தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 8 ஆயிரமாக ஆதிகரிப்பு, கடந்த 10 நாட்களில் மட்டும் பாதிப்பு 3 மடங்காக அதிகரிப்பு…!

Read Time:4 Minute, 4 Second

தமிழகத்தில் நேற்று (மே 11) ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு புதிதாக 798 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.


இதனால் தமிழகத்தில் மொத்தமாக வைரஸ் பாதித்தோரின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 2 ஆக உயர்ந்து உள்ளது.


கடந்த 10 நாட்களில் மட்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு 3 மடங்காக அதிகரித்து உள்ளது.


தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் பிடியில் தலைநகர் சென்னை சிக்கியுள்ளது.

தமிழக சுகாதாரத்துறை நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு புதிதாக 798 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதித்தோரின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 2 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றவர்களில் நேற்று ஒரே நாளில் 92 பேர் குணமடைந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டு உள்ளனர்.

இதுவரையில் குணம் அடைந்து 2 ஆயிரத்து 51 பேர் குணமடைந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டு உள்ளனர் என தெரிவிக்கப்பட்டது.

இதுபோக, தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 4 பெண்கள் உள்பட 6 பேர் நேற்று உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது. இதனால், மாநிலத்தில கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்து உள்ளது.

தமிழகத்தில் நேற்று 17 மாவட்டங்களில் பாதிப்பு காணப்பட்டு உள்ளது. தலைநகர் சென்னையில் 48 குழந்தைகள் உள்பட 538 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். திருவள்ளூரில் 7 குழந்தைகள் உள்பட 97 பேரும், செங்கல்பட்டில் 4 குழந்தைகள் உள்பட 90 பேரும், அரியலூரில் 1 குழந்தை உள்பட 33 பேரும், திருவண்ணாமலையில் 1 குழந்தை உள்பட 10 பேரும், காஞ்சீபுரத்தில் 8 பேரும், மதுரை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் தலா 4 பேரும், தூத்துக்குடி, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் தலா 3 பேரும், தர்மபுரியில் 2 பேரும், வேலூர், விருதுநகர், ராணிப்பேட்டை, பெரம்பலூர், கன்னியாகுமரி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஒருவரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடங்கிய மார்ச் 7-ம் தேதியில் இருந்து ஏப்ரல் மாதம் 30-ம் தேதி வரையில் 2 ஆயிரத்து 323 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆனால், இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 10 நாட்களில் 5 ஆயிரத்து 245 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதாவது 3 மடங்காக அதிகரித்து உள்ளது. இதில் சென்னையில் மட்டும் 3 ஆயிரத்து 114 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தமிழகத்தில் பாதிப்பு தொடங்கியது முதல் சென்னையில் தான் அதிக பாதிப்பு காணப்படுகிறது. கோயம்பேடு மார்க்கெட்டில் கொரோனா பாதிப்பு ஏற்பட தொடங்கிய முதல் செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், அரியலூர் ஆகிய மாவட்டத்திலும் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. சென்னையை போல் இந்த மாவட்டங்களும் மாறிவிடுமோ? என்ற அச்சம் அதிகரித்து உள்ளது.