கொரோனா தொற்றின் லேசான அறிகுறி கொண்டவர்கள் தங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்வதற்கான புதிய வழிகாட்டுதல்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் ஊரடங்கையும் மீறி கொரோனா வைரஸ் நோய்த்தொற்றில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.
கொரோனா வைரஸ் எளிதில் பரவக்கூடிய ஒரு தொற்று நோய்யாகும். சீனாவில் தொடங்கிய இந்த நோய் தொற்று தற்போது உலக நாடுகளை வாட்டி வதைக்கிறது. இந்தியாவில் இதுவரை 31 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் 1000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர்.
பொதுவாக சளி, காய்ச்சல், இருமலினால் பாதிக்கப்பட்டவர்கள் கவனத்துக்கு வந்தால் அவர்களை சுகாதாரத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பது வழக்கமாக இருக்கிறது. சளி பாதிப்பு கொரோனா அறிகுறியாக மாறும் பட்சத்தில், உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் தனிமை வார்டுகளில் அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த நிலையில் லேசான கொரோனா அறிகுறி கொண்டவர்கள், வீடுகளிலேயே தங்களை தனிமைப்படுத்தி கொள்ளலாம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தனிமைப்படுத்திக்கொள்வதற்கான வசதி, அவர்களது வீடுகளில் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அவர்கள் அரசு கண்காணிப்பு அதிகாரியுடனும், ஒரு மருத்துவமனையுடனும் தொடர்பில் இருக்க வேண்டும். அத்துடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
அவர்கள் ஆரோக்ய சேது செயலியை மொபைல்களில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.
அறிகுறி உள்ளவரை கண்காணிப்பு குழு தொடர்ந்து கண்காணித்து, அவர்களின் உடல்நிலை குறித்த தகவல்களை மாவட்ட கண்காணிப்பு அதிகாரியிடம் வழங்க வேண்டும்.
சுவாசிப்பதில் சிரமம், மார்பில் தொடர்ந்து வலி போன்ற கடுமையான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
என சுகாதாரத்துறை வழிகாட்டுதல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.