கொரோனா வைரஸ் தொற்றுக்கு புதிய அறிகுறி… மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை…! #Coronavirus

Read Time:3 Minute, 29 Second

சீனாவின் உகான் நகரத்தில் கடந்த ஆண்டு டிசம்பரில் முதன்முதலாக தோன்றிய கொரோனா வைரஸ், இப்போது விஸ்வரூபம் எடுத்து உச்சத்தில் உள்ளது.

உலகம் முழுவதும் உயிர்க்கொல்லி நோயான கொரோனா வைரஸ் மக்களை வேட்டையாடி வருகிறது. இதற்கிடையே கொரோனா நோய் தொற்றுக்கான அறிகுறிகள் தொடர்பாக தொடர்ந்து அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி அருகிறது.

இதுவரையில், காய்ச்சல், சளித்தொல்லை, வறட்டு இருமல், மூச்சு விடுவதில் சிரமம், உடல் சோர்வு ஆகியவை கொரோனா வைரஸ் தாக்குதலின் அறிகுறியாக இருக்கலாம் என்று நிபுணர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு வந்தது.

இந்த அறிகுறிகள் காணப்பட்டாலும் கொரோனா நோயாளிகளை முழுமையான மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய பிறகே இந்நோய் தொற்று ஏற்பட்டு உள்ளது என்பதை மருத்துவர்களால் உறுதி செய்ய முடிகிறது. ஏனென்றால், 80 சதவீத கொரோனா நோயாளிகளுக்கு அதன் வைரஸ் தொற்றுக்கான அறிகுறி எதுவும் வெளிப்படையாக தெரிவதில்லை.

மற்றொரு அறிகுறி

இதற்கிடையே கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் வாசனை நுகர்வு திறன், சுவை அறியும் தன்மை போன்றவற்றை இழந்து காணப்படுவதும் அறிகுறிகளாகும் என சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட இன்னொரு ஆய்வில் தெரிய வந்தது.

இந்நிலையில், கொரோனாவினால் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான இத்தாலியில் மருத்துவ நிபுணர்கள் கொரோனா நோயாளிகள் குறித்த புள்ளி விவரங்களின் அடிப்படையில் ஒரு ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.

அதன் முடிவில், கொரோனா நோயை வெளிக்காட்டும் மற்றொரு அறிகுறியை அவர்கள் கண்டறிந்து உள்ளனர். அதாவது, கொரோனவால் பாதிக்கப்பட்ட 5 பேரில் ஒருவருக்கு உடலில் ஆங்காங்கே திட்டுத்திட்டாக தடித்த சிவந்த நிறம் தென்பட்டு உள்ளது என குறிப்பிட்டுள்ளனர். இது, தோல் அரிப்பாலோ அல்லது ஒவ்வாமையாலோ ஏற்படுவது கிடையாது. இந்த அறிகுறிகள் தென்பட்ட பிறகே 2, 3 நாட்கள் கழித்து அவர்களுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி உருவாகி இருக்கிறது என்று உறுதியாக நம்புகிறோம் என்று மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.

கொரோனா நோயாளிகளின் உடலில் இந்த மாற்றம் திடீரென ஏற்பட்டு உள்ளது. அதற்கு முன்பு அவர்களுக்கு அப்படி ஏற்பட்டது கிடையாது. உடலில் தடிப்புகள் உருவான கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை இப்போது அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக இன்னும் விரிவாக ஆய்வு செய்து வருகிறோம். பொதுமக்கள் தங்கள் வீட்டு உறுப்பினர்களிடம் இதுபோன்று ஏற்படும் திடீர் அறிகுறிகளை நன்கு கவனிக்க வேண்டும் என தெரிவிக்கின்றனர் ஆய்வில் ஈடுபட்ட நிபுணர்கள்.