கொரோனா வைரசின் பிடியில் இருந்து எப்படி தப்பிப்பது என்று தெரியாமல் உலக நாடுகள் விழிபிதுங்கி நிற்கின்றன. சமூக விலகல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை தவிர்த்து கொரோனாவிடம் இருந்து தப்பிக்க வழியில்லை. எந்தவொரு தடுப்பு மருந்தும் கண்டுபிடிக்கவில்லை என்பதால் சமூக விலகலை உறுதி செய்யும் வகையிலான ஊரடங்கை நம்பியே உலகம் இயங்கி கொண்டிருக்கிறது. இந்தியாவிலும் இந்நடவடிக்கையே மேற்கொள்ளப்படுகிறது.
இருப்பினும் மக்களின் ஒத்துழைப்பின்றி கொரோனாவின் கரங்கள் பலமாகி வருகிறது.
இந்தியாவில் கொரோனாவினால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நாட்டில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 40 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தினமும் வெளியிடும் புள்ளி கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. இன்னும் இந்த வைரசின் உண்மையான குணத்தை மக்கள் அறியவில்லை என்பதற்கு இதுவே உதாரணமாகும். இந்த நிலையில் ஊரடங்கு நீட்டிப்புக்கு மத்தியில் கொரோனா புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்ட புள்ளி விவரம், இந்தியாவில் இதுவரை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் (கடந்த 24 மணி நேரங்களில்) மட்டும் 2,644 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளதாக காட்டுகிறது. இதனால் நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 39,980 ஆக உள்ளது.
கொரோனா பாதிப்பால் புதிதாக 83 பேர் உயிரிழந்ததால், பலியானவர்கள் எண்ணிக்கையும் 1,301. ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புக்கு இடையே சற்று நிம்மதி அளிக்கும் விஷயமாக குணமடைபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. அதன்படி, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 10,600 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
நாடு முழுவதும் பாதிக்கப்பட்டுள்ள 39,980 ஆயிரம் பேரில் சுமார் 12,296 பேர் மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர்கள். அங்கு 521 பேர் கொரோனா வைரசினால் உயிரிழந்து உள்ளனர். குஜராத்தில் இந்த பாதிப்பு எண்ணிக்கை 5054 ஆக உள்ளது. டெல்லியில் 4122 ஆக உள்ளது. மத்திய பிரதேசத்தில் 2846 பேருக்கும் பாதிப்பு உள்ளது. தமிழகத்தில் ஒரே நாளில் 231 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,757 ஆக உயர்ந்து உள்ளது. இதனால் கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்கள் பட்டியலில் 6-வது இடத்தில் இருந்த தமிழகம் 5-வது இடத்துக்கு சென்று உள்ளது.
ராஜஸ்தானில் 2770 பேரும், உத்தரபிரதேசத்தில் 2487 பேரும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆந்திரா (1525) மற்றும் தெலுங்கானாவிலும் (1063) ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகாவில் 601 பேரும், கேரளாவில் 499 பேரும் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி உள்ளனர்.