கொரோனா ஊரடங்கால் மரத்திலேயே வீணாகும் மாம்பழங்கள்… விவசாயிகள் வேதனை..

Read Time:4 Minute, 20 Second

கோடை காலம் ஆரம்பித்து விட்டால் கடைகளில் கவர்ந்து இழுக்கும் வகையில் மஞ்சள் நிறத்தில் குவிந்து விற்பனைக்கு ஜோராக நடக்கும். அதை ருசிக்க அனைவரும் போட்டி போட்டு வாங்கி செல்வர். ஆனால், இந்த ஆண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்டு உள்ளதால் மாம்பழத்துக்கும் உலை வைத்து விட்டது. தமிழகம் முழுவதும் விளையும் மாம்பழங்கள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும். இவ்வாண்டு கொரோனாவினால் உள்ளூரிலும், வெளிநாடுகளில் சந்தைபடுத்தல் என்பது மிகவும் மோசமான நிலையில் சிக்கியுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் உள்ள கிராமங்களில் சுமார் 5 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட பரப்பில் மா பயிரிடப்பட்டு இருக்கிறது. இதுபோக, உள்பகுதியிலும் பல ஏக்கர் அளவில் மா பயிரிடப்பட்டு உள்ளது. இங்கு, நீலம், கிளிமூக்கு, சப்போட்டா, பெங்களூரா , செந்துரம், இம்மாபாஸ், பங்கனப்பள்ளி, மல்லிகா, தோத்தாபரி நாட்டி உள்ளிட்ட பல்வேறு வகையான மாம்பழங்கள் இங்கு விளைவிக்கப்படுகின்றன.

இங்கிருந்து வெளிநாடுகளுக்கும், பிற மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. இப்பகுதியில் விளைவிக்கப்படும் மாம்பழம் மிகவும் ருசியாக இருப்பதால், வியாபாரிகள் வாங்க பெரும் ஆர்வம் காட்டுவார்கள். இந்த மா விவசாயம் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆயிரக்கணக்கானவர்கள் வேலை பெற்று வருகிறார்கள். தற்போது, மா மரஙகளில் மாங்காய்கள் நன்றாக காய்த்து அறுவடைக்கு தயாராக உள்ளன.

ஆனால், நேரத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்டு உள்ள ஊரடங்கால் வியாபாரிகள் யாரும் மாங்காய் வாங்க வருவது இல்லை. இதற்கிடையே மாங்காய் பறிக்க போதுமான ஆட்களும் கிடைப்பது இல்லை. இதுதவிர பறித்த மாங்காய்களை சந்தைக்கு கொண்டு செல்ல வாகன பற்றாக்குறை, விமான சேவை நிறுத்தத்தால் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியாமை என பல்வேறு பிரச்சினைகளால் விவசாயிகள் மாங்காய்களை பறிக்காமல் மரங்களிலேயே விட்டு உள்ளனர்.

இதனால், மாங்காய்கள், பழங்கள் மரங்களிலேயே வீணாகும் அவல நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும், பழங்களின் மனம் கவர்ந்து வனவிலங்குகளும் உள்ளே நடமாட தொடங்கிவிட்டன. இதனால், கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டு உள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்து உள்ளனர்.

இது தொடர்பாக விவாசாயிகள் பேசுகையில், ஏற்கனவே, பூக்கும் பருவத்தில் தொடர் மழை காரணமாக பூக்கள் உதிர்ந்து போனதால் விளைச்சல் பாதிக்கும் குறைவாகிவிட்டது. அதாவது ஒரு ஏக்கரில் சராசரியாக 10 டன் மாங்காய்கள் காய்க்கும். ஆனால், இவ்வாண்டு 3 முதல் 4 டன் வரையில் தான் மாங்காய்கள் காய்த்திருக்கிறது. ஏற்கனவே, விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் தற்போது ஊரடங்கால் ஏற்பட்டு உள்ள பாதிப்புகள் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

வனப்பகுதியை ஒட்டிய தோட்டங்களில் இன்னும் 10 நாட்கள் கடந்தால் மாம்பழங்களை வனவிலங்குகளே அழித்து விடும். எனவே, மாங்காய் சாகுபடி செய்து உள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கூறுகின்றனர்.