இன்று நலம் தரும் நரசிம்ம ஜெயந்தி: நினைத்ததும் வந்து காப்பாற்றுவார் நரசிம்ம மூர்த்தி…

Read Time:6 Minute, 55 Second

மனித வாழ்கையில் நியதிகளை பேணும் வகையில் தெய்வங்கள் நம்மில் ஒருவராக அவதாரமெடுத்து நமக்கு வரும் துன்பங்களை தீர்த்து வைப்பதாக புராணங்களும், இதிகாசங்களும் தெரிவிக்கின்றன.

மனிதகுலத்தின் மேம்பாட்டுக்காக எடுத்த அவதாரங்களுள் காக்கும் கடவுளான விஷ்ணுவின் ‘தசாவதாரம்’ வெகு சிறப்பாக கருதப்படுகிறது.

‘பரித்ராணாய ஸாதூநாம் விநாஸாய ச துஷ்க்ருதாம்
தர்ம ஸம்ஸ்தா பநார்தாய ஸம்பவாமி யுகே யுகே’

பகவத் கீதையில் ‘நல்லோரைக் காக்கவும், தீயோரை அழிக்கவும், அறத்தை நிலைநாட்டவும், நான் யுகந்தோறும் பிறக்கிறேன்’ என்று கூறுகிறார் ஸ்ரீகிருஷ்ணர். நீதியும், நேர்மையும் அழிந்து.. தீமைகள் பெருகி உலகமே அழிந்து போகும் நிலையான ஒவ்வொரு யுகங்களின் முடிவிலும், நீதியை நிலைநாட்டும் பொருட்டு ஒவ்வொரு அவதாரத்தையும் பகவான் ஸ்ரீ விஷ்ணு எடுத்துள்ளதாக ஐதீகம். அந்த அவதாரங்களில் 4-வது அவதாரமானது நரசிம்ம அவதாரம். நினைத்ததும் வந்து காப்பாற்றும் கடவுளாக நரசிம்மர் விளங்குபவர்.

நரசிம்ம அவதாரம்

வராக அவதாரத்தில் விஷ்ணு வதம் செய்த இரண்யாட்சனின் சகோதரன் இரண்யகசிபு ஆவார். இரண்யகசிபு விஷ்ணுவை வெறுத்து தன்னைதானே கடவுள் என்று கூறிக்கொண்டான். ஆனால் இரண்யனின் மகனான பிரகலாதனோ நாராயணரின் மீதும் பக்தி கொண்டவனாக இருந்தான். தன்னுடைய மகன் தனது எதிரியான நாராயணனின் நாமத்தை சொல்வதை இரண்யகசிபுவால் சகிக்க முடியவில்லை. எனவே பிரகலாதனை அழைத்து ‘நீ நாராயணனை வழிபடக் கூடாது. என்னைத்தான் வணங்க வேண்டும்’ என்று கட்டாயப்படுத்தினான்.

ஆனால் பிரகலாதனோ, தந்தைக்கே அறிவுரை வழங்கினான். ‘நாராயணன் தான் கடவுள். அவரை வணங்கி நல்வாழ்வு பெறுங்கள்’ என்று கூறியதும் கோபம் அடைந்த இரண்யகசிபு, மகன் என்றும் பார்க்காமல் பிரகலாதனை கொல்லத் துணிந்தான். ஆனால், சித்தரவதை செய்து அவன் மேற்கொண்ட அனைத்து வழிகளும் அடைப்பட்டன. ஒவ்வொரு முறையும் நாராயணர், பிரகலாதனை காப்பாற்றிக்கொண்டே இருந்தார்.

பூமியிலோ, வானத்திலோ, தேவர்கள், மனிதர்கள், அரக்கர்கள், மிருகங்கள் போன்ற உயிரினங்களாலோ மரணம் ஏற்படக்கூடாது என்று வரம் பெற்றிருந்த இரண்யகசிபு ஆணவம் அதிகரித்து ஆட்டம் ஆடினான்.

மகனை அழிக்கவும் முடியவில்லை. அவனை தன் வழிக்கு கொண்டுவரவும் முடியவில்லை என்ற கோபத்தின் உச்சத்தில் இருந்த இரண்யகசிபு, ஒரு நாள் தன் மகன் பிரகலாதனிடம், ‘உன்னுடைய நாராயணன் எங்கிருக்கிறான்?’ என்று கேள்வியை கேட்க, அதற்கு பிரகலாதன், ‘அவர் தூணிலும் இருப்பார்; துரும்பிலும் இருப்பார்’ என்றான். இதனையடுத்து இரண்யகசிபு, ‘அப்படியானால் இந்த தூணில் இருக்கிறானா?’ என்று கேட்டு தூணை உடைத்தான்.

