தமிழகத்தில் கொரோனாவினால் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதை அரசு வெளியிடும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் வைரஸ் பரவ தொடங்கியதில் இருந்தே, சென்னையில் அதன் தாக்கம் அதிகமாக உள்ளது.
சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,839 ஆக அதிகரித்து உள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரசினால் புதியதாக பாதிக்கப்படுபவர்கள் மற்றும் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. தலைநகர் சென்னையில் பாதிப்பு தொடங்கியதில் இருந்து அதிகரித்த வண்ணமே உள்ளது பாதிப்பு. தற்போது கோயம்பேடு மார்க்கெட்டை மையமாக கொண்டு சென்னையிலும், தமிழகத்தின் பிறபகுதியிலும் கொரோனா வைரஸ் பரவல் இருக்கிறது.
சென்னை நகரில் நோய்த் தொற்றை கட்டுப்படுத்த அரசு பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்த போதிலும் கொரோனா பரவல் கட்டுப்படுத்த முடியாது செல்கிறது. நகரத்தில் அதிகமான மக்கள் தொகை, குறுகலான தெருக்கள், சமூக விலகலை சரியாக கடைபிடிக்காதது போன்றவையே இதற்கு முக்கிய காரணங்களாக உள்ளது. இதனால் சென்னையில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் சென்னையில்தான் உள்ளனர்.
தமிழகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தை தாண்டி இருக்கிறது.
கொரோனா பாதிப்பு நேற்று (மே 10 மாலை) சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் ஒரே நாளில் 669 பேர் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,204 ஆக உயர்ந்து இருக்கிறது. இதுவரை 1,959 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இன்று (மே-10) மட்டும் 135 பேர் வீடு திரும்பி இருக்கிறார்கள். மருத்துவமனைகளில் தற்போது 5,195 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த 10 நாட்களாக கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது என்பதை அரசின் புள்ளி விபரம் காட்டுகிறது. நகரில் இதுவரை இல்லாத அளவில் கொரோனா தொற்று நேற்று புதிய உச்சத்தையும் எட்டியுள்ளது. தமிழகத்தில் நேற்று பதிவான 669 கொரோனா பாதிப்பில், 509 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். சென்னையில் இதற்கு முன்னதாக கடந்த 8-ம் தேதி 399 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதுதான் இதுவரை அதிக எண்ணிக்கையாக இருந்தது.
ஆனால் நேற்று அதையும் விட அதிகமாக 509 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் நேற்று 19 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. சென்னையில் மட்டும் 1 வயது பெண் குழந்தையும் சேர்த்து 26 குழந்தைகள் உள்பட 509 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களையும் சேர்த்து சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,839 ஆக அதிகரித்து இருக்கிறது.
தமிழகத்தில் நேற்று திருவள்ளூரில் 47 பேரும், செங்கல்பட்டில் 43 பேரும், நெல்லை மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் தலா 10 பேரும், பெரம்பலூரில் 9 பேரும், காஞ்சீபுரத்தில் 8 பேரும், விழுப்புரம் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் தலா 6 பேரும், மதுரை மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களில் தலா 4 பேரும், தேனி மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் தலா 3 பேரும், விருதுநகரில் 2 பேரும், கடலூர், கரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டு உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 3 பேர் நேற்று உயிர் இழந்தனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்தது. இந்நிலையில் இன்று (மே 11) சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இருவர் கொரோனாவிற்கு உயிரிழந்து உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவினால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்து உள்ளது. தமிழகத்தில் இந்த எண்ணிக்கை 49 ஆக அதிகரித்து உள்ளது. கடந்த சில தினங்களாக தமிழகத்தில் சாவு எண்ணிக்கை திடீரென உயர்ந்து உள்ளது.