பலத்த காற்று காரணமாக தனுஷ்கோடி செல்லும் சாலையை கடல் மணல் முடி உள்ளது..

Read Time:2 Minute, 56 Second

புயலால் அழிந்து போன தனுஷ்கோடி, ராமேசுவரத்தில் இருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.

இங்கு எம்.ஆர். சத்திரம் கடற்கரையில் இருந்து 9 கிலோ மீட்டர் தூரம் வரை உள்ள அரிச்சல்முனை கடற்கரை வரையில் புதிதாக சாலை அமைக்கப்பட்டு, அதனுடைய பாதுகாப்பு கருதி இருபுறமும் கற்களால் ஆன தடுப்பு சுவர்களும் அமைக்கப்பட்டு உள்ளன.

இந்நிலையில் ராமேசுவரம் தனுஷ்கோடி பகுதியில் பலத்த காற்று காரணமாக சாலையை கடல் மணல் மூடி வருகிறது. தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் தனுஷ்கோடி எம்.ஆர்.சத்திரம், கம்பிப்பாடு, அரிச்சல்முனை சாலை உள்ளிட்ட கடற்கரை பகுதிகள் வெறிச்சோடி உள்ளது. ராமேசுவரம், தனுஷ்கோடி பகுதியில் கடந்த சில நாட்களாக வழக்கத்திற்கு மாறாக பலத்த காற்று வீசி வருகிறது.

இதனால் முகுந்தராயர்சத்திரத்தில் இருந்து அரிச்சல்முனை வரை சாலையே தெரியாத அளவிற்கு பல இடங்களில் கடற்கரை மணல் காற்றில் அடித்து வரப்பட்டு, சாலையை முடி உள்ளது. இதை அந்த வழியாக சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனங்களில் சென்று வரும் மீனவர்கள் ஆச்சர்யமாக பார்க்கிறார்கள். மேலும் கடல் சீற்றம் காரணமாக அரிச்சல்முனை பகுதியில் கடல் நீர் கரையை நோக்கி அதிக தூரம் வருவதால், மணல் பரப்பு பகுதி நாளுக்குநாள் குறைந்து கொண்டே செல்லும் சூழலும் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ராமேசுவரம் தனுஷ்கோடி பகுதியில் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு கடந்த செப்டம்பரில் தொடர்ந்து சூறாவளி காற்று வீசியது. அப்போது பலத்த சூறாவளி காற்று காரணமாக எம்.ஆர்.சத்திரம் பகுதியில் இருந்து அரிச்சல்முனை கடற்கரை வரை மணல் குவிந்து சாலையை மூடியது. அதிலும் குறிப்பாக அரிச்சல்முனை பகுதியில் தடுப்பு சுவரையும் தாண்டி மூடியது. இந்த மணலை அவ்வப்போது அள்ளினாலும் அள்ளஅள்ள மீண்டும் சாலையில் மணல் குவிந்தது. சாலையில் சுமார் 3 அடி உயரத்திற்கு மணல் குவியலாக இருந்தது, பின்னர் அவை அகற்றப்பட்டது.

இயற்கையாகவே தனுஷ்கோடி பகுதியில் பலத்த காற்று வீசுவதும், இந்த காற்றின் வேகத்தின் போது மணல் புழுதியாக பறந்து வந்து சாலைகளை முடுவதும் வழக்கமான ஒன்று என மீனவர்கள் கூறுகின்றனர்.