சென்னையில் இருந்து வந்தவருக்கு கொரோனா உறுதி; மதுரையில் பாதிப்பு 91-ஆக உயர்வு..!

Read Time:1 Minute, 49 Second

மதுரையில் கொரோனா வைரசால் 90 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். மாவட்டம் தொடர்ந்து அதிகமாக பாதிக்கப்பட்ட சிவப்பு மண்டலம் பட்டியலில் இருந்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்களில் 43 பேர் தொற்றிலிருந்து பூரண குணமாகி தங்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த நிலையில் மதுரையில் தொடர்ச்சியாக கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது.

சென்னையிலிருந்து திரும்பிய ஒருவருக்கு நேற்று கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது.

மதுரை பேரையூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 35 வயது ஆண், சென்னையில் தங்கி டெய்லர் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னதாக மதுரைக்கு வந்திருக்கிறார். இதனை தொடர்ந்து அவர் மற்றும் அவருடன் வந்த நபர்களை சுகாதாரத்துறையினர் பரிசோதனைக்கு அழைத்து சென்றதில் தற்போது இவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதனையடுத்து இவருடன் தொடர்பில் இருந்த சிலரது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து அவர்கள் தங்கியிருந்த தெருக்கள் சீல் வைத்து அடைக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் கிருமிநாசினி தெளிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இதனால் மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 91-ஆக உயர்ந்து உள்ளது.