வெளிநாடுகள், மாநிலங்களிலிருந்து தமிழகம் திரும்ப விரும்புவோர் பதிவு செய்ய இணையதளம் தொடங்கப்பட்டது.

Read Time:3 Minute, 45 Second

வெளிநாடுகள், இந்தியாவில் பிற மாநிலங்களில் சிக்கியிருக்கும் தமிழர்கள் சொந்த மாநிலம் திரும்ப விரும்பினால் தங்களுடைய விபரங்களை பதிவு செய்ய இணையதளம் அரசால் தொடங்கப்பட்டு உள்ளது.

https://nonresidenttamil.org/ இணையதளத்திற்கு சென்று தமிழகம் திரும்ப விரும்புவோர் தங்களுடைய விபரங்களை பதிவு செய்துக்கொள்ளலாம்.

ஊரடங்கின் காரணமாக தமிழ்நாட்டிலிருந்து சென்றவர்கள் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேற்படி நபர்கள் தமிழ்நாடு திரும்ப வருவது குறித்த விபரங்களை இணையதளத்தில் பதிவு செய்யலாம். தமிழ்நாட்டிற்குள் வரும் போது தங்கள் மற்றும் தங்கள் குடும்ப நலனை கருதி பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட கோவிட்-19 பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு தாங்கள் உட்படுத்தப்படுவீர்கள் என்ற விபரமும் தெரிவிக்கப்படுகிறது என தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழக அரசால் நீலம், பச்சை மற்றும் சிகப்பு நிறத்தினால் மூன்று ‘லிங்’ இணையதளத்தில் கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த லிங்கை கிளிக் செய்து நீங்கள் உங்களுடைய விபரங்களை பதிவு செய்ய வேண்டும். வெளிநாட்டில் உள்ள தமிழர்கள் நீல நிறத்திலான பட்டனை கிளிக் செய்து விபரங்களை பதிவு செய்ய வேண்டும். கோவிட்-19 காரணமாக பல்வேறு நாடுகளில் இருந்து தாய்நாடு திரும்ப விருப்பம் உள்ள வெளிநாடு வாழ் தமிழர்களின் விவரங்களை அறிவதற்காகவும், தனிமைப்படுத்துவதற்கான வசதிகளை ஏற்படுத்துவதற்காகவும் இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் தேவைப்படின் சம்மந்தப்பட்ட அரசுத் துறைகளிடம் பகிரப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வெளிநாட்டில் இருந்து திரும்ப விரும்புபவர்களின் பாஸ்போர்ட் மற்றும் விசா விவரங்கள் தவிர்த்து, விண்ணப்ப படிவத்தில் “நீங்கள் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனையை மேற்கொண்டுள்ளீர்களா? உங்களுடன் தங்கியிருக்கும் உங்கள் குடும்ப உறுப்பினர்/நபருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளதா? நாடு திரும்பும்போது கொரோனா பரிசோதனைக்கு பின்னர் தமிழ்நாட்டில் உள்ள உங்கள் வீட்டில் சுய தனிமைப்படுத்தலுக்கான கழிப்பறை வசதிகளுடன் ஒரு தனி அறை இருக்கிறதா? “ உங்கள் உடல்நலம் மற்றும் உங்கள் குடும்ப உறுப்பினர்களின் நலனுக்காக நீங்கள் தனிமைப்படுத்தப்பட்டால், உங்கள் விருப்பம் என்னவாக இருக்கும்? என்பன உள்ளிட்ட கேள்விகள் கேட்கப்பட்டு உள்ளது.

வெளி மாநிலங்களில் உள்ளவர்கள் தமிழகம் திரும்ப விரும்புபவர்கள் பச்சை நிற பட்டனை கிளிக் செய்ததும் வரும் விண்ணப்பத்தில் தங்களுடைய விபரங்களை தெரிவிக்க வேண்டும். அதேபோன்று தமிழகத்தில் இருக்கும் பிற மாநிலத்தவர்கள் தங்களுடைய சொந்த மாநிலம் திரும்ப விரும்பினால் சிவப்பு நிறத்திலான பட்டனை கிளிக் செய்து வரும் விண்ணப்பத்தில் விபரங்களை தெரிவிக்க வேண்டும்.