கொரோனாவுடன் முழு முயற்சியில் போராடும் தெலுங்கானா… மே 29 வரையில் ஊரடங்கு நீட்டிப்பு….!

Read Time:2 Minute, 56 Second

இந்தியாவில் கொரோனாவினால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கொரோனாவை கட்டுப்படுத்த மார்ச் 25-ல் கொண்டுவரப்பட்ட 21 ஊரடங்கு மேலும் 19 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது. பின்னர், மே 3-ம் தேதியும் ஊரடங்கு 14 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது. கொரோனாவை கட்டப்படுத்த ஊரடங்கு ஆயுதமாக பார்க்கப்பட்டாலும், தினசரி கூலிகள், ஊழியர்கள் நிலைமை மேலும் மோசமாக பாதிப்புக்கு உள்ளாகும் என்ற நிலையும் உள்ளது. மறுபுறம் பொருளாதாரத்தையும் பார்க்க வேண்டிய அவசியம் உள்ளது. இதுபோன்ற ஒரு சிக்கலான நிலை கொரோனாவின் வேகம் மேலும் கூட வழிவகை செய்யுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் இதுவரையில்லாத அளவு வேகமாக பரவுகிறது என்பதை மத்திய அரசின் புள்ளி விபரங்கள் காட்டுகின்றன. இந்நிலையில், கொரோனாவுடன் முழு முயற்சியில் போராடிவரும் தெலுங்கானா மாநிலம் ஊரடங்கை மேலும் நீட்டித்து உள்ளது.

தொற்றுநோய் பரவலை கருத்தில் கொண்டு, தெலுங்கானாவில் ஊரடங்கு மே 29-ம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்-அமைச்சர் கே.சந்திரசேகர் ராவ் அறிவித்து உள்ளார்.

மாநிலம் முழுவதும் இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரையில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. “பொதுமக்கள் மாலை 6 மணிக்குள் அத்தியாவசிய பொருட்களை வாங்கிக்கொள்ள வேண்டும். 6 மணிக்குள் மக்கள் அவர்கள் தங்குமிடங்களை அடைய வேண்டும். இரவு 7 மணி முதல் மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு இருக்கும். யாராவது வெளியே காணப்பட்டால், போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள்” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சிவப்பு மண்டலங்களில் அத்தியாவசிய கடைகள் மட்டுமே திறக்கப்படும். மே 15 அன்று, சிவப்பு மண்டல மாவட்டங்களின் நிலைமையை அரசு ஆய்வு செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றுவரை தெலுங்கானா மாநிலத்தில் 1,096 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உளது. அவற்றில் 628 நோயாளிகள் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தெலுங்கானா மாநில அரசு, மாநிலத்தில் உள்ள பிற மாநில தொழிலாளர்களை தேவையான உதவிகளையும் வெளியேற்றி வருகிறது.