இந்தியாவில் கொரோனா பாதிப்பு 60 ஆயிரத்தை நெருங்கியது; 24 மணி நேரங்களில் 95 பேர் சாவு, 3320 பேர் பாதிப்பு…

Read Time:3 Minute, 22 Second

இந்தியாவில் கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1981 ஆக உயர்ந்து உள்ளது. கடந்த 24 மணி நேரங்களில் 95 பேர் உயிரிழந்து உள்ளனர்.


மராட்டியம், தமிழகம், குஜராத் மற்றும் மேற்கு வங்காளத்தில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.


இந்தியாவில் 10 ஆயிரத்திற்கும் மேலான கொரோனா பாதிப்புகளை கொண்டுள்ள ஒரே மாநிலமான மராட்டியத்தில் 700க்கும் அதிகமானோர் உயிரிழந்து உள்ளனர்.


இந்தியாவில் கடந்த சில தினங்களாக 3 ஆயிரத்துக்கும் அதிகமானோரை கொரோனா வைரஸ் தனது வலையில் சிக்க வைத்து வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை நெருங்கி விட்டதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டுள்ள புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், கடந்த 24 மணி நேரங்களில் 95 பேர் கொரோனாவினால் உயிரிழந்து உள்ளனர். புதியதாக 3320 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதனால் பாதிப்பு எண்ணிக்கை 59,662 ஆகவும், உயிரிழப்பு எண்ணிக்கை 1,981 ஆகவும் அதிகரித்து உள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 17847 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகிவிட்டதாகவும், 39834 பேர் கொரோனா தொற்றால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கொரோனாவின் கோரதாண்டவத்தில் சிக்கித் தவிக்கும் மராட்டிய மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 19,063 ஆக அதிகரித்து உள்ளது. பலி எண்ணிக்கை 731 ஆக அதிகரித்து உள்ளது. இதற்கு அடுத்தப்படியாக குஜராத்தில் 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். புதியதாக டெல்லி மற்றும் தமிழகம் 6 ஆயிரத்திற்கு அதிகமானோர் பாதிக்கப்பட்ட மாநிலங்களாக மாறியுள்ளன.

கொரோனா பாதிக்கப்பட்ட மாநிலங்களில் 4-வது இடத்தில் இருக்கும் தமிழகத்தில் புதிதாக 600 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6,009 ஆக உயர்ந்தது.

மாநிலங்கள் வாரியாக பாதிப்பு விபரம்:-

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் – 33
ஆந்திரா – 1,887
அசாம் – 59
பீகார் – 571
சண்டிகார் – 150
சத்தீஷ்கார் – 59
தாதர் நகர் ஹவேலி – 1
டெல்லி – 6,318
குஜராத் – 7,402
அரியானா – 647
இமாச்சலப் பிரதேசம் – 50
ஜம்மு-காஷ்மீர் – 823
ஜார்க்கண்ட் – 132
கர்நாடகா – 753
கேரளா – 503
லடாக் – 42
மத்தியப் பிரதேசம் – 3,341
மகாராஷ்டிரா – 19,063
மேகாலயா – 12
மிசோரம் – 1
ஒடிசா – 271
புதுச்சேரி – 9
பஞ்சாப் – 1,732
ராஜஸ்தான் – 3,579
தமிழ்நாடு – 6,009
தெலுங்கானா – 1,133
திரிபுரா – 113
உத்தரகண்ட் – 63
உத்தரபிரதேசம் – 3,214
மேற்கு வங்காளம் – 1,678