ஜூன் – ஜூலை மாதத்தில் கொரோனா தொற்று உச்ச நிலையை எட்டும் – எய்ம்ஸ் இயக்குனர் எச்சரிக்கை..!

Read Time:3 Minute, 12 Second
  • இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு சீரான வேகத்தில் தான் அதிகரித்து வருகிறது.

  • ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் உச்சக்கட்டத்தை எட்டும்.

  • கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இன்னும் சில காலம் ஊரடங்கை தொடர வேண்டும்.

இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் உச்சத்தை எட்டும் என்று எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் ரந்தீப் குலேரியா எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரசின் வேகம் அதிகரித்து காணப்படுகிறது. கடந்த சில தினங்களாக தினசரி புதியதாக கொரோனாவினால் பாதிக்கப்படுவர்கள் எண்ணிக்கையானது 3 ஆயிரத்தை கடந்து செல்கிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 60 ஆயிரத்தையும், உயிரிழப்பு 2 ஆயிரத்தையும் நெருக்கியுள்ளது. கொடிய வைரசான கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு உள்ளனர்.

இந்த நிலையில் இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் பற்றி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் ரந்தீப் குலேரியா பேசுகையில், ஊரடங்கு கடுமையாக்கப்பட்டு 40 நாட்களை கடந்த பின்னரும் புதிய பாதிப்புகளிலிருந்து குறைந்துவரும் போக்கை இந்தியா இன்னும் காணவில்லை.

இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு சீரான வேகத்தில் அதிகரித்து வருகிறது. சில நேரங்களில் மட்டும் அதிகமாகிறது. இருப்பினும், இன்னும் உச்சத்தை எட்டவில்லை. ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் உச்சக்கட்டத்தை எட்டும். எனவே நாம் அதை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டியது உள்ளது.

சிவப்பு மண்டலங்கள் மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகளில் முழு ஊரடங்கு தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட வேண்டும். இத்தாலி, சீனா போன்ற நாடுகளில் ஊரடங்கு எப்படி கடுமையாக கடைப்பிடிக்கப்பட்டதோ, அதேபோன்று கடைப்பிடிக்கப்பட்டால் தான் அதில் உள்ள நன்மைகளை ஒரு மாதத்துக்குப் பிறகு காண முடியும். ஊரடங்கின் பயனை காலப்போக்கில் தான் தெரிந்துக்கொள்ளலாம்.

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் அதிகமான பரிசோதனை ஆகும். எனவே, கொரோனாவை கட்டுப்படுத்த உடல் நலம், பொருளாதாரம் போன்றவற்றை கருத்தில் கொண்டு, இதுபற்றி கவனமாக விவாதித்து இன்னும் சில காலம் ஊரடங்கை தொடர வேண்டும் என தெரிவித்து உள்ளார்.

‘அனைவரும் கொரோனா வைரசுடன் வாழ கற்றுக்கொள்ளுங்கள்…’ மத்திய அரசு அறிவுறுத்தல்!