இந்தியாவில் ஊரடங்குக்கு மத்தியிலும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் தீவிரமாக இருந்து வருகிறது. இந்தியாவில் முதல் முறையாக ஒரு நாளில் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கையானது 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்துக்குள் 4,213 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் புதிதாக 97 பேர் கொரோனாவால் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டு உள்ளது. இதன் மூலம் நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 67,152 ஆக அதிகரித்து உள்ளது. நாட்டில் பலியானவர்கள் எண்ணிக்கையும் 2,206 ஆக உயர்ந்துள்ளது என இன்று காலை (மே -11) மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று (மே 10) மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் தொடர்பான தகவல்களை வெளியிட்டது.
அதில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதற்காக நாடு முழுவதும் 483 மாவட்டங்களில் 7.740 இடங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இதில் மத்திய, மாநில, யூனியன் பிரதேச அரசுகளின் கீழ் செயல்படும் மருத்துவமனைகளும், சிறப்பு மையங்களும் அடங்கும். இவை 3 பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டு உள்ளன. அவை அர்ப்பணிக்கப்பட்ட கொரோனா மருத்துவமனை, அர்ப்பணிக்கப்பட்ட கொரோனா சுகாதார மையம், அர்ப்பணிக்கப்பட்ட கொரோனா பராமரிப்பு மையங்கள் ஆகும்.
இவற்றில் மொத்தம் 6 லட்சத்து 56 ஆயிரத்து 769 தனிபடுக்கைகள் போடப்பட்டு உள்ளன.
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு 3 லட்சத்து 5 ஆயிரத்து 567 படுக்கைகளும், கொரோனா தொற்று தாக்குதல் சந்தேகிக்கப்படுகிற நபர்களுக்கு 3 லட்சத்து 51 ஆயிரத்து 204 படுக்கைகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன. ஆக்சிஜன் சிலிண்டர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ள படுக்கைகளின் எண்ணிக்கை 99 ஆயிரத்து 492 ஆகவும், ஆக்சிஜன் பன்மடங்கு வசதி கொண்ட படுக்கைகள் எண்ணிக்கை 1,696 ஆகவும், தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகளின் எண்ணிக்கை 34 ஆயிரத்து 76 ஆகவும் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.