திசையன்விளை பகுதியில் முந்திரி கொட்டைகளை குறைந்த விலைக்கு வாங்கும் வியாபாரிகள்…!

Read Time:4 Minute, 40 Second

நெல்லை மாவட்டத்தில் திசையன்விளை, இடையன்குடி, குட்டம், உவரி, இடைச்சிவிளை, காரிகோவில், அழகியவிளை சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தேரிப்பகுதி பரந்து விரிந்து காணப்படுகிறது.

இதேபோன்று தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் அருகே தேரிக்குடியிருப்பு, நாலுமாவடி, நாசரேத் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் சுமார் 12 ஆயிரம் ஏக்கரில் தேரிப்பகுதி காணப்படுகிறது.

இந்த தேரி பகுதிகள் கடல் மட்டத்தில் இருந்து 15 மீட்டர் முதல் 25 மீட்டர் வரையிலான உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு மண் வளம் 3 அடுக்குகளாக அமைந்து உள்ளது. தரையின் மேல்பகுதியில் உள்ள முதல் அடுக்கு மண் 2 ஆயிரம் ஆண்டுகளும், 2-வது அடுக்கு மண் 5 ஆயிரம் ஆண்டுகளும், கடைசி அடுக்கு மண் 8 ஆயிரம் ஆண்டுகளும் பழமைவாய்ந்ததாக கூறப்படுகிறது. இம்மண் மழைநீரை உறிஞ்சி தேக்கும் தன்மை கொண்டது. தேரிப்பகுதியில் முந்திரி மரங்கள் வளர்க்கப்படுகிறது.

முந்திரி மரக்கன்றுகள், 5 ஆண்டுகளில் இருந்து பயனை தருகிறது. ஆண்டுதோறும் கோடைக்காலத்தில் முந்திரி பழங்கள் விளைச்சலும், கொட்டைகள் விற்பனையும் அமோகமாக இருக்கும். பழுத்த பழங்களில் இருந்து கொட்டைகளை தனியாக சேகரித்து, வெயிலில் காய வைத்து, திசையன்விளை பஜாரில் உள்ள மொத்த கடைகளுக்கு விவசாயிகள் விற்பனைக்கு அனுப்புகின்றனர்.

அங்கிருந்து வியாபாரிகள் முந்திரி கொட்டைகளை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள முந்திரி பருப்பு தொழிற்சாலைகளுக்கும், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்கின்றனர். உடைத்த முந்திரி பருப்பு ஒரு கிலோ ரூ.1,500 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இதனால் திசையன்விளை பஜாரில் உள்ள முந்திரி கொட்டை கொள்முதல் செய்யும் மொத்த கடைகள் திறக்கப்படாத நிலை ஏற்பட்டது. இதனால் முந்திரி மரங்களில் இருந்து பழங்களை பறித்து, அதன் கொட்டைகளை சேகரித்து விற்பனைக்கு அனுப்ப முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு காலம் முடிந்த பின்னர் முந்திரி கொட்டைகளை நல்ல விலைக்கு விற்று விடலாம் என்று கருதி விவசாயிகள், முந்திரி பழங்களை பறித்து, அதன் கொட்டைகளை தனியாக சேகரித்து வெயிலில் காய வைக்கிறனர். இருப்பினும் பெரும்பாலான விவசாயிகள் வருமானமின்றி தவிப்பதால், அதனை விற்பனை செய்கின்றனர். ஆனால், சில வியாபாரிகள் அடிமாட்டு விலைக்கு விவசாயிகளிடம் முந்திரி கொட்டைகளை கொமுதல் செய்கின்றனர்.

இதுதொடர்பாக விவசாயிகள் கூறுகையில், தோல் நீக்காத முந்திரி கொட்டைகளை இதுவரையில் ஒரு கிலோ ரூ.150 வரையிலும் வியாபாரிகள் கொள்முதல் செய்து வந்தனர். தற்போது ஊரடங்கு காரணமாக, தொழிற்சாலைகள் திறக்கப்படாததாலும், போக்குவரத்து பாதிக்கப்பட்டதாலும், தோல் நீக்காத முந்திரி கொட்டைகளை ஒரு கிலோ ரூ.70-க்குதான் வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். இதனால் பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. முந்திரி கொட்டைகளுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்து அரசே கொள்முதல் செய்து, தொழிற்சாலைகளுக்கு வழங்க வேண்டும்.

இடையன்குடியில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு முந்திரி பருப்பு தொழிற்சாலை செயல்பட்டது. பின்னர் அதனை மூடி விட்டனர். எனவே, திசையன்விளை பகுதியில் மீண்டும் முந்திரி பருப்பு தொழிற்சாலை தொடங்கினால், விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும் என தெரிவிக்கின்றனர்.