அதிலிருந்து சிங்கத்தலையும், மனித உடலுமாக நரசிம்மர் வெளிப்பட்டார். பின்னர் இரண்யகசிபுவை வதம் செய்தார் என்பது வரலாறாகும். இறைவன் நரசிம்ம மூர்த்தியாக அவதாரம் செய்தது ஆந்திர மாநிலம் அகோபிலம் என்ற திருத்தலத்தில் என்பது புராண வரலாறு. திருமாலின் அவதாரங்களிலேயே உக்கிரமான அவதாரம் நரசிம்ம அவதாரம். திருமால் எடுத்த அவதாரங்களில் உக்கிரமான அவதாரமாக இருப்பினும், பக்தர்கள் அனைவருக்கும் விருப்பமான அவதாரம் இதுவாகும். நரசிம்ம பெருமாளிடம், பிரகலாதனைப் போல பக்தி கொண்டிருக்க வேண்டும். அவ்வாறு பக்தி செலுத்துபவர்களுக்கு வேண்டியதை நிறைவேற்றிக்கொடுப்பார் நரசிம்ம மூர்த்தி. இவரை வழிபட்டால் தொல்லைகள் அனைத்தும் விலகும். நலம் பெறுகும். அறிந்தோ, அறியாமலோ செய்த பாவங்களால் கிடைத்து வரும் தண்டனையில் இருந்து விடுபட லட்சுமி நரசிம்மரை வழிபட வேண்டும்.

வைகாசி மாதம் வளர்பிறை சதுர்த்தியன்று சூரியன் மறையும் நொடியில் (பகலுமின்றி, இரவுமின்றி) மாலை அந்திப்பொழுதில் நரசிம்மர் அவதரித்தார். இதுவே நரசிம்ம ஜெயந்தியாகும். இன்று நரசிம்மர் ஜெயந்தியாகும். நரசிம்ம ஜெயந்தியன்று மாலை 4.30 மணி முதல் 7.30 மணிக்குள் வழிபட வேண்டும். விஷ்ணு வழிபாட்டில் பயன்படுத்தும் மலர்கள், வஸ்திரம், நைவேத்தியம் ஆகியவற்றை உபயோகிக்க வேண்டும். செவ்வரளி மலரால் அர்ச்சனை செய்து, சர்க்கரை பொங்கல், பானகம் போன்ற இனிப்புகளை படைக்கலாம்.

‘நரசிம்மரே தாய்; நரசிம்மரே தந்தை, சகோதரனும் நரசிம்மரே, தோழனும் நரசிம்மரே, அறிவும் நரசிம்மரே, செல்வமும் நரசிம்மரே, எஜமானனும் நரசிம்மரே. இவ்வுலகத்தில் நரசிம்மரே, அவ்வுலகத்திலும் நரசிம்மரே, எங்கெங்கு செல்கிறாயோ, அங்கெல்லாம் நரசிம்மரே’. நரசிம்மரை காட்டிலும் உயர்ந்தவர் எவரும் இல்லை. அதனால் நரசிம்மரே உம்மை சரணடைகிறேன்.

என்ற சுலோகத்தை சொல்லி விளக்கேற்றி வழிபட வேண்டும். காய்ச்சி ஆறவைத்த பசும்பால் அல்லது பானகத்தை நைவேத்தியம் செய்யலாம். இந்நாளில் நரசிம்மர் கோவிலுக்கு சென்று, சுவாமிக்கு நெய் தீபம் ஏற்றி துளசி மாலை சாத்தி வழிபட வேண்டும். கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே நரசிம்மரை அழைத்து வழிபடலாம்.

நரசிம்ம மூர்த்தியை வழிபடும் போது, அவருக்கான காயத்ரி மந்திரத்தை உச்சரித்து வழிபடுங்கள்.

நரசிம்மர் காயத்ரி

‘ஓம் வஜ்ரநாகாய வித்மஹே
தீட்சண தன்ஷ்ட்ராய தீமஹி
தந்நோ நரஸிம்ஹாய ப்ரசோதயாத்’

வஜ்ரநாகனை நாம் அறிந்து கொள்வோம். அருளை வழங்கும் அந்த இறைவனின் மீது நாம் தியானம் செய்வோம். நரசிம்மனாகிய அவர் நம்மை காத்து அருள்புரிவார் என்பது இதனுடைய பொருளாகும். எங்கும் நிறைந்த நரசிம்மர் நம்மை காத்தருள்வார்…