சீனாவில் கொரோனா வைரஸ் எப்படி உருவானது…? விஞ்ஞானிகள் புதிய ஆதாரம்

Read Time:3 Minute, 24 Second

நாவல் கொரோனா வைரசின் நெருங்கிய உறவு வைரசை அடையாளம் கண்டுள்ள விஞ்ஞானிகள், இது கொரோனா வைரஸ் இயற்கையாக உருவானது, ஆய்வுக்கூடத்தில் அல்ல என்பதற்கு ஆதாரமாக அமைகிறது என்று கூறி உள்ளனர்.

கொரோனா வைரஸ் தோற்றம்

சீனாவில் 2019 டிசம்பரில் உகான் நகரில் உருவாகி உலகமெங்கும் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் நாவல் கொரோனா வைரஸ் தொற்று பரவி உள்ளது.

இந்த தொற்று உலகம் முழுவதும் 43 லட்சத்து 34 ஆயிரத்துக்கும் அதிகமானோரை பாதித்து உள்ளது. 2 லட்சத்து 90 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கொன்றுள்ளதாகவும் அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் கொரோனா வைரஸ் தொற்று தரவு மையம் தெரிவித்து உள்ளது.

இந்த கொடிய வைரஸ் இயற்கையாக உருவானதா? இல்லை உகான் நகரில் உள்ள வைராலஜி இன்ஸ்டிடியூட்டின் ஆய்வுக்கூடத்தில் உருவாக்கப்பட்டதா என்பதில் பெருத்த சர்ச்சை நிலவுகிறது.

சீனாவின் உகான் நகரில்தான் அந்நாட்டின் வைராலஜி இன்ஸ்டிடியூட்டின் ஆய்வுக்கூடம் உள்ளது. இங்குதான் வைரஸ் செயற்கையாக உருவாக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டு உள்ளது. அங்கிருந்து கசிந்துதான் உலகமெங்கும் பரவிவிட்டது என்று அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது. இதற்கிடையே வைரஸ் இயற்கையாக உருவாகியுள்ளது, செயற்கையாகதான் உருவாக்கப்பட்டு உள்ளது என்ற தகவல்கள் அவ்வப்போது முக்கிய நபர்களால் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் உகான் ஆய்வுக்கூடத்தில் உருவானது அல்ல, இயற்கையாக உருவானதுதான் என்று சீன விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இந்த விஞ்ஞானிகள், வவ்வால்களில் சார்ஸ் கோவ்-2-வின் நெருங்கிய உறவு வைரசை (ஆர்எம்ஒய்என்-02) அடையாளம் கண்டு உள்ளதாக தெரிவிக்கின்றனர். இதுதான், கோவிட்-19 என்று அழைக்கப்படுகிற கொரோனா வைரஸ் ஆய்வுக்கூடத்தில் உருவாக்காமல் இயற்கையாக உருவானதற்கு ஆதாரம் என்று ஆராய்ச்சி நடத்தியுள்ள ஷான்டாங் முதல் மருத்துவ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

‘கரண்ட் பயாலஜி’ பத்திரிகையில் வெளியாகியுள்ள ஆய்வு கட்டுரையில், சமீபத்தில் அடையாளப்பட்ட வவ்வால் கொரோனா வைரஸ் (ஆர்எம்ஒய்என்-02), சார்ஸ் கோவ்-2 வைரசின் நெருங்கிய உறவு வைரஸ், அதில் இதற்கான மரபணு வரிசை காணப்படுகிறது. இந்த வைரசின் ஸ்பைக் புரதத்தின் எஸ்-1 மற்றும் எஸ்-2 துணைக்குழுக்களின் சந்திப்பில், சார்ஸ் கோவ்-2-வைப் போலவே அமினோ அமிலங்களின் செருகல்கள் உள்ளன, கொரோனா வைரஸ் பரிணாம வளர்ச்சியில் இந்த வகையான அசாதாரண செருகும் நிகழ்வுகள் இயற்கையாக நடக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.