“ஒரு ரூபாயை கூட இழக்க விரும்பவில்லை…” சீனாவிடம் இருந்து கொரோனா சோதனை கருவிகளை வாங்கும் ஒப்பந்தத்தை மத்திய அரசு அதிரடியாக ரத்து செய்தது…. !

Read Time:2 Minute, 52 Second

“ஒரு ரூபாயை கூட இழக்க விரும்பவில்லை…” எனக் கூறி சீனாவிடம் இருந்து கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பை கண்டறியும் கருவிகளை வாங்க செய்யப்பட்டிருந்த ஒப்பந்தத்தை மத்திய அரசு அதிரடியாக ரத்து செய்து உள்ளது.

கொரோனா வைரஸ் முதல் முதலாக காணப்பட்டது சீனாவில்தான். சீனாதான் இந்த வைரஸ் தொற்றுக்கு காரணம் என்ற பரவலான குற்றச்சாட்டு நிலவுகிறது.

இந்நிலையில் தற்போது நாங்கள் கொரோனாவிடம் இருந்து மீண்டுவிட்டோம் எனக் கூறும் சீனா, மருத்துவ வர்த்தகத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதாவது கொரோனா வைரஸ் தொற்றை கண்டுபிடிக்கும் கருவிகள், முகக்கவசம், மருத்துவ உடைகள் என தடுப்பு சிகிச்சை உபகரணங்களையும் ஏற்றுமதி செய்து கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டுகிறது.

ஆனால், இப்போதும் வழக்கம்போல தரமற்ற பொருட்களை வழங்கி மக்களின் உயிருடன் விளையாடுகிறது என்பது பல்வேறு நாடுகள், அந்நாட்டிடம் வாங்கிய பொருட்களை திருப்பி அனுப்பியதிலிருந்து தெரியவந்து உள்ளது. இவ்வரிசையில் இந்தியாவும் சிக்கியுள்ளது. சீனாவிடம் இருந்து வாங்கிய கொரோனா பரிசோதனை கருவிகள் தரமற்றவையாக உள்ளது என மாநில அரசுக்கள் கூறியதும், அதனை பயன்படுத்த வேண்டாம் என மத்திய அரசின் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) மாநில அரசுக்களிடம் கேட்டுக்கொண்டன.

இந்நிலையில், “ஒரு ரூபாயை கூட இழக்க விரும்பவில்லை…” எனக் கூறி சீனாவிடம் இருந்து கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பை கண்டறியும் கருவிகளை வாங்க செய்யப்பட்டிருந்த ஒப்பந்தத்தை மத்திய அரசு அதிரடியாக ரத்து செய்து உள்ளது.

குவாங்சோ வோண்ட்ஃபோ பயோடெக் மற்றும் ஜுஹாய் லிவ்ஸன் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட கொரோனா வைரஸ் சோதனைக் கருவிகள் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலால் (ஐ.சி.எம்.ஆர்) “குறைவான செயல்திறன்” கொண்டவை என கண்டறியப்பட்டு உள்ளது என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

தரமற்ற கருவிகளை வழங்கிய சீன நிறுவனங்களிடம் ஒரு ரூபாயை கூட இழக்கமாட்டோம், ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. சீன நிறுவனங்களுக்கு நிதி அளிக்கப்படாது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.