சீனாவில் இருந்து 20 ஆண்டுகளில் 5 கொள்ளை வைரஸ் நோய்கள்… ‘இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது,” அமெரிக்கா கோபம்…!

Read Time:4 Minute, 6 Second

சீனாவில் 2019 டிசம்பரில் காணப்பட்ட கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் பரவி, மக்களை வேட்டையாடி வருகிறது. வைரஸ் தொற்று பரவலினால் உலக பொருளாதாரமே நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது. இதில் வல்லரசு நாடான அமெரிக்கா தான் மிகவும் மோசமான விளைவினை சந்தித்து உள்ளது.

அமெரிக்காவில் மட்டும் இந்த வைரசுக்கு 14 லட்சம் பேர் வரையில் பாதிக்கப்பட்டுள்ளனர். 83 ஆயிரம் பேர் வரையில் உயிரிழந்து உள்ளனர். கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனாவுடனும், உலக சுகாதார அமைப்புடன் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மோதல் போக்கினைக் கொண்டிருக்கிறார். கொரோனா வைரஸ் சீனாவில் உருவாக்கப்பட்டது எனவும் குற்றச்சாட்டு நிலவுகிறது. ஆனால், இதனை சீனா மறுக்கிறது.

இந்நிலையில் கடந்த 20 ஆண்டுகளில் சீனாவிலிருந்து 5 கொள்ளை நோய்கள் மக்களிடம் பரவியுள்ளது. இது நிறுத்தப்பட்டாக வேண்டும் என அமெரிக்கா கோபம் கொண்டுள்ளது.

இது பற்றி அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ’பிரையன் பேசுகையில், இன்று கொரோனா வைரசுக்கு உலகம் முழுதும் 2,50,000 பேர் இறந்து உள்ளனர். பாதிப்பு எண்ணிக்கையும் 40 லட்சத்தையும் கடந்து விட்டது. கொரோனா வைரஸ் பரவலுக்கும் சீனா தான் முழு காரணம். சீனாவிலிருந்து கிளம்பும் கொள்ளை நோய்களை இனியும் பொறுக்க மாட்டோம் என்று உலக மக்கள் கூறும் நேரம் வந்துவிட்டது.

வைரஸ் சீனாவின் பரிசோதனை கூடங்களிலிருந்து பரவியிருந்தாலும் விலங்குச் சந்தையிலிருந்து பரவியிருந்தாலும் எதுவாக இருந்தாலும் இது நல்லது கிடையாது. கொரோனா உகானிலிருந்துதான் பரவியது, எங்களிடம் இதற்கான சந்தர்ப்ப சூழ்நிலை ஆதாரங்கள் இருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் சீனாவிலிருந்து 5 வைரஸ் கொள்ளை நோய்கள் பரவி உள்ளன. சார்ஸ், ஏவியன் ஃபுளூ, ஸ்வைன் ஃப்ளூ, கோவிட்-19, சீன மக்கள் குடியரசின் இந்த பயங்கரப் பொதுச்சுகாதார நிலையை உலகம் எவ்வளவு நாளைக்கு தாங்கும்…? ஒரு கட்டத்தில் இதை நிறுத்தியாக வேண்டும்.

சீன மக்களுக்கு உதவ எங்கள் மருத்துவ வல்லுநர்களை அனுப்ப உத்தேசித்தோம் ஆனால் அவர்கள் மறுத்தனர். கொரோனா வைரஸ் எங்கிருந்து தொடங்கியது என்பதை தொடர்ந்து ஆராய்ந்து வருகிறோம். இது நிச்சயம் மிகப்பெரிய கவலையான விஷயம். ஆனால் எப்போது கண்டுபிடிக்கப்படும் என்பதற்கான கால அளவை நான் அளிக்க முடியாது.

சீனா தங்களது பொது சுகாதாரத்தை எப்படி கையாள வேண்டும் என்பதை தெரிந்துக் கொள்ள வேண்டும். சீனாவிலிருந்து தோன்றும் இதே போன்ற இன்னொரு வைரஸ் பெருந்தொற்று கொள்ளை நோயை உலகம் தாங்கி கொள்ளாது. உலகத்திற்கு நடக்கும் மிகப்பெரிய பயங்கரம் இதுவாகும். அமெரிக்கா மட்டுமல்லாஉலக பொருளாதாரம் முடங்கியுள்ளது. இது முதல் முறையானது கிடையாது கடந்த 20 ஆண்டுகளில் 5-வது முறையாகும்.

இதனை நிறுத்தியாக வேண்டும், இதில் சீனாவுக்கும் உதவி தேஎவைப்படுகிறது. உலகநாடுகளிடமிருந்து சீனாவுக்கு உதவி தேவைப்படுகிறது. மீண்டும் இப்படி ஒன்று நிகழாமல் தடுக்க சீனா தன்னை தயார்படுத்தி கொள்ள உதவ வேண்டும் எனக் கூறியுள்ளார்.