கொரோனா வைரஸ் தாக்கம்: இந்தியாவில் 2 கோடி குழந்தைகள் பிறக்கும்…!

Read Time:3 Minute, 44 Second

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் உலகமெங்கும் பெண்கள் கருத்தரிப்பது அதிகமாகும் என கணிக்கப்பட்டு உள்ளது.

இந்த கர்ப்பங்களால் உலகமெங்கும் 11 கோடியே 60 லட்சம் குழந்தைகள் பிறக்கப்போகின்றன என தெரிவிக்கப்பட்டு உள்ளது. நாளை 10-ம் தேதி சர்வதேச அன்னையர் தினம் கொண்டாட உள்ள நிலையில், உலகமெங்கும் 11 கோடியே 60 லட்சம் குழந்தைகள் பிறக்கப்போகின்றன என்பது அதிர்வினை ஏற்படுத்துவதாக அமைந்து உள்ளது.

இந்தியாவை பொறுத்தமட்டில், கொரோனா வைரஸ் தொற்று உலகளாவிய தொற்றுநோயாக அறிவிக்கப்பட்ட கடந்த மார்ச் 11-ம் தேதிக்கு பின்னர் 9 மாதங்களில் இதுவரை இல்லாத வகையில் அதிக எண்ணிக்கையில் குழந்தை பிறப்பு இருக்கும், அதாவது, மார்ச் 11-ம் தேதி தொடங்கி டிசம்பர் 16-ம் தேதி வரையில் 2 கோடியே 10 லட்சம் குழந்தைகள் பிறக்கும் என்று ஐ.நா.வின் குழந்தைகள் நிதி அமைப்பு யுனிசெப் கணித்து உள்ளது.

இதே போன்று கொரோனா வைரஸ் உருவான சீனாவில் 1 கோடியே 35 லட்சம் குழந்தைகள் பிறக்கும். நைஜீரியாவில் 64 லட்சம் குழந்தைகளும், பாகிஸ்தானில் 50 லட்சம் குழந்தைகளும், இந்தோனேசியாவில் 40 லட்சம் குழந்தைகளும் பிறக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. எதிர்பார்க்கப்படுகிற குழந்தைகளின் எண்ணிக்கையில் 6-வது இடத்தில் உள்ள அமெரிக்க நாட்டில் மார்ச் 11 முதல் டிசம்பர் 16 வரையில் 32 லட்சம் குழந்தைகள் பிறக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த நாடுகளில் எல்லாம் கொரோனா வைரஸ் தொற்றுநோய் தோன்றுவதற்கு முன்பாகவே புதிதாக பிறந்த குழந்தைகளின் இறப்புவீதம் அதிக அளவில் இருந்ததாகவும், இது கொரோனா வைரஸ் பரவியுள்ள சூழ்நிலையில் மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது எனவும் யுனிசெப் எச்சரித்துள்ளது. நடப்பு ஆண்டின் ஜனவரி முதல் டிசம்பர் மாதம் வரையில் இந்தியாவில் 2 கோடியே 41 லட்சம் குழந்தைகள் பிறக்கும் என்றும் தெரியவந்து உள்ளது.

அதே நேரத்தில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளால் பிரசவ பராமரிப்பு, உயிர்காக்கும் சுகாதார சேவைகள் பாதிக்கும், கர்ப்பிணிகள் மற்றும் அவர்களது குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. இதன் காரணமாக பணக்கார நாடுகள் கூட பாதிப்புக்கு உள்ளாகும் என கூறப்படுகிறது. புதிய தாய்மார்களும், புதிய குழந்தைகளும் கொரோனா வைரசால் ஏற்பட்டுள்ள கடுமையான எதார்த்தங்களுக்கு மத்தியில் வரவேற்கப்படுகிற சூழல் உருவாகும்.

கர்ப்பிணிகளுக்கு தேவையான மருத்துவ பரிசோதனைகளை பெறவும் நல்ல விதமாக குழந்தைகளை பெற்றெடுக்கவும், பிரசவத்துக்கு பிந்தைய கவனிப்புகளை சரியாக பெறவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் யுனிசெப் கேட்டுக்கொண்டுள்ளது.