சிக்கிம் எல்லையில் இந்திய மற்றும் சீன ராணுவ வீரர்கள் இடையே மோதல்…

Read Time:1 Minute, 57 Second

சிக்கிம் எல்லையில் இந்தியா மற்றும் சீனா ராணுவ வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது என தகவல் வெளியாகியுள்ளது.

வடக்கு சிக்கிமில் இந்தியா-சீனா எல்லையில் சனிக்கிழமையன்று பல இந்திய மற்றும் சீன வீரர்கள் மோதலில் ஈடுபட்டனர் என பெயர் தெரிவிக்க விரும்பாத இரண்டு மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர் என இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

இரு தரப்பு படைகள் இடையிலான மோதல்கள் நாகு லா செக்டருக்கு அருகில் நடந்தது என தகவல் வெளியாகியுள்ளது.

எல்லையில் நடைபெற்ற இந்த மோதலில் பல வீரர்கள் காயம் அடைந்து உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சீன வீரர்களுடனான மோதலில் 150 இந்திய வீரர்கள் ஈடுபட்டனர் எனவும் இதில் 4 வீரர்கள் காயம் அடைந்தனர் எனவும் அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார். மறுபுறம் சண்டையில் ஈடுபட்ட சீனப்படையில் 7 பேர் காயம் அடைந்து உள்ளனர் என தெரிவித்து உள்ளார். இருதரப்பு இடையிலான மோதல் தொடர்பான தகவலை ராணுவ தலைமையகம் மறுத்துவிட்டது எனவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்திய மற்றும் சீன வீரர்கள் எல்லையில் மோதலில் ஈடுபடுவது இது முதல் முறையல்ல. 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்திய மற்றும் சீன வீரர்கள் ஒருவருக்கொருவர் கற்களை வீசி தாக்குதலை நடத்தினர். மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான நடைமுறை எல்லைக்கு அருகில் உள்ள லடாக்கிலுள்ள பாங்காங் ஏரிக்கு அருகேயும் மோதல் போக்கு காணப்பட்டது.