பள்ளி ஆசிரியர்களுக்கு வந்த சோதனை… மதுபானை கடையில் பணி அமர்த்தப்பட்டனர்…!

Read Time:4 Minute, 46 Second

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகம் எடுத்து இருந்தாலும் ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டு உள்ளது.

ஊரடங்கு தளர்வில் முக்கிய அம்சமாக மதுபான கடைகளை திறக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனையடுத்து ஆந்திரா, கர்நாடகம், உத்தரபிரதேசம், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் மதுபான கடைகள் திறக்கப்பட்டது. மதுபான கடைகள் திறக்கப்பட்டதும் குடிமகன்கள் உற்சாகம் அடைந்தனர். கடைகள் முழுவதும் கூட்டம் நிறம்பியது, கொரொனாவை கட்டுப்படுத்த முக்கிய விதிமுறையான சமூக இடைவெளியை பிற்பற்றுதல் காற்றில் விடப்பட்டது.

இதனையடுத்து மதுபானங்களுக்கான வரியை மாநில அரசுக்கள் உயர்த்தின.

இருந்தாலும் குடிமகன்கள் தங்களுடைய 40 நாள் தாகத்தை தீர்க்க மதுபான கடைகளை நோக்கி படையெடுத்தனர். இதனால் மதுபான கடைகள் களைகட்டுகிறது. மாநில அரசுகளுக்கு வருவாய்களுக்கு வழிபிறந்ததாக பார்க்கப்படுகிறது. ஆனால், மதுபான கடைகள் திறப்பு என்பது கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுக்கள் இவ்வளவு நாட்களாக மேற்கொண்ட முயற்சிகளை முற்றிலுமாக நீர்க்கச் செய்துவிடும் என்ற எச்சரிக்கை உள்ளது.

ஆசிரியர்கள்…

மதுபானங்களை திறந்த மாநிலங்களில் ஒன்று ஆந்திர பிரதேசம். ஆந்திராவில் இதுவரையில் 1,717 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு கடற்கரை நகரான விசாகப்பட்டினத்தில் மதுபான கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இம்மாவட்டத்தில் மாவட்டத்தில் மொத்தம் 311 மதுபானை கடைகள் உள்ளன. இதில் ஊரடங்கில் 272 கடைகள் செயல்பட்டு வருகின்றன. கூட்டம் அதிகமாக இருந்ததால், கூட்டத்தை நிர்வகிக்க மதுக்கடைகளில் அரசு ஆசிரியர்கள் பணியில் நிறுத்தப்பட்டனர்.

இதுதொடர்பாக காவல்துறை உதவி ஆணையர் பாஸ்கர் ராவ் ANI செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில், மதுபானம் வாங்க வரிசையில் நின்றவர்களுக்கு ஆசிரியர்கள் டோக்கன்களை விநியோகிக்கின்றனர். வாங்குபவர்கள் தங்கள் எண்கள் வரும் போது கடைகளை அணுகுவர் என தெரிவித்து உள்ளார். பள்ளியில் மாணவர்களுக்கு படிப்பையும், ஒழுக்கத்தையும் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்கள் மதுபான கடைகளில் வரிசையை ஒழுங்கு படுத்தும் பணியிலும், டோக்கன் கொடுக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

ஒவ்வொரு மதுபான கடையிலும் இரு ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர் என தெரியவந்து உள்ளது.

இதுதொடர்பாக பணியில் ஈடுபடுத்தப்பட்ட ஆசிரியர் லட்சுமி நாராயணன் பேசுகையில், உலகிலேயே மிகவும் புனிதமான பணி ஆசிரியர் பணி தான் என் என்றால் அது மாணவர்களுக்கு அறிவை போதிப்பது. அரசுக்கு எங்கள் சேவையை வழங்க நாங்கள் தயாராக உள்ளோம். ஆனால், மதுக்கடைகளில் எங்கள் கடமையை செய்ய சொல்வதில் நாங்கள் குற்ற உணர்ச்சியுடன் இருக்கிறோம். அனைத்து ஆசிரியர்களும் இதை கண்டித்து உள்ளனர்.

அரசாங்கத்திற்கு தேவையான எந்தவொரு சேவையையும் செய்ய நாங்கள் தயாராக உள்ளோம். ஆனால், மதுக்கடைகளில் எங்களை நிறுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம் எனக் கூறியுள்ளார். அரசு சொல்லும் பணியை நாங்கள் செய்தாக வேண்டியது உள்ளது; எங்களுக்கு மாற்று பணியை அரசு வழங்க வேண்டும் எனவும் வெதும்பி கோரிக்கையை வைத்துள்ளனர்.

இதற்கிடையில், நகரத்தில் ஒரு மதுபான கடைக்கு வெளியே பெண்கள் போராட்டம் நடத்தினர். ஒரு போராட்டக்கார பெண் பேசுகையில், காய்கறி சந்தைகள் 3 மணி நேரம் மட்டுமே திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மதுபான கடைகள் 7 மணி நேரம் திறந்த நிலையில் இருக்க அனுமதிக்கப்படுகின்றன என குற்றம் சாட்டியுள்ளார்.