மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் ‘ககன்யான்’ திட்டம்: கல்வி நிறுவனங்களுக்கு இஸ்ரோ அழைப்பு.!

Read Time:3 Minute, 27 Second

மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் ‘ககன்யான்’ திட்டத்தை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளை ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனங்கள் வழங்கலாம் என்று இஸ்ரோ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) அரசுடன் இணைந்து வைரஸ் ஒழிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளது. மேலும், மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் ‘ககன்யான்’ திட்டத்திற்கான பணியையும் தொடர்கிறது. இதற்காக உள்நாட்டு தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்கான ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனங்களின் திட்டங்களுக்கு அழைப்பு விடுத்து உள்ளது.

இஸ்ரோவின் முதல் மனித விண்வெளி விமான ஆராய்ச்சி திட்டமாக இருப்பதால், இஸ்ரோ இந்த பணியை மேற்கொள்வதற்கு முன்னர் நீண்ட கால ஆராய்ச்சியை மேற்கொள்கிறது.

ஏற்கனவே, ககன்யான் பணியின் ஒரு பகுதியாக விண்வெளிக்கு அனுப்பப்படும் ‘வயோமித்ரா’ என்ற மனித ரோபோவை இஸ்ரோ உருவாக்கி உள்ளது.

தற்போது, ‘ககன்யான்’ திட்டத்தை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளை ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனங்கள் வழங்கலாம் என்று இஸ்ரோ அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் பேசுகையில், கொரோனா வைரசை தடுப்பதற்கான கருவிகளை வடிவமைப்பதுடன், மனிதனை விண்ணுக்கு அனுப்பி ஆராய்ச்சி செய்யும் ககன்யான் திட்டத்தை செயல்படுத்துவதில் முழுமுனைப்புடன் பணியாற்றி வருகிறோம்.

மனித விண்வெளி பயணங்களுக்கு தனித்துவமான தொழில்நுட்பங்கள் அவசியமாகும். விண்வெளி வீரர்களை பூமியின் சுற்றுப்பாதையிலும் அதற்கு அப்பாலும் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனங்களின் உதவியை நாடுகிறோம். கதிர்வீச்சு அபாய தன்மை மற்றும் தணிப்பு, விண்வெளி உணவு, வாழ்விடங்கள் மற்றும் மனித ரோபோ போன்ற துறைகளுக்கு உதவக்கூடிய தொழில்நுட்பங்கள் குறித்து நிறுவனங்களின் ஆலோசனைகளை பெறுவதற்கு இஸ்ரோ விரும்புகிறது.

குறிப்பாக வெப்ப பாதுகாப்பு அமைப்புகள், சுற்றுச்சூழல் கட்டுப்பாடு மற்றும் வாழ்க்கை ஆதரவு அமைப்புகள், பசுமை உந்துவிசை, குப்பைகள் மேலாண்மை, எரிசக்தி மற்றும் சேமிப்பு உள்ளிட்டவைகள் குறித்தான உதவிகளை நாடுகிறோம். உருவகப்படுத்தப்பட்ட ஈர்ப்பு, நீண்ட கால பயணங்களுக்கான மனித உளவியல், விண்வெளி மருத்துவம் மற்றும் நோயறிதல் போன்ற தொழில்நுட்பங்களில் சிறந்து விளங்கும் வல்லுனர்கள் தேவைப்படுகிறார்கள். இதுதொடர்பான ஆலோசனைகள் மற்றும் கருத்துகளை வருகிற ஜூலை 15-ந்தேதி வரை ஏற்றுக்கொள்கிறோம் என கூறியுள்ளனர்.