ஆந்திராவில் அதிகாலையில் நேரிட்ட துயரம்: விஷவாயு தாக்கி சாலையில் விழுந்து கிடந்த மக்கள்…! 2 ஆயிரம் மக்கள் பாதிப்பு, கால்நடைகளும் பாதிப்பு

Read Time:4 Minute, 2 Second

* ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணத்தில் அதிகாலை 2:30 மணியளவில் கெமிக்கல் ஆலையில் நேரிட்ட வாயுக்கசிவினால் 7 பேர் உயிரிழந்து உள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.


* வாயுக்கசிவின் போது உள்ளே தொழிலாளர்கள் சிக்கியிருக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது.


* இதுதொடர்பாக வெளியாகியிருக்கும் பதபதைக்கும் வீடியோக்கள் மக்கள் சாலைகளில் விழுந்துக் இடப்பதை காட்டுகிறது.


விசாகப்பட்டிணம் கோபால்பட்டிணத்தில் எல்.ஜி.பாலிமர்ஸ் கெமிக்கல் ஆலை செயப்பட்டு வருகிறது. இங்கு அதிகாலை 2:30 மணியளவில் பெரும் துயரச் சம்பவமாக ஸ்டைரீன் என்ற ரசாயன வாயு கசிந்தது. பொதுமக்கள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த சமயத்தில் இந்த விஷவாயு தாக்கியுள்ளது. இதனால் 3 கிமீ தூரம், 5 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் 7 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சுமார் 200-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதற்கிடையே 2 ஆயிரம்பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. விஷவாயு தாக்கியதால் அப்பகுதியில் இருந்த கால்நடைகளும் விழுந்து கிடக்கின்றன. இதுதொடர்பாக வெளியாகியிருக்கும் பதபதைக்கும் வீடியோக்கள் மக்கள் சாலைகளில் விழுந்துக் இடப்பதை காட்டுகிறது. மயங்கிய குழந்தைகளை பெற்றோர்கள் ஆம்புலன்ஸ்களுக்கு கொண்டு செல்வதையும் காட்டுகிறது.

பலர் மூச்சுவிடச் சிரமம், மற்றும் வாந்தி ஆகியவற்றினால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சுற்றியிருக்கும் கிராமங்களில் இருந்து 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வெளியேற்றப்பட்டு உள்ளனர்.

விசாகப்பட்டினம் நகர போலீஸ் கமிஷனர் ஆர்.கே. மீனா ANI செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், ”வாயு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்புக்குழு விபத்து நேரிட்ட பகுதிக்கு சென்றுள்ளது. வாயு கசிவின் அதிகபட்ச தாக்கம் 1-1.5 கி.மீ சுற்றளவில் இருந்தது. ஆனால், வாசனையானது 2-2.5 கி.மீ வரை பரவியது. சுமார் 100-120 பேர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு உள்ளனர். ” என தெரிவித்து உள்ளார். பல்வேறு அரசு மருத்துவமனைகளில் சுமார் 150-170 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். மேலும் சிலர் தனியார் மருத்துவமனைகளுக்கும் கொண்டு செல்லப்படுகின்றனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதிகாலையில் இந்த விபத்து நேரிட்ட போது ஆலையில் சிலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. எனவே, உயிரிழப்பு அதிகரிக்கும் என்ற அச்சம் எழுந்து உள்ளது. அப்பகுதியை சேர்ந்த மக்கள் தங்களுடைய முகத்தை ஈரமான துணியினால் கட்டிக்கொள்ளுமாறு விசாகப்பட்டிணம் நகராட்சி தரப்பில் கேட்டுகொள்ளப்பட்டுள்ளது. ஆலையை சுற்றியிருந்த கிராமங்களில் மக்கள் வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வாயுவின் வீரியத்தை அடக்கும் வகையில் அங்கு மாநகராட்சி தரப்பில் நீர் தெளிக்கப்பட்டு வருகிறது.