பாதிப்பு 60 ஆயிரத்தை நெருங்கியது: ‘அனைவரும் கொரோனா வைரசுடன் வாழ கற்றுக்கொள்ளுங்கள்…’ மத்திய அரசு அறிவுறுத்தல்..

Read Time:3 Minute, 43 Second

சீனாவின் உகான் நகரில் உருவான கண்ணுக்கு தெரியாத கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதும் உள்ள 200-க்கும் மேற்பட்ட நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.

இதுவரை இந்த வைரஸ் தொற்று நோயை குணப்படுத்த எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படாததால், கொரோனா பல்வேறு நாடுகளிலும் தனது ஆட்டத்தை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இந்தியாவில் தினந்தோறும் ஆயிரத்துக்கும் குறைவானவர்கள் இந்த கொடூர வைரசால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், திடீரென கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பு 3 ஆயிரத்தை தாண்டி செல்கிறது. இந்தியாவில் இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை நெருங்கிவிட்டது. இந்நிலையில் ‘அனைவரும் கொரோனா வைரசுடன் வாழ கற்றுக்கொள்ளுங்கள்…’ மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இணைச்செயலாளர் லாவ் அகர்வால் டெல்லியில் நேற்று (மே 8) செய்தியாளர்களிடம் பேசுகையில், கொரோனா வைரஸ் தொற்று இரட்டிப்பாகும் காலம், குறைந்து இருக்கிறது. 2 நாட்களுக்கு முன்னர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை இரட்டிப்பாக 12 நாட்கள் ஆனது. இப்போது அது 10 நாட்களில் இரட்டிப்பாகி விடுகிறது. இதற்கு காரணம் கொரோனா வைரஸ் தொற்று குறிப்பிட்ட சில இடங்களில் அதிகமாக ஏற்படுவதாகும்.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கை தளர்த்துவது பற்றி பேசுகிறோம். இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவது பற்றி பேசுகிறோம்.

இருப்பினும் நம் முன்னே ஒரு மிகப்பெரிய சவால் இருக்கிறது. அது, நாம் கொரோனா வைரசுடன் வாழ கற்று விட வேண்டும் என்பதாகும். கொரோனா வைரசுடன் வாழ கற்று விட வேண்டும் என்று சொல்கிறபோது, வைரசில் இருந்து நம்மை காப்பாற்றிக் கொள்வதற்கு வழிகாட்டும் நெறிமுறைகளை பின்பற்றுவது மிகவும் முக்கியமானது. சமூகத்தில் நமது நடத்தையில் மாறுதல் வேண்டும். இது மிகப்பெரிய சவால்தான் இதற்கு அரசுக்கு மக்களின் ஆதரவு அவசியமாகும்.

இதுவரை நாட்டில் 216 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை. 42 மாவட்டங்களில் கடந்த 28 நாட்களாக ஒருவருக்கு கூட புதிதாக கொரோனா தொற்று ஏற்படவில்லை.

சென்ற 21 நாட்களில் 29 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கொரோன வைரஸ் தாக்குதல் இல்லை. 14 நாட்களாக 36 மாவட்டங்களில் யாருக்கும் கொரோனா வைரஸ் தொற்று புதிதாக ஏற்படவில்லை. கடந்த 1 வாரத்தில் 46 மாவட்டங்களில் யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு கிடையாது என தெரிவித்து உள்ளார். ஜூன் அல்லது ஜூலையில்தான் கொரோனா வைரஸ் தாக்குதல் இந்தியாவில் உச்சத்துக்கு செல்லும் என்று டெல்லி எய்ம்ஸ் இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா எச்சரிக்கை விடுத்து உள்ளார்.