கொரோனா வைரசினால் பக்கவாதம்…! சிறுநீரகம், மூளையிலும் ரத்தம் உறைகிறது… பதர வைக்கும் மருத்துவர்களின் தகவல்…!

Read Time:4 Minute, 50 Second

கொரோனா வைரஸ் நோயாளிகளின் நுரையீரல் பகுதியில் வித்தியாசமாக ரத்தம் இல்லாத நிலையை காணப்பட்டுள்ளது.


‘டயாலிசிஸ்’ வடிகுழாய்களில் ரத்தம் கட்டியாக இருந்துள்ளது.


மூளையில் ரத்தம் உறைவு காரணமாக பக்கவாதம் அதிகரிப்பு போன்ற கடினமான நிலை ஏற்பட்டுள்ளது.


கொரோனா வைரசினால் பாதிப்பும், உயிரிழப்பும் அதிகமாகிறது என வெளிப்படையாக தெரியவந்தாலும், அதனால் மனித உடலில் ஏற்படும் பக்க விளைவுகள் என்னவென்று முழுமையாக அறிந்துக்கொள்ள முடியாத நிலையே உள்ளது. பல்வேறு வடிவங்களையும், மரபணுக்களையும் கொண்டிருக்கும் கொரோனா தன்னுடைய வடிவத்தை மாற்றி மனிதர்களை வதைத்து வருகிறது. மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் போராடி வருகின்றனர்.

இதுவரையில் கொரோனா வைரஸ் மனிதனின் உடலில் நுரையீரலில்தான் அதிகமான பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் மேலும் அதிர்ச்சியூட்டும் தகவலாக கொரோனா வைரசினால் பாதிகப்படுபவர்களுக்கு பக்கவாதம் அறிகுறிகள் தென்படுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். மேலும், பாதிப்புக்கு உள்ளானவர்களின் சிறுநீரகம் மற்றும் மூளையில் ரத்தம் உறைவும் சம்பவமும் அரங்கேறியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று நோய் 4,101,536 பேரை தாக்கி உள்ளது. இதுவரையில் வைரஸ் பாதிப்புக்கு 280,435 பேர் உயிரிழந்து உள்ளனர். பாதிப்பிலிருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 1,441,717 ஆக உள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களை அதிகளவில் கொண்டு, முதல் இடத்தில் இருப்பது வல்லரசு நாடான அமெரிக்கா அகும். அமெரிக்காவில் 1,347,309 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 80,037 பேர் பலியாகியுள்ளனர். அதிகமான பாதிப்புக்குள் சிக்கியிருப்பது நியூயார்க் நகரமாகும். அங்கு மட்டுமே 343,409 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 26,771 பேர் மரணித்து உள்ளனர்.

அங்குள்ள மவுண்ட் சினாய் மருத்துவமனையில் மருத்துவர்கள், வைரஸ் தொற்று பற்றியும், தடுப்பு மருந்து தொடர்பாகவும் ஆய்வுகள் மேற்கொள்கிறார்கள். மருத்துவர்கள் கொரோனா நோயாளிகளின் நுரையீரல், சிறுநீரகங்கள் மற்றும் மூளையில் ரத்தம் உறைந்து காணப்படுகிறது. இது, வைரஸ் மனிதனை உயிரிழக்கச் செய்யும் வழிகளில் ஒன்றாக மாறும் என தெரிவித்து உள்ளனர்.

மருத்துவமனையின் நரம்பியல் துறை நிபுணர், மருத்துவர் ஜெ. மொக்கோ கூறுகையில், சில சந்தர்ப்பங்களில் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட இளம் நோயாளிக்கு அதற்கான அறிகுறி பக்கவாதமாக இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த மார்ச் மத்தியிலிருந்து மூன்று வாரங்களில் மூளையில் பெரிய அளவில் ரத்த அடைப்புகளை கொண்ட 32 பக்கவாத நோயாளிகள் மருத்துவமனைக்கு வந்தனர்.

பாதிக்கப்பட்டவர்களில் 5 பேர் மிகவும் இளமையாக இருந்தனர். அவர்களிடம் பக்கவாதம் ஏற்படுவதற்கான வெளிப்படையான ஆபத்தான காரணிகள் எதுவும் தென்படவில்லை. இது மிகவும் ஆச்சர்யம் அளிப்பதாக இருந்தது. இந்த 32 நோயாளிகளில் பாதி பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது என்றார்.

இதற்கிடையே மருத்துவமனையில் பணியாற்றும் பிறதுறை வல்லுநர்கள், மருத்துவமனையில் வென்டிலேட்டர்களில் இருக்கும் கொரோனா நோயாளிகளை கண்காணிக்கும் நுரையீரல் நிபுணர்கள், நோயாளிகளின் நுரையீரல் பகுதியில் வித்தியாசமாக ரத்தம் இல்லாத நிலையை கண்டுள்ளனர். மேலும், சிறுநீரகத்துறை நிபுணர்கள் ‘டயாலிசிஸ்’ வடிகுழாய்களில் ரத்தம் கட்டியாக இருந்ததை கவனித்து உள்ளனர். மூளையில் ரத்தம் உறைவு இருப்பதை கண்டுபிடித்து உள்ளனர். இதனால், பக்கவாதம் அதிகரிப்பு போன்ற கடினமான நிலை ஏற்பட்டுள்ளது என தெரிவித்து உள்ளனர்.