குஜராத்தை வேட்டையாடும் கொரோனா வைரஸ்… நாட்டின் பிற பகுதிகளிலிருந்து அங்கு மட்டும் ‘வீரியம்’ மாறுபடுவது ஏன்…? TMP Explained

Read Time:6 Minute, 12 Second

இந்தியாவில் கொரோனாவினால் அதிகமாக பாதிக்கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் மராட்டியத்திற்கு அடுத்தப்படியாக குஜராத் இடம்பெற்று உள்ளது.

குஜராத் மாநிலத்தில் இதுவரையில் 3,301 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 151 உயிரிழந்து உள்ளனர். குணமானவர்கள் எண்ணிக்கை (300-க்கு மேல்) குறைவாகவே உள்ளது.

குஜராத் மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு அதிகரித்து செல்கிறது. குஜராத் மாநிலம் தொடக்கத்தில் பாதிப்புக்குள்ளான மாநிலங்கள் பட்டியலில் 10-வது இடத்துக்கும் கீழே இருந்தது. ஆனால் கடந்த 10 நாட்களுக்குள் குஜராத் மாநிலத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும், உயிரிழப்பும் திடீரென அதிகரித்து இப்போது இரண்டாவது இடத்திற்கு சென்றுள்ளது. அகமதாபாத் மற்றும் சூரத்தில் வைரசின் தாக்கம் அதிகரித்துச் செல்கிறது.

இந்நிலையில் மாநிலத்தில் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை திடீரென்று அதிகரிப்பதற்கும், உயிரிழப்புக்கும் சீனாவின் உகான் நகரை தாக்கிய நகரை தாக்கிய எல்-வகை கொரோனா வைரஸ் காரணமாக இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. அதுயென்ன எல்-வை என்ற கேள்வி எழலாம். கொரோனா வைரஸ் இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது. அதுதொடர்பாக தெரிந்துக் கொள்வோம்.

வைரசின் வகைகள்

ஷாங்காயில் அமைந்துள்ள பெக்கிங் பல்கலைக்கழகம் கொரோனா வைரஸ் தொடர்பாக மேற்கொண்ட ஆய்வில் இருவகையான வைரஸ்கள் இருப்பது தெரியவந்தது. அதாவது, பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில் எஸ்-வகை, எல்-வகை என இரு வகையில் வைரஸ் உள்ளது. இதில் ‘எல்-வகை’ கட்டமைப்புடைய கொண்ட கொரோனா வைரஸ் மிகவும் வீரியமானது. அதாவது, மனிதர்களை தாக்கினால் வேகமான உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடியது. வைரசினால் உயிரிழந்தவர்களில் 70 சதவீதம் எல்-வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள். மீதமுள்ளவர்கள் எஸ்-வகை வைரஸால் இறந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

சீனாவில் முதல் முறையாக வைரஸ் காணப்பட்ட உகான் நகரில் எல்-வகை கொரோனா வைரஸ் அதிகமாக இருந்தது. ஆனால், எஸ்- வகை கொரோனா வைரஸ்கள் புதிதாக பாதிக்கப்படும் மக்களிடம் காணப்பட்டது. ஆனால், இந்த வகை வைரஸால் அதிகமான உயிரிழப்பு ஏற்படாது. இந்த வைரஸை பரப்புவதற்கான வாய்ப்புதான் அதிகமாக இருக்குமே தவிர உயிரிழப்பு அதிகமாக இருக்காது என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. வீரியம் நிறைந்த எல்-வகை வைரஸ் குஜராத்தில் உள்ளது என சந்தேகிக்கப்படுகிறது.

ஆய்வாளர்கள் சொல்வது என்ன…?

குஜராத் மாநில தலைகர் அகமதாபாத்தில் உள்ள குஜராத் உயிரித் தொழில்நுட்ப ஆய்வு மையத்தின் (ஜிபிஆர்சி) இயக்குநர் ஆராய்ச்சியாளர் ஜி.சி.ஜோஷி இதுபற்றி பேசுகையில், வெளிநாடுகளில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளை பரிசோதித்தபோது அதில் எல்-வகை கொரோனா வைரஸ் கட்டமைப்பை அதிகம் ஒத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், உயிரிழப்பை அதிகமாக கொண்ட நாடுகளில் எல்லாம் எல்-வகை கட்டமைப்பை கொண்ட கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக இருந்து உள்ளது.

குறிப்பாக சீனாவின் உகான் நகரில் எல்-வகை கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக இருந்து உள்ளது. அங்கு, நோயாளிகளின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில் பலவற்றிலும் எல்-வகை கட்டமைப்பு வைரஸ்தான் அதிகமாக இருந்தது. எஸ்-வகை வைரஸ் கட்டமைப்பு பெரியளவுக்கு இருக்கவில்லை. எஸ்-வகை, எல்-வகை கொரோனா வைரஸ் இடையே அதிகமான வேறுபாடுகள் இருக்கிறது. வைரஸ் எண்ணிக்கை பெருகுவதிலும் தனது உருவத்தை மாற்றிவதிலும்கூட சதவீதத்தின் அடிப்படையில் வேறுபாடு இருக்கிறது.

கொரோனா வைரஸில் அதிகமான உயிரிழப்பை தரக்கூடியது எல்-வகை கட்டமைப்பை கொண்ட கொரோனா வைரஸ்தான் என்பது ஆய்வுகளில் தெரியவந்து உள்ளது. இதுவரை குஜராத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகளிடம் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில் அது எல்-வகை கொரோனா வைரஸ் கட்டமைப்பா என்று கண்டுபிடிக்கவில்லை. இதுதொடர்பாக ஆய்வும் நடத்தவில்லை. ஆனால், உயிரிழப்பு அதிகமாக இருந்தால் எல்-வகை கரோனா பாதிப்பு இருக்கும் எனக் கூறியுள்ளார்.

இதுபற்றி தொற்றுநோய் தடுப்பு வல்லுநர் அதுல் பட்டேல் செய்தியாளர்களிடம் பேசுகையில், குஜராத்தில் எஸ்-வகை கொரோனா வைரஸைவிடவும் எல்-வகை கொரோனா வைரஸ்தான் அதிகமாக இருக்கும் என்று சந்தேகிக்கிறோம். இதனால்தான் அதிகமான உயிரிழப்புகளை கொண்டுவர முடியும். எல்-வகை கொரோனா வைரஸ் பிறப்பிடம் சீனாவின் உகா நகரமாகும் எனத் தெரிவித்துள்ளார்.


கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தப்பிக்க தடுப்பு நடவடிக்கைகள் மட்டுமே கைவசம் உள்ளது. எனவே, நாம் அரசின் விழிப்புணர்வு தகவல்களை பின்பற்றி நம்மையும், நம் தேசத்தையும் பாதுகாப்போம்…