இந்தியாவிற்கு மற்றொரு சோதனை… ஆப்பிரிக்க ஸ்வைன் ஃப்ளூ வைரசும் சீனாவிலிருந்து நுழைந்தது…!

Read Time:4 Minute, 22 Second

இந்தியாவிற்கு மற்றொரு சோதனையாக அசாமில் ஆப்பிரிக்க ஸ்வைன் ஃப்ளூ வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளாது.

இந்த வைரஸ் தாக்குதலால் இதுவரையில் 306 கிராமங்களில் 2,500 பன்றிகள் உயிரிழந்துள்ளன என தகவல் வெளியாகி உள்ளது.

உலகையே மிரட்டிவரும் கொரோனா வைரசுக்கும், இந்த அப்பிரிக்க ஸ்வைன் ஃப்ளூ வைரஸுக்கும் தொடர்புகிடையாது. ஆனால், இந்த ஆப்பிரிக்க ஸ்வைன் ஃப்ளூ வைரஸ் இந்தியாவில் கண்டுபிடிக்கப்படுவது இதுதான் முதல் முறையாகும். இந்த வைரஸ் பன்றிகளுக்கு மிகுந்த ஆபத்தானது. இது விலங்குகளுக்கிடையேயும், பாதிக்கப்பட்ட விலங்கின் இறைச்சி மூலமாகவும், விலங்குகளின் தீவனம் மூலமாக நேரடியாகப் பரவுகிறது. மேலும், இது மனிதர்களுக்கு பரவும் திறனை கொண்டு உள்ளது. சீனாவிலும் இந்த வைரஸ் தொற்று காணப்பட்டது. இதன் காரணமாக நாட்டில் 40% பன்றிகளை சீன அரசு அழித்துவிட்டது என தகவல் வெளியானது.

இந்நிலையில் இந்தியாவில் இந்த வைரஸ் பாதிப்பு தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக அசாம் மாநில கால்நடை நலத்துறை அமைச்சர் அதுல் போரா செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தியாவிலேயே ஆப்பிரிக்க ஸ்வைன் ஃப்ளூ வைரஸ் முதல் முறையாக அசாமில் கண்டறியப்பட்டு உள்ளது. இங்கு 306 கிராமங்களில் இதுவரை 2,500-க்கும் மேற்பட்ட பன்றிகள் உயிரிழந்துள்ளன என்பது கண்டறியப்பட்டு உள்ளது. அதிவேகமாகப் பரவும் வைரஸ் என்பதால், இதனை தடுக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

மேலும், இதுகுறித்து மத்திய அரசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா வைரசுக்கும், ஆப்பிரிக்க ஸ்வைன் ஃப்ளூவுக்கும் தொடர்பு எதுவும் இல்லை. அசாமில் காணப்படுவது ஆப்பிரிக்க ஸ்வைன் ஃப்ளூ வைரஸ் என்பதை போபாலில் உள்ள தேசிய கால்நடை நோய்கள் உயர் ஆராய்ச்சி மையம் உறுதி செய்து உள்ளது. இந்த நோயிலிருந்து பன்றிகளை காக்கும் முறை பற்றிய தகவல்களை வல்லுநர்களிடம் கேட்டுள்ளோம். இந்த நோய் தாக்கினால் பன்றிகள் இறப்பது 100 சதவீதம் உறுதி. எனவே, மற்ற பன்றிகளை நோய் தாக்காமல் காப்பது மிகவும் அவசியம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த வைரஸ் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒரு கிலோ சுற்றளவுக்கு இருக்கும் அனைத்து பன்றிகளின் மாதிரிகளும் எடுக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. மேலும், அண்டை மாநிலங்களிலிருந்து எந்தவிதமான பன்றிகளும், கால்நடைகளும் கொண்டுவர வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது. பன்றிகளின் இறைச்சி, எச்சில், ரத்தம், திசுக்கள் மூலம் இந்த வைரஸ் பரவுகிறது. இதுவரை மாவட்டங்களுக்கு இடையே பரவல் காணப்படவில்லை.

இதே வைரஸ் கடந்த பிப்ரவரி மாதம் சீனாவில் கண்டறியப்பட்டது. கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சீனாவின் ஜியாங் மாகாணத்தில் அதாவது அருணாச்சலப் பிரதேசத்தின் எல்லையோரத்தில் இருக்கும் பகுதியில் முதன் முதலில் பரவியது. எனவே, அங்கிருந்து இந்த வைரஸ் வந்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். வழக்கமாக சாலையில் சுற்றித்திரியும் பன்றிகள்தான் வைரஸ் தொற்றுக்கு சாவும். இப்போது பண்ணைகளில் வளர்க்கப்படும் பன்றிகளும் இறந்து உள்ளன.

இந்த வைரஸால் மனிதர்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்பதால் அச்சப்பட தேவையில்லை. விவசாயிகளுக்கு தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் எனக் கூறியுள்ளார்.