மதுபான கடைகள் திறப்பு; கொரோனாவை கட்டுப்படுத்த இவ்வளவு நாட்கள் மேற்கொண்ட முயற்சிகளை நீர்க்க செய்யும்…!

Read Time:3 Minute, 8 Second

மதுபான கடைகள் திறப்பு என்பது கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுக்கள் இவ்வளவு நாட்களாக மேற்கொண்ட முயற்சிகளை முற்றிலுமாக நீர்க்கச் செய்துவிடும்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு 3.0 நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கில் தற்போது சில கடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அதில் முக்கியமாக மதுபான கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. டெல்லி, ஆந்திரா, கர்நாடகம், அசாம் என பல மாநிலங்களில் மதுபான கடைகள் திறக்கப்பட்டு உள்ளது. திறக்கப்பட்ட இடங்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. சில இடங்களில் மக்கள் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு நின்று மதுபானங்களை வாங்கி செல்கிறார்கள்.

கூட்டம் முண்டியடித்து ஆயிரக்கணக்கான ரூபாயை கொடுத்து குடிமகன்கள் மதுபானங்களை வாங்கி செல்கிறார்கள்.

இதில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் சமூக விலகல் என்பது பெரும் கேள்விக்குறியாகியுள்ளது என்பது மதுபானக் கடைகள் திறப்பு தொடர்பாக வெளியான புகைப்படங்கள் தெரிவிக்கின்றன. கொரோனாவினால் பாதிக்கப்பட்டு அதற்கான அறிகுறியில்லாத ஒருவர் இதில் இடம்பெறும் போது தொற்று பலருக்கு பரவும் அபாயம் அதிகம் உள்ளது.

தமிழகத்தில் சென்னை நீங்கலாக 7-ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளை திறக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கிடையே கடைகளை திறந்துள்ள மாநிலங்கள் மதுபானங்களுக்கான வரியையும் அதிகரித்து வருகின்றன. ஆனாலும், குடிமகன்கள் அடங்குவதாக தெரியவில்லை. எவ்வளவு காசு செலவானாலும் வாங்கிவிட வேண்டும் என செயல்படுகிறார்கள். தமிழக எல்லைப்பகுதி கிராமங்களில் உள்ளவர்கள் பிற மாநிலங்களுக்கு செல்லும் செய்திகளும் வெளியாகியுள்ளது.

இப்போது மதுபான கடைகளை திறப்பது என்பது இவ்வளவு நாட்களாக மத்திய, மாநில அரசுக்கள் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தையும் நீர்த்துப்போக செய்யும். இதற்கிடையே ஊரடங்கில் வேலைவாய்ப்பு இல்லாது கஷ்டப்படும் குடும்பங்கள் இருக்கிற காசை கொண்டு வாழ்க்கையை ஓட்டுகின்றன. இதுபோன்ற குடும்பங்களில் இருக்கும் பொறுப்பற்ற ஆண்கள் இருக்கிற காசையும் பிடுங்கி குடிக்க செல்வார்கள். இதனால், வறுமை மற்றும் குடும்பவன்முறை போன்ற பிற சங்கடங்களும் சூழும்.