இந்தியாவில் கொரோனா நோயாளியை குணப்படுத்திய ‘பிளாஸ்மா’ சிகிச்சை… எவ்வாறு அளிக்கப்படுகிறது…? TMP Explained

Read Time:6 Minute, 30 Second

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடக்கிறது. ஆனால், நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் வகையிலான ஒரு மருந்து பயன்பாட்டுக்கு வர சுமார் ஒரு வருடமாவது ஆகும் என விஞ்ஞானிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் தான் உலகம் முழுவதும் மருத்துவர்களின் பார்வை பிளாஸ்மா சிகிச்சையை நோக்கி சென்று உள்ளது. டெல்லியில் கொரோனா நோயாளி ஒருவர் பிளாஸ்மா சிகிச்சையில் குணம் அடைந்து உள்ளார் என அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். மேலும், குணம் பெற்றவர்கள் பிளாஸ்மாவை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் விடுத்தார். இதற்கிடையே பிற மாநில அரசுக்களும் பிளாஸ்மா சிகிச்சைக்கு அனுமதியை கோரியுள்ளன.

இந்நிலையில் பிளாஸ்மா சிகிச்சை பற்றி நாம் விளக்கமாக தெரிந்துக் கொள்வோம்…

மனித ரத்தத்தில் சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், பிளேட்லெட்டுகள் என மூன்று வகையான அணுக்கள் உள்ளன. இதுபோக, திரவநிலையில் பிளாஸ்மாவும் உள்ளது. மனித ரத்தத்தில் சுமார் 55 சதவீத அளவுக்கு இருக்கும் பிளாஸ்மா ஊட்டச்சத்துக்கள், தண்ணீர், வைட்டமின்கள், தாது பொருள்கள், புரத பொருட்கள், ஹார்மோன்கள் மற்றும் ரத்தத்தை உறைய வைக்கக்கூடிய பிற காரணிகளை சுமந்து செல்கிறது. ரத்தத்திலிருக்கும் அனைத்து கூறுகளையும் திரவமாக உடல் முழுவதும் பிளாஸ்மா சுமந்து செல்கிறது.

மனித செல்கள் வெளியேற்றும் கழிவு பொருட்களையும் சுமந்து கொண்டு நுரையீரல் செல்கிறது. அங்கு, நுரையீரல் சுத்திகரித்து ஆக்சிஜனை உடலுக்கு அனுப்புகிறது.

பிளாஸ்மாவில் உருவாகும் இம்யூனோ குளோபின்கள் மற்றும் எதிர்ப்பு சக்திகள், பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை மற்றும் ஒட்டுண்ணிகள் ஆகியவற்றிற்கு எதிராக உடலை பாதுகாக்கிறது. உடலுக்குள் பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் படையெடுக்கும் போது அவற்றை அடையாளம் கண்டு உடலை பாதுகாப்பதில் இம்யூனோ குளோபின்கள் கேடயமாக முன்நிற்கிறது. மனிதர்கள் எதிர்கொள்ளும் பல கடுமையான உடல்நல குறைபாடுகளுக்கு சிகிச்சையளிப்பதில் பிளாஸ்மா ஒரு முக்கிய பங்கினை கொண்டிருக்கிறது. இந்த பிளாஸ்மாவை கொண்டுதான் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

பிளாஸ்மா சிகிச்சை

கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் ரத்தத்தில் இருந்து பிளாஸ்மாக்களை பிரித்து அதை தற்போது சிகிச்சையில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு செலுத்தி, காப்பாற்றும் முயற்சிதான் பிளாஸ்மா சிகிச்சையாகும்.

தொற்று நோய் ஒன்றினால் குணமடைந்தவர்களின் பிளாஸ்மாவில் இருக்கும் இம்யூனோ குளோபின்கள், தொற்றுநோய் வைரசுக்கு எதிராக போராடி வெற்றி பெற்று வலுவடைந்து இருக்கும். இதனை பிரித்து தற்போது சிகிச்சை பெறுபவர்களுக்கு வழங்கும்போது அவர்களுடைய நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரித்து குணம் அடைய வாய்ப்பு உள்ளது என விஞ்ஞானிகள் கூறினர். டெல்லியில் அப்படிதான் ஒருவர் குணம் அடைந்து உள்ளார்.

1918-ல் ஸ்பானிஷ் காய்ச்சல் பரவலின் போதும் குணமடைந்தவர்களிடம் இருந்து சிகிச்சை பெறுபவர்களுக்கு ரத்த மாற்றம் இருந்துள்ளது என ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதுபோன்று அம்மை போன்ற தொற்று நோய்களுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னர் இந்த சிகிச்சை முறையே நடைமுறையில் இருந்தது. இதுபோல, கொரோனா வைரசின் குடும்பத்தைச் சேர்ந்த சார்ஸ், மெர்ஸ் வைரஸ் தாக்கத்தின் போதும், எபோலா தொற்றின் போதும் இந்த பழைய முறை சோதிக்கப்பட்டுள்ளது. தற்போது நவீன முறையில் பிளாஸ்மா மட்டும் பிரிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறடு.

அமெரிக்காவின் தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கைக்கு ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நோய் எதிர்ப்பு நிபுணர் அர்த்ரோ காசாடேவால் பேட்டியளித்து பேசுகையில், “பிளாஸ்மா சிகிச்சை முறையை அமல்படுத்துவதற்கு எந்த ஒரு ஆய்வும் தேவையில்லை. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களிடம் இருந்து ரத்தம் பெற வேண்டும். அதனை பரிசோதனை செய்து தொற்று நோய் அச்சம் ஏதாவது இருக்கிறதா? என்பதை உறுதி செய்துக்கொள்ள வேண்டும். பின்னர், அந்த ரத்தத்தில் இருந்து பிளாஸ்மாவை பிரித்து சிகிச்சை முறைக்கு பயன்படுத்த வேண்டும். வரலாற்றில் இந்த சிகிச்சை முறை பலனளித்திருக்கிறது, இது உற்சாகமளிப்பதாகவே உள்ளது” என கூறியுள்ளார். அமெரிக்காவிலும் இந்த சிகிச்சை முறை பலனித்து வருகிறது. ஆனால், எல்லோருக்கும் பிளாஸ்மாக்கள் கிடைப்பது என்பது சவாலான காரியமாகும்.

எனவே, வைரஸ் பரவலில் இருந்து தற்பாதுகாத்துக்கொள்ள எச்சரிக்கையுடன் இருத்தல் என்பது மிகவும் அவசியமானது. அரசின் விழிப்புணர்வு தகவல்களை பின்பற்ற நம்மையும், நம் தேசத்தையும் பாதுகாப்போம்.