கடினமான சூழ்நிலையிலும் தனது ரூ .1 இட்லி விலையை உயர்த்த மறுத்தார்! கோயம்புத்தூரின் இட்லி பாட்டி கமலாதாள்..! #IndiaFightsCorona

Read Time:2 Minute, 31 Second

கொரோனாவினால் ஏற்பட்டுள்ள கடினமான சூழ்நிலையிலும் இட்லி விலையை உயர்த்த போவதில்லை என்று கூறுகிறார் இட்லி பாட்டி, பாட்டிமா என்று செல்லமாக அழைக்கப்படும் மூதாட்டி கமலாதாள்.

தற்போது உள்ள விலைவாசி மூலம் ஒரு ரூபாய்க்கு ஒரு நல்ல மிட்டாய் கூட வாங்க முடியாத நிலையில், கோவை மாவட்டம் வடிவேலம்பாளையம் கிராமத்தை சேர்ந்த 82 வயதான மூதாட்டி கமலாதாள் கடந்த 30 வருடங்களாக இட்லி வியாபாரம் செய்து வரும் அவர் ஒரு ரூபாய்க்கு இட்லி விற்று வருகிறார். முன்பு 50 பைசாவிற்கு ஒரு இட்லி விற்று வந்த கமலாதாள் சில வருடங்களுக்கு முன்பு தான் ஒரு இட்லி-யின் விலையை ஒரு ரூபாய் ஆக்கியுள்ளார்.

ஜி.எஸ்.டி, விலைவாசி உயர்வு போன்ற காரணங்களைக் காட்டி ஹோட்டல்கள் அதிகப்படியான விலைக்கு உணவுகளை விற்கிறார்கள். ஆனால் விலைவாசி உயர்ந்த போதும் சரி தற்போது ஊரடங்கினால் ஏற்பட்டுள்ள உணவு தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு சூழ்நிலையிலும் தான் இட்லியின் விலையை கூட்ட போவதில்லை என கூறுகிறார் கமலாதாள்.

மேலும் தனக்கு நேரிடையாக வந்து பலர் உதவி செய்கின்றனர். அதனால் என்னால் 1 ரூபாய்க்கு இட்லி விற்க முடியும் என்று கூறுகிறார். கோவை பாரதியாா் பல்கலைக்கழகத்தின் சாா்பில் ரூ.5 ஆயிரமும், அரிசி, மளிகைப் பொருள்களும் வழங்கப்பட்டன. அதேபோல், ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரி சாா்பிலும் நிவாரண உதவி வழங்கப்பட்டது.

ஊரடங்கால் சொந்த ஊருக்கு போகமுடியாமல் தவித்து வரும் தொழிலாளர்களுக்கும் மற்றும் பல உள்ளூர் ஏழை மக்களுக்கும் ஒரு ரூபாய்க்கு இட்லி விற்று வருகிறார். இப்போதும் கிட்டத்தட்ட 400க்கும் மேற்பட்டவர்கள் தினமும் கமலாதால் கடைக்கு வந்து சாப்பிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நல்ல உள்ளம் கொண்ட கமலாதால் பாட்டி உடல் ஆரோக்கியத்துடன் தமது சேவைகள் தொடர வாழ்த்தி வேண்டுவோம்.