எங்களுடைய கருவிகளை தரமற்றது என்காதீர்கள்… சீனா காட்டம் …!

Read Time:4 Minute, 17 Second

சீன நிறுவனங்கள் தயாரித்த கொரோனா நோய் தொற்றை கண்டறியும் ரேபிட் டெஸ்ட் கருவிகளை தரமற்றது என்று முத்திரை குத்துவது நியாயமல்ல என்று சீனா கூறியுள்ளது.

கொரோனா பாதிப்பை கண்டறியும் கருவிகளை 2 சீன நிறுவனங்களிடம் இருந்து இந்தியா கொள்முதல் செய்தது. ஆனால், அந்த கருவிகள் தவறான முடிவுகளை காட்டியதால் பெரும் அச்சம் ஏற்பட்டது. உலகம்முழுவதும் சீன கருவிகள் இதுபோன்ற தரமற்றவை என்ற குற்றச்சாட்டை சந்தித்து வருகிறது. இந்நிலையில், அவற்றை பயன்படுத்தாமல் திருப்பி அனுப்புமாறு மாநில அரசுகளிடம் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.) கூறியது.

இதுதொடர்பாக நாட்டின் உயரிய சுகாதார ஆராய்ச்சி அமைப்பான இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.), அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கு ஒரு கடிதம் எழுதியது.

அதில், குவாங்சோ வோண்ட்போ பயோடெக் லிமிடெட், சுஹாய் லிவ்சன் டயாக்னஸ்டிக்ஸ் ஆகிய 2 சீன நிறுவனங்கள் வினியோகித்த கொரோனா பரிசோதனை கருவிகளை சோதித்து பார்த்தோம். அதில், பரிசோதனை முடிவுகள் தவறாக வந்தது. எனவே, மேற்கண்ட நிறுவனங்களிடம் வாங்கிய கருவிகளை பயன்படுத்துவதை மாநிலங்கள் நிறுத்த வேண்டும். அவற்றை சீனாவுக்கு திருப்பி அனுப்ப வசதியாக, எங்களுக்கு அனுப்பி வையுங்கள் என கூறப்பட்டிருந்தது. இதற்கிடையே, இந்த கருவிகளுக்கு ஐ.சி.எம்.ஆர். பணம் கொடுக்காததால், மத்திய அரசுக்கு ஒரு ரூபாய் கூட நஷ்டம் இல்லை என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.

இந்நிலையில், இவ்விவகாரம் குறித்து டெல்லியில் உள்ள சீன தூதரகம் பதில் அளித்து உள்ளது. சீன தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வைரஸ் என்பது மனித குலத்தின் பொது எதிரியாகும். கூட்டாக செயல்படுவதன் மூலம்தான் அதனை எதிர்க்கொள்ள முடியும். கொரோனா வைரஸ் தோன்றியதில் இருந்து இந்தியா-சீனா இடையே நல்ல தகவல் தொடர்பும், ஒத்துழைப்பும் இருந்து வருகிறது. இந்தியாவின் நிலையை அறிந்து, நோய் கட்டுப்படுத்துவது தொடர்பான தனது அனுபவங்களை இந்தியாவிடம் சீனா பகிர்ந்தது.

மருத்துவ உபகரணங்களை நன்கொடையாக வழங்கியது. சீனாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் மருத்துவ உபகரணங்களின் தரத்துக்கு மிகவும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அப்படி இருக்கும்போது, சில தனிநபர்கள், சீன பொருட்கள் தரமற்றவை என்று முத்திரை குத்துவது நியாயமானது கிடையாது, இது பொறுப்பற்ற செயலாகும். முன்கூட்டியே தவறான எண்ணத்தை உருவாக்கிக்கொண்டு சொல்கிறார்கள். இந்த கருவிகள் ஐரோப்பா, ஆசியா, லத்தீன் அமெரிக்கா ஆகியவற்றில் உள்ள பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளன.

அந்த நாடுகள் எல்லாம் இக்கருவிகளை அங்கீகரித்து உள்ளன. அப்படியிருக்கையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடத்திய மதிப்பீடும், அதன் அடிப்படையில் எடுத்த முடிவும் எங்களுக்கு மிகுந்த கவலையை அளிக்கிறது. சீனாவின் நல்லெண்ணத்தையும், உண்மைத்தன்மையையும் இந்திய தரப்பு மதித்து நடக்கும் என நம்புகிறோம். சீன நிறுவனங்களுடன் தகவல் தொடர்பை வலுப்படுத்தி, பிரச்சினைக்கு நியாயமாகவும், உரிய முறையிலும் தீர்வு காணும் என்றும் நம்புகிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.