முட்டை கோஸ்களை சென்னை கொண்டுவர ஈரோடு விவசாயிக்கு உதவிய ரெயில்வே…!

Read Time:2 Minute, 31 Second

இந்தியா முழுவதும் கொரோனா வைரசை தடுக்கும் வகையில் ஊரடங்கு அமலில் உள்ளது.

போக்குவரத்து தடை செய்யப்பட்டு உள்ளது. ரெயில்வேயும் பயணிகள் சேவையை நிறுத்திவிட்டது. ஆனால், சரக்கு ரெயில் சேவையை வழங்கி வருகிறது. சாலை போக்குவரத்தில் அத்தியாவசிய பொருட்களை கொண்டுச் செல்ல அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

ஆனால், சிறு, குறு விவசாயிகள் தங்களுடைய பொருட்களை கொண்டுச்செல்ல இதனால் ஏற்படும் செலவை தாங்க முடியாது என்ற நிலையில் உள்ளன. ஒருபுறம் விளைச்சல் இருக்கும் கிராமபுறங்களில் காய்கறிகள் குறைந்த விலையில் விற்கப்படுகிறது. ஆடு, மாடுகளுக்கு இறையாகிறது. மறுபுறம் சென்னை போன்ற பெரும் நகரங்களில் காய்கறிகளின் விலை அதிகமாக காணப்படுகிறது. ரெயில்வேயும் விவசாயிகளுக்கு உதவும் பணியை மேற்கொண்டு வருகிறது.

தென்னக ரெயிவே விளைந்த முட்டைகோஸ்களை சென்னை கொண்டுவர ஈரோடு விவசாயிக்கு உதவியுள்ளது. ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த விவசாயி சுப்பிரமணியன், முட்டைகோஸ்களை சென்னை கொண்டுவர உதவியை கோரியுள்ளார். அதற்கு ரெயில்வே உதவியை வழங்கியுள்ளது.

இதுதொடர்பாக சுப்பிரமணியன் 4-ம் தேதி டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், எனது தோட்டத்தில் விளைந்த முட்டைக்கோஸ்களை ஈரோடில் இருந்து சென்னைக்கு கொண்டு செல்ல எனக்கு உதவுமாறு தெற்கு ரெயில்வேயை அணுகினேன். அவர்களுடைய பதில் விரைவாக கிடைத்தது, விளைப்பொருட்களை கொண்டுச் செல்ல உதவுவதாக உறுதியளித்தனர். நான் அறுவடை செய்ய திட்டமிட்டுள்ளேன் மற்றும் நாளை 3 டன் அனுப்புகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து ரெயில்வே அவருடைய டுவிட்டருக்கு நேற்று பதில் அளித்து உள்ளது. அதில், நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், உங்கள் சரக்குகளை கொண்டு செல்ல எதிர்பார்க்கிறோம். நன்றி என தெரிவித்து உள்ளது.