புகை பிடிப்போருக்கு கொரோனாவால் ஆபத்து அதிகம்… உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!

Read Time:4 Minute, 25 Second

உலகம் முழுவதும் கண்ணுக்கு தெரியாத கொலைகார வைரசான கொரோனா வைரசிடம் சிக்கியுள்ளது. இந்த வைரசினால் உலகம் முழுவதும் 2 லட்சத்து 8 ஆயிரம் பேர் வரையில் உயிரிழந்து உள்ளனர். இந்நிலையில் புகை பிடிப்போருக்கு கொரோனாவால் ஆபத்து ஏற்படும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்து உள்ளது.

மனித உடலில் நுரையீரலை தாக்கும் கொரோனா வைரஸ் அங்கு தன்னுடைய எண்ணிக்கையை அதிகரித்து நுரையீரலில் தொற்றை ஏற்படுத்தி நிமோனியாவால் மனிதர்களை கொல்கிறது.
புகை பிடிப்பதிலும், புகைப்பவர்கள் மற்றும் அவர்களை சுற்றியிருப்பவர்களுக்கு முதலில் பாதிக்கப்படுவது நுரையீரல்தான். இதில் கொரோனா வைரஸ் உடனடியாக தீவிரத்தை காட்டுகிறது. புகை காலதாமதமாக தீவிரத்தை காட்டுகிறது.

இப்படியிருக்கையில், தன்னுடைய நண்பனை விட்டு விலகிச்செல்ல கொரோனா வைரஸ் விரும்புமா என்ன…? என்ற கேள்வியே எழும்.

புகை பிடிப்பவர்கள் மற்றும் புகையிலை பயன்படுத்துபவர்கள் கொரோனா வைரஸ் தொற்றில் அதிக ஆபத்தில் உள்ளார்களா? என்ற கேள்விக்கு “அவர்கள் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்குள்ளாக அதிகமாகவே வாய்ப்புள்ளது. ஏனென்றால், விரல்களில் சிகரெட்டுகளை வைத்துக்கொண்டு வாய் பகுதிக்கு கொண்டு செல்வதால், வைரஸ் கையிலிருந்தால் வாய்க்கு செல்வதற்கான வாய்ப்பு அதிகமாகிறது. மேலும் புகை பிடிப்பவர்களுக்கு ஏற்கனவே நுரையீரல் நோய் இருக்கலாம் அல்லது அதன் செயல்திறன் குறைந்து இருக்கலாம். இது நோய்க்கான அபாயத்தை மேலும் அதிகரிக்கச்செய்யும்” எனக் உலக சுகாராத அமைப்பு தெரிவித்து உள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பில் புகை பிடிக்காதவர்களை காட்டிலும், புகை பிடிப்பவர்கள் கடுமையான அபாயத்தில் உள்ளனர் என்பதற்கான ஆதாரங்கள் மிகவும் அதிகமாக உள்ளது.

உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் புகையிலை 80 லட்சத்துக்கும் அதிகமானவர்களை கொல்கிறது. இதில் 70 லட்சத்துக்கும் அதிகமானோர் நேரடியாக கொல்லப்படுகிறார்கள். 12 லட்சம் பேர், புகை பிடிக்காத நிலையில், புகை பிடிப்பவர்களால் வெளியிடப்படுகிற புகையை சுவாசிக்க நேர்ந்து அதனால் ஏற்படுகிற பாதிப்புகளால் உயிரிழக்கிறார்கள். அந்த வகையில் புகை பிடிப்பது, சுவாச நோய்த் தொற்றுகள் மற்றும் சுவாச நோய்களின் தீவிரத்தை அதிகரிக்கிறது.

இதுதொடர்பாக உலக சுகாதார நிறுவனம் ஒரு ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில், புகை பிடிக்காதவர்களுடன் ஒப்பிடுகிறபோது, பீடி, சிகரெட் புகைப்பவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று நோயால் கடுமையான பாதிப்பு ஏற்படுகிறது. கொரோனா வைரஸ் முதன்மையாக நுரையீரலைத்தான் தாக்குகிறது. புகை பிடித்தல் நுரையீரல் செயல்பாட்டை பாதிக்கிறது. இதன் காரணமாக புகை பிடிப்பவர்களால் கொரோனா வைரஸ்களை எதிர்த்து போராடுவது கடினமாகிறது.

இதயநோய், புற்றுநோய், சுவாசநோய்கள், நீரிழிவு ஆகியவற்றுக்கு புகையிலை ஒரு பெரிய ஆபத்து காரணியாக உள்ளது. இப்படிப்பட்டவர்கள் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகிறபோது, மிகுந்த பாதிப்புக்கு ஆளாவார்கள். புகை பிடிப்பவர்கள் கடுமையான பாதிப்பை சந்திப்பதுடன் மரணம் அடையவும் நேர்கிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

புகை பிடிப்பவர்கள் அதை நிறுத்துவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.