இந்தியாவில் 90 நாட்களில் ஏற்படுத்திய பாதிப்பை 10 நாட்களில் ஏற்படுத்தியது கொரோனா…! பாதிப்பு 67 ஆயிரத்தை தாண்டியது…

Read Time:3 Minute, 1 Second

இந்தியாவில் இதுவரையில் இல்லாத வகையில் ஒரே நாளில் அதிகமான கொரோனா வைரஸ் பாதிப்பு நேரிட்டுள்ளது.


கடந்த 24 மணி நேரங்களில் கொரோனாவினால் புதியதாக 4213 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 97 பேர் உயிரிழந்து உள்ளனர்.


நாட்டில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 67 ஆயிரத்தை தாண்டியுள்ளது.


இந்தியாவில் முதன் முதலாக சீனாவில் இருந்து கேரளா திரும்பிய மருத்துவ மாணவிக்கு கொரோனா தொற்று இருப்பதாக கடந்த ஜனவரி இறுதியில் மத்திய அரசு அறிவித்தது.

இதன் பின்னர் கொரோனா மெல்ல மெல்ல நாடு முழுவதும் ஊடுருவி, கடந்த மாதம் 30-ம் தேதிக்குள் 33,610 பேரை பாதிப்புக்கு உள்ளாகியது. மேலும் இந்த கொடூர நோய்க்கு 1,075 பேர் உயிரிழந்தனர். இந்தியாவில் இவ்வளவு பாதிப்பை ஏற்படுத்த கொரோனா எடுத்துக் கொண்ட காலம் 90 நாட்கள் ஆகும். ஆனால், தற்போது கிட்டத்தட்ட இதே அளவு பாதிப்பை கொரோனா கடந்த 10 நாட்களில் ஏற்படுத்தியுள்ளது.

மே மாதம் 1-ம் தேதி தொடங்கி நேற்று வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 33542 ஆகும். இந்த 10 நாட்களில் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி 1,131 பேர் உயிரிழந்து உள்ளனர். இதன்மூலம் இந்தியாவில் 100 நாட்களில் கொரோனா சுமார் 67 ஆயிரம் பேரை பாதிப்புக்கு உள்ளாக்கி, 2,200-க்கும் அதிகமானோரின் உயிரையும் காவு வாங்கி இருக்கிறது.

இந்தியாவில் நேற்று முதல் இன்று காலை வரையில் கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பு விவரத்தை காலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டது. அதில் 24 மணி நேரத்துக்குள் 4,213 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் புதிதாக 97 பேர் கொரோனாவால் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டு உள்ளது. இதன் மூலம் நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 67,152 ஆக அதிகரித்து உள்ளது.

இந்தியாவில் ஒருநாள் பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டியது இதுவே முதல் முறையாகும்.

பலியானவர்கள் எண்ணிக்கையும் 2,206 ஆக உயர்ந்துள்ளது. 20,916 பேர் இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 44,029 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.