காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத இயக்க தளபதி ரியாஸ் சுட்டுக்கொலை… இந்திய ராணுவம் அதிரடி..!

Read Time:2 Minute, 37 Second

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவடத்தில் பைக்போரா கிராமத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து நேற்று செவ்வாய் கிழமை பாதுகாப்பு படையினர் குறிப்பிட்ட இடத்தை சுற்றி வளைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத இயக்கத்தின் தளபதி ரியாஸ் அங்கே பதுங்கியிருப்பதாக உளவுத்துறைக்கு முக்கிய தகவல் கிடைத்து உள்ளது. ரமலானையொட்டி ரியாஸ் சொந்த கிராமம் சென்றிருப்பதாக தகவல் கிடைத்ததும் பாதுகாப்பு படைகள் உஷார் படுத்தப்பட்டுள்ளது. பயங்கரவாதி ரியாஸ் கடந்த 8 ஆண்டுகளாக பாதுகாப்பு படைகளிடம் சிக்காமல் தப்பியுள்ளான். அவனுடைய தலைக்கு பாதுகாப்பு படை தரப்பில் ரூ. 12 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டு இருந்தது.

2016-ம் ஆண்டு காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் தளபதி புர்கான் வானி கொல்லப்பட்டான். இதனையடுத்து முகமது யாசின் அப்பொறுப்பை ஏற்றான். அவனையும் பாதுகாப்பு படைகள் வேட்டியாடியது. இதனையடுத்து தளபதி பொறுப்பில் ரியாஸ் செயல்பட்டு வந்தான். அவன் குறித்து தகவல் அறிந்ததும் பைக்போரா கிராமத்தை ராணுவம், சி.ஆர்.பி.எப் மற்றும் காஷ்மீர் போலீஸ் படை சுற்றி வளைத்தது. அப்போது இருதரப்புக்கும் இடையே சண்டை வெடித்தது. நேற்றிலிருந்து (மே-5) கடுமையான சண்டை நடந்தது. இதில் பயங்கரவாதி ரியாஸ் சுட்டுக் கொல்லப்பட்டான் என அம்மாநில போலீஸ் தெரிவித்து உள்ளது. மற்றொரு பயங்கரவாதியும் கொல்லப்பட்டுள்ளான்.

ஆனால், இவ்விவகாரம் தொடர்பாக முழு விபரங்களை பாதுகாப்பு படை வெளியிடவில்லை. மாநிலத்தில் அமைதியை பராமரிக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மொபைல் நெட்வோர்க் சேவை துண்டிக்கப்பட்டது. இதற்கிடையே கிராமத்தை சுற்றில் பாதுகாப்பு படையினரை நோக்கி கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. அப்பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.