprehensive Emergency Obstetric and Newborn Care(CEmONC) எனப்படும் பிரத்யேக மகப்பேறு மையத்தில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்படும்.

கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளிலிருந்து வரும் கர்ப்பிணி பெண்களுக்கு ரிவர்ஸ் ட்ரான்ஸ்கிரிப்ஷன் பாலிமரேஸ் செயின் ரியாக்சன் Reverse Transcription–Polymerase Chain Reaction(RT-PCR) செய்யப்பட்டு தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணம்(PPE) வசதிகள் உடைய தனி அறையில் பிரசவ சிகிச்சை அளிக்கப்படும் என அதிகாரிகள் கூறினர்.

தினமும் வீடியோ கான்பரன்சிங் மூலம் மாவட்ட அதிகாரிகள் தங்களுக்கு கீழ் உள்ள மாவட்ட வாரியாக அமைக்கப்பட்ட தமிழ்நாடு பொது சுகாதார மைய குழுவிடம் தொடர்பு கொண்டு அறிவுரை வழங்குகின்றனர். ஒவ்வொரு குழுவிலும் ஏழு முதல் எட்டு மகப்பேறு மருத்துவர்கள் உள்ளனர். மேலும் ஆம்புலன்ஸ் வண்டிகளும் தேவைக்கு ஏற்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.

அதுமட்டுமல்லாது சாமானிய மக்கள் கூட இந்த சூழலில் உதவி புரிந்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன் எழுத்தாளர் ஆட்டோ சந்திரன் (இவர் எழுதிய நாவலின் தழுவி எடுக்கப்பட்டது தான் வெற்றிமாறனின் விசாரணை திரைப்படம்) கோயம்புத்தூரில் இடம்பெயர்ந்து வந்த ஒடிசா தொழிலாளி ஒருவருக்கு பிரசவம் பார்த்து தகுந்த நேரத்தில் உதவி செய்து காப்பாற்றினார்.

ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு காத்துக்கொண்டிருந்த நேரத்தில் அப்பெண்ணிற்கு பிரசவ வலி ஏற்பட்டது. அந்த சமயம் ஆட்டோ சந்திரனுக்கு அவரது நண்பர் மூலம் தகவல் தெரிய வர மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ஆயத்தமாகினர். அப்போது பிரசவ வலி அதிகரிக்க வேறுவழியின்றி அங்கேயே பிரசவம் பார்க்கப்பட்டது. குழந்தை பிறந்த அதே நேரத்தில் ஆம்புலன்ஸ் வர தாய் மற்றும் குழந்தையை கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதே போன்று திருச்சியில் கான்ஸ்டபிள் சையது அபுதாஹிர், ஒரு கர்ப்பிணி பெண் தனது கணவரோடு சாலையில் நடந்து வருவதை கவனித்து விசாரித்த போது சிசேரியனுக்கு ரத்தம் தேவைப்படுவதை அறிந்து கொண்டார். பின் மதியம் தனது வேலை முடிந்த உடன் மருத்துவமனைக்கு சென்று ரத்தம் தானம் செய்தார். கான்ஸ்டபிள் சையது அபுதாஹிரின் இச்செயல் பலராலும் பாராட்டுப் பெற்றது.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %