இந்தியாவில் கொரோனா வேகம் அதிகரிப்பு… நம் முன்னால் இருக்கும் பாதுகாப்பு கேடயம் இதுவே:-

Read Time:9 Minute, 59 Second

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் தொடங்கியதும் அதனை கட்டுப்படுத்தும் வகையில் இரண்டு கட்டமாக 40 நாட்கள் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது. இருப்பினும் கொரோனாவின் வேகம் குறைந்தாக தெரியவில்லை. இந்தியாவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்கிறது. இந்தியாவில் இதுவரையில் கொரோனாவினால் புதியதாக ஒரு நாளில் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை 1500-க்கு மேலாக தொடர்ந்தது. ஆனால், தற்போது இந்த எண்ணிக்கையானது 2 ஆயிரத்தை கடந்து செல்கிறது.

சென்னை, மும்பை உள்ளிட்ட நகரங்களில் கொரோனாவின் வேகம் அதிகரித்து உள்ளது.

இது இந்தியா இதுவரையில் மேற்கொண்ட நடவடிக்கைக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் முன் நின்று மேற்கொள்ளும் கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் வெற்றிப்பெற வேண்டும் என்றால் மக்களாகிய நாம் முதலில் அவர்களுக்கு துணையாக நிற்க வேண்டும். இல்லையெனில் அவர்களுடைய போராட்டம் தியாகங்களுக்கு எந்த ஒரு பயனும் இல்லாமல் போகும். மேலும், மோசமான விளைவுகளையே சந்திக்க நேரிடும்.

இந்தியாவில் எண்ணிக்கையானது வேகம் கொண்டால் எதிர்க்கொள்ள அத்தனை அதிகமான மருத்துவ பணியாளர்கள் கிடையாது. உயிரை பிணயம் வைத்து போராடும் அவர்கள் வெற்றிப்பெற நாம் கடைபிடிக்க வேண்டியது அரசின் வழிமுறைகளை தான். இப்போதும் நம்மையும், நமது தேசத்தையும் பாதுகாக்கும் கேடயம் நம் முன்னால் தான் உள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதும், அதனை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுக்கள் போர்க்கால அடிப்படையில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டன. கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த மத்திய அரசு, இருகட்டங்களாக தொடர்ந்து 40 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. தற்போது, மூன்றாம் கட்ட ஊரடங்குயை மத்திய அரசு அறிவித்து உள்ளது. ஆனாலும், கொரோனா வைரஸ் தொற்று பரவலில் மாற்றம் தென்படவில்லை.

இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40 ஆயிரம் நோக்கி செல்கிறது. பலி எண்ணிக்கையும் ஆயிரத்தை தாண்டி செல்கிறது. கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதுமே “மக்கள் அனைவரும் வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள்; தேவையற்ற பயணங்களை முற்றிலும் தவிருங்கள்; வெளியே வரும் பட்சத்தில் முகக்கவசம் அணியுங்கள்; சமுக இடைவெளியை பின்பற்றுங்கள்,” என தொடர்ச்சியாக அரசுக்கள் தரப்பில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.

கொரோனா சமூக பரவலாக மாறி விடுமோ? என்ற அச்சத்தில் அரசுக்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள், விழிப்புணர்வு தகவல்கள் அனைத்தும் காற்றில் பறக்கவிடப்பட்டது காய்கறி மார்க்கெட், இறைச்சி, மீன்கடைகள் என அனைத்து பகுதிகளிலும் எச்சரிக்கையை மீறி அதிகமாக மக்கள் கூடினர், இன்னும் கூடுகிறார்கள். இதனுடைய விளைவுதான் கொரோனாவின் கரங்கள் உயர காரணமாகிறது.

இப்போதாவது நம்மையும், நமது நாட்டையும் பாதுகாக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவோம். சமூக இடைவெளியை கடைபிடிப்பது, முகக்கவசம் அணிவது, அடிக்கடி கைகளை சோப்பினால் கழுவுதல் போன்ற முக்கிய பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவோம். அவை ஏன் முக்கியமானது என்பதையும் தெரிந்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

உலகையே மிரட்டிவரும் கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. உலகம் முழுவதும் மக்கள் கொத்துக்கொத்தாக உயிரிழந்து வருகிறார்கள். ஏற்கனவே பாதிக்கப்பட்டு மீண்டவர்களுக்கு மீண்டும் பாதிப்பு ஏற்படாது என உத்தரவாதம் கிடையாது. மருந்து கிடைக்க அதிகாரப்பூர்வமான காலக்கெடு எதுவும் கிடையாது. மனித குலத்தையே நாசம் செய்வது போன்று கொரோனா வைரஸ் உள்ளது. எனவே, தடுப்பு, பாதுகாப்பு நடவடிக்கையை நாம் பின்பற்ற வேண்டியது மிகவும் அவசியமாகும்.

முதலில் சமூக இடைவெளியை பின்பற்றுவோம்.

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவரை ஆரோக்கியமாக இருப்பவர் தொடர்புக் கொள்ளும் போது அவருக்கும் தொற்று ஏற்படுகிறது. பாதிக்கப்பட்டவர் இருமும் போதும், தும்மும் போதும், பேசும்போதும் வெளியேறும் நீர்த்துளிகளில் வைரஸ் இருக்கும். இப்படி வெளியேறும் நீர்துளிகளில் பெரியதாக இருப்பது நிலத்தில் விழுந்துவிடும். ஆனால், சிறு துளிகள் காற்றில் பயணம் செய்கிறது. இது நம்மை அடையாமல் இருக்கவே வேண்டும் என்றால் ஒருவரிடம் இருந்து 6 அடி இடைவெளியில் இருக்க வேண்டும் என விஞ்ஞானிகள் ஆலோசனை வழங்குகிறார்.

இப்படி சிறு நீர்துளிகளில் இருக்கும் வைரஸ்களால் சுமார் 30 நிமிடங்கள் உயிர் வாழ்கிறது. எனவே தான் விஞ்ஞானிகளும், மருத்துவர்களும் சமூக இடைவெளியே கடைபிடிக்க வேண்டும் என பரிந்துரை செய்து உள்ளனர். பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து விலகியிருப்பது மட்டும் உங்களுடய பாதிப்பை தடுக்க வழியாகும். காற்றில் பயணம் செய்யும் நீர்த்துளிகள் நீர்த்துப்போகிற போது ஆபத்து குறையும்.

இருப்பினும், இது எப்போதும் பயனளிப்பதாக இருக்காது என எச்சரிக்கும் விஞ்ஞானிகள், முகக்கவசம் அணிய வேண்டும் என வலியுறுத்துகிறார்கள். இதற்கிடையே ஏற்கனவே நோயினால் பாதிக்கப்பட்டு அதற்கான அறிகுறியை கொண்டிருக்காதவர்களாக இருந்தால் நிலைமை மிகவும் மோசமாகும். இவர்கள் மூலம் பலருக்கும் பரவும் அபாயம் உள்ளது. (ஒருவருக்கு நோய் இருக்கும். ஆனால் அவர் அதனை உணர்ந்து இருக்க மாட்டார். அப்போது அவர் வெளியே நடமாடுகையில் அவர் மூலம் பலருக்கு பரவும்.) இப்படி இந்தியாவில் 80 சதவீத பாதிப்புக்கள் தொற்றுக்கான அறிகுறிகள் எதுவும் இல்லாமலே உறுதி செய்யப்பட்டு உள்ளது.

சமூக இடைவெளியை கடைபிடிப்பது கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பாக இருக்க மிகவும் முக்கியமானது.

இதனுடன் முகக்கவசம் அணிதல், கைகளை சோப்பினால் அடிக்கடி கழுவதல் போன்ற பிற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதும் அவசியமானது. இந்தியாவில் ஊரடங்கு தளர்த்தப்பட்டால் கொரோனா வைரஸ் தொற்றை எதிர்க்கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

எனவே, சமூக இடைவெளியை கடைபிடிப்பதுடன் இவற்றையும் முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டும். முகக்கவசம் அணிவது கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தப்பிக்க உதவுகிறது. நம்முடைய மூக்கு மற்றும் வாய் பகுதியில் வைரஸ் இருக்கும் நீர்த்துளிகள் வெளியேறுவதை தடுக்கிறது, காற்றில் உள்ள இருக்கும் வைரஸ் உள்ளே இறங்குவதையும் தடுக்கிறது.

மேலும், உங்களுடைய முகத்தை நீங்கள் தொடுவதை தடுக்கிறது. நீங்கள் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தால், உங்கள் மூலம் மற்றவர்களுக்கு பரவுவதற்கான வாய்ப்பு குறைகிறது.

மேலும், உங்கள் கைகளை முடிந்தவரையில் அடிக்கடி கழுவுவதை வழக்கமாக்கி கொள்ளுங்கள். ஏனென்றால், நீங்கள் பாதிக்கப்பட்ட நோயாளி தொட்டப்பகுதியினை தொட்டிருக்கலாம் அல்லது நோயாளி தும்மும் போது வெளியேறிய பெரிய நீர்த்துளி இருக்கும் பொருளின் மேற்பரப்பினை தொட்டிருக்கலாம். இதனை தொட்ட பின்னர் மூக்கு மற்றும் வாய் பகுதியில் கையை வைக்கும் போது வைரஸ் எளிதாக உடலுக்குள் சென்றுவிடும்.

எனவே, சோப்பினால் அடிக்கடி கைகளை கழுவுவதால் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பை குறைக்கிறது. இவையனைத்தும் முற்றிலும் வைரசை தடுக்கும் என்பது நம்முடைய நடவடிக்கைகளில் உள்ளது. இப்போதைக்கு நம் முன்னால் இருக்கும் பாதுகாப்பு கேடயம் தடுப்பு நடவடிக்கையாகும். இவற்றை பின்பற்றுங்கள். மேலும் தேவையற்ற பயணங்களை தவிருங்கள். வீட்டை விட்டு வெளியே வராதீர்கள். கூட்டமாக கூடி பேசாதீர்கள்.