கொரோனாவுக்கு எதிராக டிரம்பின் அதிசய மருந்து வேலை செய்யாது…! மாறாக மாரடைப்பை ஏற்படுத்துகிறது என ஆய்வில் தெரியவந்தது…!

Read Time:3 Minute, 19 Second

உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் என்ற கண்ணுக்கு தெரியாத அரக்கன் ஆட்டிப்படைத்து வருகிறான். ஒவ்வொருநாளும் இந்த வைரசினால் புதியதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதில் வல்லரசு நாடான அமெரிக்காதான் மிகவும் மோசமான விளைவினை சந்தித்து உள்ளது.

அமெரிக்காவில் மட்டும் இந்த வைரசுக்கு 14 லட்சம் பேர் வரையில் பாதிக்கப்பட்டுள்ளனர். 82 ஆயிரம் பேர் வரையில் உயிரிழந்து உள்ளனர். நியூயார்க் நகரம் மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்டு உள்ளது. கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதும் உலக நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தியது. ஆனால், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், நியூயார்க்கில் வைரஸ் பரவ தொடங்கியதும் பொருளாதாரம் பற்றிதான் அதிக கவலை கொண்டார். இதனால், வைரஸ் தனது கரத்தை வலுப்படுத்தி அந்நாட்டை ஆட்டிப்படைக்கிறது.

இதற்கிடையே டொனால்டு டிரம்ப் தாமாகவே பல்வேறு மருந்துகளை பயனளிக்கும் என பிரசாரம் செய்து வருகிறார்.

மலேரியா காய்ச்சல் வந்தவர்களுக்கு சிகிச்சையின்போது தரக்கூடிய ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள், கொரோனா நோயாளிகளுக்கு வைரசை கொல்வதில் நல்ல பலன் அளிக்கிறது என்றார். அமெரிக்காவில் இதனை பயன்படுத்த ஊக்குவித்தார். ஆனால், அறிவியல் ஆய்வாளர்கள் இதனால் பெரும் விளைவுகள் நேரியுடம், இதயம் தொடர்பான பக்க விளைவுகள் இம்மாத்திரைகளால் அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுத்தனர். ஆனால், டிரம்ப் தன்னுடைய நடவடிக்கையில் உறுதியாக இருந்தார். இதற்கிடையே அமெரிக்காவில் கொரோனா பயத்தில் இந்த மாத்திரைகளை சாப்பிட்டவர்கள் இதய பாதிப்பை சந்தித்து உள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் கொரோனாவுக்கு எதிராக டொனால்ட் டிரம்பின் அதிசய மருந்து வேலை செய்யாது என்பது ஆய்வு முடிவிலும் தெரியவந்துள்ளது. நியூயார்க்கில் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட 1400 பேர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு உள்ளனர். அப்போது ஆண்டிபயாடிக் அஜித்ரோமைசினுடன் இம்மாத்திரைகளை எடுத்துக் கொள்ளப்பட்டாலும் கூட இது குறிப்பிடத்தக்க விளைவை கொண்டிருக்கவில்லை என அந்த ஆய்வு முடிவு தெரிவித்து உள்ளது என ஜர்னல் ஆஃப் தி அமெரிக்கன் மெடிக்கல் அசோசியேஷனில் (JAMA) கட்டுரையில் ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் அஜித்ரோமைசினுடன் சேர்ந்து பயன்படுத்தப்பட்டபோது மாரடைப்பு ஒரு முக்கிய பக்க விளைவாக இருந்து உள்ளது என ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.