எச்.ஐ.வி., டெங்கு போல கொடிய கொரோனாவுக்கும் மருந்து இல்லாமல் போகலாம்… ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

Read Time:5 Minute, 51 Second

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் ஆதிக்கம் செலுத்துகிறது. வைரசினால் புதியதாக பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்கள் எண்ணிக்கையும் ஒவ்வொரு நாளும் அதிகரிக்கிறது.

இப்போதைக்கு கொரோனாவிடம் இருந்து தப்பிக்க சமூக இடைவெளியை பின்பற்றுதல், முகக்கவசம் அணிதல், கைகளை சோப்பினால் கழுவுதல் போன்ற தடுப்பு நடவடிக்கைகள் மட்டும் கைகொடுக்கிறது. தொற்று நேரிட்டால் ஏற்கனவே இருக்கும் மருந்துகளை கொண்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இருப்பினும் இறப்பு இருந்துக்கொண்டே இருக்கிறது. உலகை அழிவு பயத்துக்கு இட்டுச் சென்றுள்ள கொரோனாவுக்கு விஞ்ஞானிகள் விரைந்து மருந்துகளை கண்டுபிடிக்க மாட்டார்களா என்ற ஏக்கம் உலகம் முழுவதும் மக்கள் மத்தியில் உள்ளது.

இதுவரையில் சுமார் 100 வாக்சைன்கள் கிளினிக்கல் சோதனைகளுக்கு முந்தைய கட்டத்தில் உள்ளது என்றும் இதில் 2 மருந்துகள் மனிதர்களிடம் சோதிக்கும் அளவிற்கு வந்து உள்ளது என்றும் செய்திகள் வெளியாகியது.

இந்நிலையில், கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து இல்லாமல் போகலாம் என்ற அதிர்ச்சி ஆய்வு தகவல் வெள்ளியாகி உள்ளது. எச்.ஐ.வி, டெங்கு போன்று இதுவும் மருந்து இல்லாத அவலநிலைக்கு மாறலாம் என்று நிபுணர்கள் சிலர் தெரிவித்து உள்ளனர்.

“இன்னும் சில வைரஸ்களுக்கு எதிராக தடுப்பூசிகள் இல்லாத நிலையே உள்ளது” என்று லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியின் உலக சுகாதார பேராசிரியர் டாக்டர் டேவிட் நபரோ சி.என்.என். செய்தி நிறுவனத்திடம் தெரிவித்து உள்ளார். “ஒரு தடுப்பூசி உருவாக்கப்படும் என்று எங்களால் ஒரு முழுமையான அனுமானத்தை செய்ய முடியாது. தடுப்பூசி உருவாகலாம். ஆனால், செயல்திறன் மற்றும் பாதுகாப்பு தொடர்பான அனைத்து சோதனைகளிலும் தேர்ச்சி பெறுமா….?” என்ற கேள்வியை எழுப்பியுள்ளார் உலக சுகாதார அமைப்பின் சிறப்பு தூதராக பணியாற்றும் நபரோ.

எச்.ஐ.வி. மற்றும் மலேரியா போன்ற முந்தைய நோய்களை போலின்றி கொரோனா வைரஸ் வேகமாக மாறாது என்பதால் தடுப்பூசி இறுதியில் உருவாக்கப்படவும் வாய்ப்பு உள்ளது என்ற நம்பிக்கையும் நிபுணர்கள் மத்தியில் உள்ளது. இதனால், தயாரிக்கும் பணியில் தொடர்ந்து தீவிரம் காட்டுகிறார்கள்.

எவ்வாறாயினும், ஒரு தடுப்பூசியை உருவாக்கும் செயல்முறை என்பது மெதுவானது மற்றும் மிகவும் வேதனையானது என்று நபரோ சுட்டிக்காட்டி உள்ளார்.

“உங்களுக்கு அதிக நம்பிக்கை உள்ளது, பின்னர் அது பொய்த்து போகின்றன. நாங்கள் உயிரியல் அமைப்புகளுடன் கையாள்கிறோம், இயந்திர அமைப்புகளுடன் கையாள்வதில்லை. இது உண்மையில் உடல் எவ்வாறு பிரதிபலிக்கிறது என்பதை பொறுத்தது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஹூஸ்டனில் உள்ள மருத்துவ கல்லூரி ஒன்றின் பேராசிரியர் டாக்டர் பீட்டர் ஹோடெஸ் பேசுகையில், “நாங்கள் 18 மாதங்களுக்குள் ஒரு தடுப்பூசியை உருவாக்கிவிட முடியும் என துரிதப்படுத்தவில்லை. இது, சாத்தியமற்றது என்றும் அர்த்தம் கிடையாது. ஆனால், அப்படி அமைந்தால் அது ஒரு வீர சாதனையாகும். எங்களுக்கு இருதிட்டம் அவசியமாகும்,” எனக் கூறுகிறார்.

எச்.ஐ.வி.க்கு 40 ஆண்டு காலமாக மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை. இதுவரையில் சுமார் 32 மில்லியன் மரணங்கள் எய்ட்ஸ் நோய்க்கு ஏற்பட்டு உள்ளன. டெங்கு காய்ச்சலுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு இருக்கலாம். ஆனால், இதனை 9 வயது முதல் 45 வயதுடையோருக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும், அதுவும் அவர்களுக்கு முன்பாக டெங்கு இருந்தது உறுதி செய்யப்பட்டால் மட்டும்தான். அமெரிக்க நோய்க்கட்டுப்பாட்டு மையம் நோய் இல்லாதவர்களுக்கு இந்த டெங்கு மருந்தை கொடுத்தால் விளைவுகள் நேரிடும் என எச்சரித்து உள்ளது.

“டெங்கு வைரஸ் தொற்று முன்பு ஏற்படாதவர்களுக்கு மருந்தை கொடுத்தால் டெங்கு வைரஸ் தீவிரமாக அவர்களை பீடிக்கும் அபாயம் உள்ளது,” என எச்சரித்து உள்ளது.

இப்போதைய நிபுணர்களின் எச்சரிக்கையானது கொரோனா வைரஸ் தொடர்ந்து இருக்கும் என்றே இருக்கிறது. தொடர் ஊரடங்கு என்பது பொருளாதார ரீதியாக ஏற்புடையதாக இருக்காது. உலக சுகாதார அமைப்பு 102 மருந்துகளில் 8 முன்னிலை மருந்துகள் மனித பரிசோதனை கட்டத்தில் இருப்பதாக தெரிவிக்கிறது. இருப்பினும், கொரோனா எதிர்ப்பு மருந்து குறித்து யாராலும் இன்னும் 100% உறுதியாக எதையும் கூற முடியவில்லை. சோதனை நடந்துக்கொண்டே இருக்கிறது.